ராம் அவர்களே, பெண்ணுரிமை என்பது டாஸ்மாக் கடையில் பெண்ணும் வாடிக்கையாளர் ஆவதல்ல!
இயக்குநர் ராம் அவர்களே!
தங்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘தரமணி’ திரைப்படத்தின் தலைப்பு தற்செயலாக அமைந்திருந்தாலும், படம் பார்த்தவுடன் அதற்கு எதிர்மறையான அர்த்தத்தையே மனதில் உருவாக்கியது என்பதே உண்மை.
பிறப்பிலிருந்து இறப்பு வரை பாலியல் சார்ந்து பெண்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் இருந்தாலும், தற்போதுதான் பெண்கள் படிப்பு, வேலை எனத் தொடங்கி, எந்த கிராமத்திலிருந்தும் வேலை தேடி நகரத்திற்கு வந்து, தங்கி, பணிபுரியும் சூழல் உருவாகியிருக்கிறது. இதில் வாய்ப்புக் கிடைக்கும் இடத்திலெல்லாம் ஆண்களைவிட பல மடங்கு திறமை உள்ளவர்கள் என்று நிரூபித்தும் காட்டி வருகின்றனர்.
‘தரமணி’, பெண்களை உயர்வாகக் காண்பிக்கிறது என்று பரவலாக பேசப்பட்டது. அதன் அடிப்படையில்தான் படத்தைப் பார்த்தேன்.
பெண்கள் குடிப்பது, சிகரேட் பிடிப்பதுதான் முற்போக்கு என்று நினைத்திருக்கிறீர்கள் போலும். அதையே அழகாகவும் காட்டியுள்ளீர்கள். ஆனால், கணவனை விட்டுப் பிரிந்து தனித்து வாழும் பெண் தன் பாலியல் தேவைக்கு என்ன செய்வாள் என்பதையும் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இப்படத்தில் வரும் கதாநாயகி ஆண்ட்ரியாவின் முன்னாள் கணவன் ஓரினச்சேர்க்கையாளர் (GAY) என்று அறிந்ததும் அவனிடம் அமர்ந்து பேசி அவனின் மன ரீதியான உளவியலைத் தெரிந்துகொண்டு விருப்பத்துடன் விடை கொடுக்கிறாள்.
முற்போக்கு பேசுபவளாகவும், சுயமாக வாழ்பவளாகவும், தைரியமாகத் தனது உரிமைக்காக போராடுபவளாகவும், பல இக்கட்டான சூழலிலும் தன்னந்தனியே குழந்தையைச் சிறப்பாக வளர்க்கும் ஆண்ட்ரியா, ஒரு வழிப்போக்கனுக்கு ஆதரவு கொடுப்பதும், பின் அவனுக்காகக் குடித்து விழுந்து கிடப்பது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சி வைத்திருப்பது இயல்பாகவே இல்லை.
ஆண்களுக்கு மட்டும்தான் வருத்தம் வந்தால் குடிப்பது, சிகரேட் பிடிப்பது போல காட்சிகள் காட்டணுமா? அதே வருத்தத்தில் பெண்கள் இச்செயலை செய்தால் என்ன குற்றமா என்று கூட கேள்வியை முன் வைக்கலாம். ஆனால் தவறு யார் செய்தாலும் தவறுதானே.
காதல் என்றாலே குணத்தைப் பார்த்துதான் வரும். ஆனால் பலருக்கு அழகு என்று நினைத்துக்கொள்ளும் தோல், உடலைப் பார்த்து வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு படி மேலே போய், தன் உடலை மூடி மறைக்கும் உடையை அஞ்சலி அணிவதால் கதாநாயகனுக்கு அவள் மேல் காதல் ஏற்படுகிறது. நாயகன் வசந்த் ரவி ஒரு male chauvinist. அஞ்சலி வெளிநாடு செல்ல 3 லட்சம் திருடித் தருகிறான். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்த்து, குற்ற உணர்வில் இருப்பதாகக் கூறுகிறான் நாயகன்.
