100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள் உயிர்வாழ முடியாது”: விஞ்ஞானி எச்சரிக்கை!
புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம், விபரீத தொற்று நோய்கள் உள்ளிட்டவை அதிகரித்துக்கொண்டே செல்வதால், அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள் உயிர்வாழ முடியாத நிலைமை ஏற்படும் என்று இங்கிலாந்தை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். மனித உயிரினம் முற்றாக அழிந்து போவதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் பூமியைவிட்டு வெளியேறி வேற்று கிரகத்துக்கு சென்றுவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகின் மிக மூத்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், பூமியில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் கவனித்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தனது ஆய்வின் அடிப்படையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வளி மண்டலத்தில் மாசு ஏற்பட்டு வருவதாலும், பருவ நிலை மாற்றத்தினாலும் பூமிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், பருவ நிலை மாற்றத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் உலக அளவில் மாநாடுகள் நடத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பி.பி.சி.க்கு அளித்த ஆவணப்படம் ஒன்றின் மூலம் ஹாக்கிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம், விபரீத தொற்று நோய்கள் உள்ளிட்டவை அதிகரித்துக்கொண்டே செல்வதால், அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள் உயிர்வாழ முடியாத நிலைமை ஏற்படும். எனவே, மனித உயிரினம் முற்றாக அழிந்து போவதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் பூமியைவிட்டு வெளியேறி வேற்று கிரகத்துக்கு சென்றுவிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “மனிதர்கள் வாழ தகுதியான வேற்று கிரகங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் நிலையில், அங்கு விரைவில் குடியேற மனிதர்கள் முற்பட வேண்டும்” என்றும் அவர் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வேற்று கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்காக ஹாக்கிங்கும், அவரது முன்னாள் மாணவர் கிரிஸ்டோஃபே கல்ஃபர்ட்டும் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.