“நான் நடித்த சிறந்த கதாபாத்திரங்களில் ‘தரமணி’ பாத்திரமும் ஒன்று!” – அழகம் பெருமாள்

எந்த ஒரு படமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற அதன் உறுதுணை கதாபாத்திரங்களின் பலம் மற்றும் அந்த பாத்திரங்களை திறன்பட கையாளும் நடிகர்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. சமீபத்தில் ரிலீசான ‘தரமணி’ படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களால் பேசப்படுபவையாகவும், கொண்டாடப்படுபவையாகவும் அமைந்துள்ளன. அதிலும், நடிகர் அழகம் பெருமாள் ஏற்றுள்ள ரயில்வே போலீஸ் ‘பர்னபாஸ்’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய ஆதரவை பெற்றுள்ளது. இதற்கு இந்த கதாபாத்திர அமைப்பும், இவரது யதார்த்தமான நடிப்புமே காரணம்.

இது குறித்து அழகம் பெருமாள் பேசுகையில், ”எனது சினிமா நடிப்பு வாழ்வில் நான் செய்துள்ள சில சிறந்த கதாபாத்திரங்களில் இந்த ‘பர்னபாஸ்’ கதாபாத்திரம் கண்டிப்பாக ஒன்று. இப்படத்தின் துணிச்சலான கதையையும், எல்லா கதாபாத்திரங்களையும் இயக்குனர் ராம் கையாண்ட விதமும், அவரது தெளிவும் என்னை மிகவும் கவர்ந்தது.

“எனது கதாபாத்திரத்தை அவர் என்னிடம் கூறியபொழுது இவ்வளவு வலிமை இருக்கும் என்றோ, எனது காட்சிகள் மக்களிடையே  இந்த அளவுக்கு சென்றடையும் என்றோ நான் நினைத்துப் பார்க்கவில்லை. படத்தை திரையரங்கில் மக்களோடு பார்த்தபொழுது தான் ராம் மனதில் வைத்திருந்த முழு கதையும் எனக்கு புரிந்தது.

“ராமுடன் பணிபுரிந்தது ஒரு அருமையான அனுபவமாகும். அவரது ‘கற்றது தமிழ்’ படத்தில் நான் செய்த ‘பூபால ராயர்’ கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது. எனக்கு இது போன்ற நினைவில் நிலைத்திருக்கும் கதாபாத்திரங்களை தரும் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் அழகம் பெருமாள்.