உண்மையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அவல நிலையைப் பார்த்து தவறை உணர்ந்திருந்தால் வேலைக்குச் சென்று தன்னால் இயன்ற அளவு பணத்தை கொடுக்க முயற்சி செய்திருப்பான். வெளிநாட்டுக்குச் சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் அஞ்சலி கொடுக்கும் காசுக்காகக் காத்திருக்க மாட்டான். இதைப் பார்க்கும்போதே கதாநாயகன் வேலைவெட்டிக்கு போகாத பெரிய சோம்பேறி என்று தெரிகிறது.
கிராமத்திலிருந்து நகரத்தில் வேலை கிடைத்த பலருடைய வாழ்க்கை மறுபடியும் கிராமம் நோக்கியே போவதில்லை. நகரமே நிரந்தரமாகிவிடுகிறது. இவ்வாழ்வின் சூழலே இதற்குக் காரணம். அதேபோலத்தான் அஞ்சலி வெளிநாடு சென்றவுடன் இவளுடைய வாழ்க்கை மாறுவதும் இயல்பே.
நாயகன் வழக்கம் போல காதல் தோல்வியால் தாடி வைத்துக்கொண்டு சமூகம், தன் குடும்பம், தன் முன்னேற்றம் என எதை பற்றியும் கவலைப்படாமல் திரிகிறான். இடையில் ஆண்ட்ரியா நட்பு கிடைக்கிறது.
ஒரு கட்டத்தில் தன்னால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்து நிற்கும் ஆண்ட்ரியாவுக்கு உதவாமல் விடை பெற நினைக்கிறான். . இது குறித்து கேட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் “நீங்க மட்டும் கிராமத்திலிருந்து ஒரு பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கொண்டு வருவீங்க… நான் மட்டும் ஒரு குழந்தையின் அம்மாவுக்கு வாழ்க்கை கொடுக்கணுமா” என்று கேட்கிறான். பிறகு, தங்கும் வீடு அவளுக்கு ஆறு மாதம் இலவசம் என்று தெரிந்தவுடன் நானும் வருகிறேன் என்று சுயநலமாக ஒட்டிக்கொள்கிறான்.
ஆண்ட்ரியா மனத்தில் இடம் கிடைத்த பிறகு அவனின் உண்மையான கோர முகமும் பிறவி குணமும் வெளிப்படுகிறது.. எதற்கெடுத்தாலும் சந்தேகம், இழிவாகப் பேசுவது எனத் தொடங்கி ஒரு கட்டத்தில் கைகலப்புடன் இருவரும் பிரிகிறார்கள்.
வீட்டைவிட்டு வெளியேறிய நாயகன், பின் ரீ-சார்ஜ் கடைகளிலிருந்து பெண்களின் தொலைபேசி எண்ணை எடுத்து, அவர்களிடம் பேசி வரவழைத்து, பணம் பிடுங்கும் ஒரு காம வெறி பிடித்த சைக்கோவாக செயல்படுகிறான்.
போலீஸ்காரனின் மனைவி கொலை என தொடங்கி, பல பெண்களிடம் பணம் பறித்து, அப்பெண்களின் குடும்ப உறவுகளை சிதைக்கும் நாயகன், ஒரு கட்டத்தில் திருந்தியதாக கூறி வந்தவுடன் காதலி சேர்த்துக் கொள்வராம்.
என்ன கதை இது. சட்டத்தில் குற்றம் செய்தவனுக்குத் தண்டனை கட்டாயம் உண்டு. ஆனால் படத்தின் முடிவில் அயோக்கியனை நாயகன் என்ற ஒரே காரணத்திற்காக, யோக்கியானாக்கி ஏற்றுக் கொள்ள வைப்பதை ஏற்கவே முடியாது.
இயக்குநர் ராம் அவர்களே… இப்படத்தின் மூலம் இச்சமூகத்திற்கு நீங்கள் சொல்ல வரும் கருத்துதான் என்ன…?
- ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் தனித்து வாழ முடியாது என்கிறீர்களா?
