தருணம் – விமர்சனம்
நடிப்பு: கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பன், பால சரவணன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி, விமல் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: அரவிந்த் ஸ்ரீநிவாசன்
ஒளிப்பதிவு: ராஜா பட்டாசார்ஜி
படத்தொகுப்பு: அருள் இ சித்தார்த்
பாடலிசை: தர்புகா சிவா
பின்னணி இசை: அஷ்வின் ஹேமந்த்
தயாரிப்பு: ‘ஸென் ஸ்டூடியோஸ்’ புகழ் & ஈடன்
பத்திரிகை தொடர்பு: எய்ம் சதீஷ், சிவா
மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியான நாயகன் கிஷன் தாஸும், நாயகி ஷ்ம்ருதி வெங்கட்டும் நட்பாக பழக ஆரம்பித்து காதலிக்க தொடங்குகிறார்கள். அவர்களது பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி, சில தினங்களில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கும் நிலையில், ஷ்ம்ருதி வெங்கட்டின் வீட்டுக்குள் நுழையும் அவரது நண்பர் ராஜ் அய்யப்பன் திடீரென்று இறந்து விடுகிறார். அந்த பிரச்சனையில் இருந்து தனது வருங்கால மனைவியை காப்பாற்ற முயற்சிக்கும் கிஷன் தாஸ், யாருக்கும் தெரியாமல் உடலை அப்புறப்படுத்தவும், ராஜ் அய்யப்பனின் மரணம் தொடர்பாக தங்கள் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும் ஏற்படாத ஒரு சூழலை உருவாக்கவும் முடிவு செய்கிறார்.
கண்காணிப்பு கேமரா, காவலாளிகள், ஆள் நடமாட்டம் என பிஸியாகவே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ராஜ் அய்யப்பனின் உடலை அப்புறப்படுத்தி, கொலை வழக்கில் இருந்து நாயகனும், நாயகியும் தப்பிக்கும் தருணங்களை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே ’தருணம்’.
நாயகன் கிஷன் தாஸ், சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய காவல்படை வீரர் வேடமேற்றிருக்கிறார். அதற்கேற்ற உடலுறுதி மற்றும் மன உறுதியுடன் இருக்கிறார்.ஏராளமான தடைகளைத் தாண்டி இறந்த உடலை அப்புறப்படுத்த அவர் செய்யும் வேலைகள் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டுள்ளன. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகி ஸ்ம்ருதி வெங்கட்,காதலோடும் கனிவோடும் இருப்பதைக் காட்டிலும் பயத்துடனும் பதட்டத்துடனும் இருக்கிற காட்சிகள் அதிகம். எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துவிடுகிறார்.
எதிர்நாயகனாக நடித்திருக்கும் ராஜ் அய்யப்பனின் மீது ரசிகர்களுக்கு கோபம் வரும் அளவுக்கு தத்ரூபமாக நடித்திருக்கிறார்.
நகைச்சுவைக்காக இருக்கும் நண்பர் பாலசரவணன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் ஆகியோர் தங்கள் பணியை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி உழைப்பில் திரைக்கதையில் இருக்கும் பதற்றம் காட்சிகளிலும் நிறைந்திருக்கிறது.
தர்புகா சிவா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அஸ்வின் ஹேமந்த்தின் பின்னணி இசை அளவாக அமைந்திருக்கிறது.
அருள் இ சித்தார்த்தின் படத்தொகுப்பு படம் தொய்வின்றி நகர உதவி செய்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் அரவிந்த் சீனிவாசன். இக்கால இளையோரின் உறவு நிலைகள், அவற்றிலுள்ள நல்லன மற்றும் அல்லன ஆகியவற்றை சுட்டியிருக்கிறார். அவற்றை அழுத்தமாகப் பதிய வைக்க ஒரு கொலை, அதன் பின்னான நிலை ஆகியனவற்றை இதுவரை பார்க்காத வகையில் புதிதாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்.
சிற்சில பலவீனங்களைத் தாண்டி ரசித்துப் பார்க்கும் பல தருணங்களைக் கொண்டிருக்கிறது இப்படம்.
ரேட்டிங்: 3/5