தி அக்காலி – விமர்சனம்
நடிப்பு: நாசர், ஜெய்குமார், தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தரணி, பரத் மற்றும் பலர்
இயக்கம்: முகமது ஆசிஃப் ஹமீது
ஒளிப்பதிவு: கிரி மர்ஃபி
படத்தொகுப்பு: இனியவன் பாண்டியன்
இசை: அனிஷ் மோகன்
தயாரிப்பு: பி.யூகேஸ்வரன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
‘ஹாரர் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்’ ஜானரில், முழுக்க முழுக்க வித்தியாசமான திரைப்படம் கொடுக்க வேண்டும் என்ற தாகத்தில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் படம் ‘தி அக்காலி’! இந்த படம் பார்வையாளர்களை திருப்திப்படுத்துகிறதா? பார்க்கலாம்!
முதலில் படத்தின் தலைப்பான ‘தி அகாலி’ என்றால் என்ன என்பதை பார்த்துவிடுவோம். ‘அகாலி’ என்ற சொல் எந்தவொரு மொழிக்கும் சொந்தமானது இல்லையாம்! வெவ்வேறு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட வார்த்தையாம்! இதற்கு “இறப்பே இல்லாதவன் (A DEATHLESS LEGEND)” என்று அர்த்தமாம்! இப்படியாக, படத்தின் தலைப்புக்குப் பின்னால் புதைந்திருக்கும் இத்தகைய விசித்திர விவரங்களைக் கேட்கும்போதே எதிர்பார்ப்பு எகிறுகிறது, இல்லையா! இனி படத்தின் கதை என்ன என்று பார்ப்போம்!
நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருவது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார் போலீஸ் அதிகாரி ஹன்ஸா ரஹ்மான் (ஜெய்குமார்). கல்லறையில் புதைக்கப்படும் சடலங்களை போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தோண்டி எடுத்து, அந்த குழிகளில் போதைப் பொருளைப் பதுக்கி வைக்கிறார்கள் என்ற ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, ஹன்ஸா ரஹ்மான் தலைமையிலான போலீஸ் படை, கல்லறையை தீவிரமாகக் கண்காணிக்கிறது. அப்போது சாத்தானை வழிபடும் குழு ஒன்று அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வது, மனிதர்களை நரபலி கொடுப்பது போன்ற அதிர்ச்சிகரமான விஷயங்களை ஹன்ஸா ரஹ்மான் கண்டுபிடிக்கிறார். இது குறித்து அவர் மேலும் விசாரணை நடத்த முயற்சிக்கையில், உயர் போலீஸ் அதிகாரி விஜய் (தலைவாசல் விஜய்) அவரை தடுக்கிறார். இருந்தும் அவர் விசாரணையில் தீவிரம் காட்டி, சாத்தானை வழிபடும் குழுவின் பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயம், அவர்களின் மர்ம மரணம் போன்றவற்றை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அப்போது அவரைச் சுற்றி பல மர்மமான விஷயங்கள் நடைபெறுகின்றன. இறுதியில் அனைத்து மர்ம முடிச்சுகளையும் அவர் எப்படி அவிழ்கிறார்? அந்த மர்மங்களின் பின்னணியில் இருக்கும் மர்ம நபர் யார்? அவரை ஹன்ஸா ரஹ்மான் கண்டுபிடித்தாரா? இதனால் ஹன்ஸா ரஹ்மானுக்கு என்ன நேர்ந்தது? அதை அவர் சமாளித்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘தி அக்காலி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரி ஹன்ஸா ரஹ்மானாக வரும் ஜெய்குமார், அவரது உயர் அதிகாரி விஜய்யாக வரும் தலைவாசல் விஜய், டொனால்டு மற்றும் செபாஸ்டியன் ஹாலோவே என்ற இரு வேடங்களில் வரும் நாசர், சௌமியாவாக வரும் ஸ்வயம் சித்தா, வின்செண்ட்டாக வரும் வினோத் கிஷன், தாட்சாயினியாக வரும் வினோதினி, செல்வமாக வரும் அர்ஜய், டேவிட்டாக வரும் செல்வம், யாஸ்மினாக வரும் யாமினி, அனிதாவாக வரும் தாரணி, கௌதமாக வரும் பரத், ஈஸாவாக வரும் இளவரசன், விக்கியாக வரும் விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலியாகவே வரும் சபீர் அலி உள்ளிட்ட அனைத்து நடிப்புக் கலைஞர்களும் திரைக்கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான தோற்றத்தில், தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.
சாத்தானை வழிபடுகிறவர்கள் நடத்தும் நரபலி சம்பவங்களை மையமாக வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான ’ஹாரர் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்’ ஜானர் திரைப்படமாக இப்படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் முகமது ஆசிஃப் ஹமீது, அதை வித்தியாசமான முறையிலும் சொல்ல முயற்சித்திருக்கிறார். சாத்தான், பிளாக் மேஜிக் போன்ற அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் உள்ள பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் இப்படம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்படத்தை கவனமாக நகர்த்திச்சென்று, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். எனினும், திரைக்கதையை குழப்பமின்றி, இன்னும் கொஞ்சம் புரியும் விதத்தில் அமைத்திருந்தால், ஏனைய பார்வையாளர்களும் இதை ரசித்திருக்க முடியும்.
கிரி மர்ஃபியின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் கலை இயக்கம், இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பு, அனிஷ் மோகனின் இசை ஆகியவை இயக்குநரின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப இயங்கியிருக்கின்றன.
‘தி அக்காலி’ – ஒருமுறை பார்க்கலாம்!