தரமணி – விமர்சனம்

சென்னைக்கு வேலை தேடி வரும் வஸந்த் ரவிக்கு ஒரு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. இந்நிலையில், அஞ்சலியுடன் வஸந்த் ரவிக்கு பழக்கம் ஏற்படுகிறது. அஞ்சலி அங்குள்ள மற்ற பெண்களை போல் மாடலாக இல்லாமல், சாதாரண பெண்ணாக வந்து செல்கிறார். நண்பர்களாக பழகி வரும் அஞ்சலி – வஸந்த் ரவி இடையே நாளடைவில் காதல் வருகிறது. இந்நிலையில், அஞ்சலிக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் அஞ்சலி வஸந்த் ரவியை கழட்டி விடுகிறார்.

அதேநேரத்தில் திருமணமான ஆண்ட்ரியா, அவரது கணவருடனான பிரச்சனையால் பிரிந்து விடுகிறார். இருவரும் பிரியும் சமயத்தில் தான் ஆண்ட்ரியா கருவுற்றிருப்பது தெரிய வருகிறது. அந்த குழந்தையும் வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பிக்க, கணவனைப் பிரிந்து வாழும் ஆண்ட்ரியாவும், அஞ்சலியால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட வசந்த் ரவியும், மழைக்காக ஓரிடத்தில் ஒதுங்கும் போது சந்திக்கிறார்கள்.

மழை நிற்பதற்கு முன்பாக இருவரும் தங்களைப் பற்றியும், தங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றனர். அதன் பிறகு அடுத்தடுது இருவரும் சந்திக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் வஸந்த் ரவி தனது காதலை ஆண்ட்ரியாவிடம் தெரிவிக்கிறார். முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆண்ட்ரியா பின்னர் அவருடன் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்.

முதலில் ஆண்ட்ரியா குறித்த எந்த குறையும் சொல்லாத வஸந்த் ரவி, ஒரு கட்டத்தில் அவளது உடைகள் குறித்தும், ஆண்ட்ரியாவின் போனுக்கு வரும் அழைப்புகள் குறித்தும் கேட்கத் தொடங்குகிறார். இது ஆண்ட்ரியாவுக்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து விடுகிறார்கள். பின்னர் இருவரும் தனது தவறை உணர்ந்து மீண்டும் இணைந்தார்களா? அல்லது அவர்களது வாழ்க்கை வேறு பாதையில் சென்றதா? இவ்வாறாக இருவருக்கும் இடையே நடக்கும் ஊடல், கூடல்.இ காதல் என அனைத்தும் கலந்தது தான் படத்தின் மீதிக்கதை.

வஸந்த் ரவி தனது முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு சில இடங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பது ரசிக்க வைக்கிறது.

அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதையின் தேவைக்கு ஏற்ப அனைத்து விதமாகவும் நடித்து ஆண்ட்ரியா அசத்தியிருக்கிறார். அஞ்சலியின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் சதீஷின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.

தனது ஒவ்வொரு படைப்புகளின் மூலம் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டும் இயக்குநர் ராமின் தைரியத்துக்கு பாராட்டுக்கள். ஒரு இயக்குநரால் இப்படியும் படம் இயக்க முடியும், ஒரு கலைஞனாக தான் பார்த்ததை, தன் கண் முன்னால் நிகழ்ந்ததை அப்படியே படத்தில் காட்டியிருப்பது சிறப்பு. உலக மயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரமும், நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்கத்தையும், அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் சிறப்பாக காட்டியிருக்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்து வகையான இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக உருவாக்கியிருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் புதுமையான உணர்ச்சியை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் சென்னையையும், சென்னையில் வாழும் இளைஞர்கள், அவரது வாழ்க்கை என அருமையாக காட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் `தரமணி’ பார்க்கவேண்டிய இ(ப)டம்.