- தைரியமாகப் பெண்கள் தன் துணையைத் தேடுவதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?
- ஆண்களின் வார்த்தை ஜாலத்தால் பெண்களை சுலபமாக ஏமாற்றிவிட முடியும் என்பதைச் சொல்ல வருகிறீர்களா?
- ஐடி-யில் வேலை செய்யும் பெண்கள் விடுமுறை நாட்களில் பார் போன்ற இடத்திற்கு சென்று குடித்துவிட்டுக் கூத்தடிப்பார்கள் என்பதை ஆவணப்படுத்த முயல்கிறீர்களா?
- பணியிடங்களில் ஆண் அதிகாரிகள் எல்லோருமே தனக்குக் கீழ் வேலை செய்யும் பெண்களை படுக்க அழைப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துவது நோக்கமா?
- வெளியூரில் வேலை பார்க்கும் கண்வன் வீடுகளில் உள்ள பெண்கள், கண்ட ஆண்களோடு பயணிப்பார்கள் என்பது தான் உங்கள் எண்ணமா?
- நைட் ஷிப்ட் வேலைக்குப் போன பிறகு, மனைவி மற்ற ஆணை வீட்டுக்கு வர சொல்வார்கள் என்பது இயல்பான வாழ்முறை என்கிறீர்களா?
- இந்தப் படத்தை பார்க்கும் உங்கள் பெண் தோழிகள், உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?
- படம் முழுவதும் பாலியல் தொடர்பை வைத்துதான் நகர்த்துகிறீர்கள். இடையில் மட்டும் ஊறுகாயைப் போல சில சமூக கருத்தைச் சொல்கிறீர்கள். வியாபார நோக்கமா?
- எல்லாத் தரப்பு ஆண்களுக்கும் தனித்து வாழும் பெண்களை எப்படி எல்லாம் முயற்சி பண்ணி கரைக்ட் பண்ணலாம் என்ற சமூக ஆலோசனை இந்த படத்தில் சிறப்பாக கொடுத்திருக்கிறீர்கள்.
- முகம் அறியாதவன் போனில் பேசியவுடன், பாலியல் வேட்கையோடு பெண்கள் அவனை தேடிச் செல்கிறார்களா?
- சராசரியான, பெண்களை இழிவுபடுத்தும் வர்த்தகப் படங்களையாவது விஷம் என்று விலகி விடலாம். நீங்கள் மருந்து புட்டியின் பாவனையோடு கொடுப்பது அதனினும் சிக்கல்.
ராம் அவர்களே…
பெண்ணுரிமை என்பது மாறுதலுக்காக ஆண்களைத் தேடிக் கொள்கிற பாலியல் உரிமையல்ல. அதேசமயம், ஒரு ஆணால் வஞ்சிக்கப்படும்போது, அதனை அந்தப் பெண், எதிர்கொண்டு மாற்று ஆணைத் தேர்ந்தெடுக்கிற வாழ்வியல் உரிமை.
பெண்ணுரிமை என்பது டாஸ்மாக் கடையில் பெண்ணும் வாடிக்கையாளர் ஆவதல்ல. குடித்துவிட்டுக் கொடுமைப்படுத்தும் கணவனெனில் விலகி தனியே வாழ முடிவெடுக்கும் சமூக உரிமை.
ஐடி துறையில் பணியாற்றுவோரின் உடைகளும், செயல்பாடுகளும் பழக்க வழக்கங்களும் பணியிடச் சூழல் சார்ந்த, மேற்கத்தியத் தாக்கம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள். பெண்ணியம் சார்ந்தவை அல்ல.
பெண்ணிய உணர்வோடு வாழ்பவரைக் காண வேண்டுமா?
அவகாசம் இருந்தால் என்னோடு வாருங்கள்.
ஸ்ரீபெரும்புதூரில் என் பாட்டி இருக்கிறார், பெண்ணியத்தின் முதிய சாட்சியாக.
Hemavathy Hemavathy Hems
Social Activist