தண்ணி வண்டி – விமர்சனம்
நடிப்பு: உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பாலசரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி மற்றும் பலர்
இயக்கம்: மாணிக்க வித்யா
தயாரிப்பு: ’ஸ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ்’ ஜி.சரவணா
“மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்பார் எழுத்தாளர் ஜி.நாகராஜன். ”மனிதன் அவன் நினைப்பதை காட்டிலும் ஒழுக்கமுடையவன். ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங் கெட்டவன்” என்பார் தத்துவமேதை சிக்மண்ட் ப்ராய்டு. ப்ராய்டின் இந்த வாசகம் ‘தண்ணி வண்டி’ படத்தின் திரையில் காட்டப்படுகிறது. இந்த வாசகத்துக்குப் பொருந்தும் வகையில் தான் இப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. .
மதுரையில் வண்டியில் குடிநீர் கொண்டுசென்று ஊற்றும் வேலைசெய்து வருகிறான் நாயகன் சுந்தரமகாலிங்கம் (உமாபதி ராமையா). அவனுக்கும் லாண்டரி கடை நடத்தும் நாயகி தாமினிக்கும் (சம்ஸ்கிருதி) காதல்.
அந்த பகுதியின் புதிய வருவாய் கோட்ட அலுவலராக (ஆர்.டி.ஓ) பொறுப்பேற்கிறாள் ஒரு பெண் அதிகாரி (வினுதா லால்). இவள் கடமையில் கறார் காட்டும் கண்டிப்பான அதிகாரி. ஆனால் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் நேர்மையில்லாதவள். குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் கண்மூடித்தனமான பேராசை கொண்டவள். பல ஆண்களுடன் ரகசியமாக தொடர்பு வைத்திருப்பவள்.
நாயகி தாமினியின் தோழிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் இந்த பெண் அதிகாரி ஏடாகூடமாக இருப்பதைப் பார்த்துவிடுகிறாள் தாமினி. இதனால் தாமினிக்கும், பெண் அதிகாரிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தாமினியைக் கொல்ல முடிவு செய்கிறாள் பெண் அதிகாரி. தாமினியை காப்பாற்ற முயற்சி செய்கிறான் நாயகன் சுந்தரமகாலிங்கம். இதில் வென்றது யார் என்பது மீதிக்கதை.
நாயகன் சுந்தரமகாலிங்கமாக நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
நாயகி தாமினியாக ’வில் அம்பு’ புகழ் சம்ஸ்கிருதி நடித்துள்ளார். இளமை ததும்பும் அழகாலும், துள்ளல் நடிப்பாலும் ரசிகர்களைக் கவருகிறார்.
திருப்பங்களை ஏற்படுத்தும் பெண் அதிகாரியாக வரும் வினுதா லால் அதிரடியான நடிப்பால் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் நண்பனாக வரும் பாலசரவணன், நாயகனின் அப்பாவாக வரும் தம்பி ராமையா, தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக வரும் தேவதர்ஷினி உள்ளிட்டோர் காமெடி பண்ணி கலகலப்பூட்டியிருக்கிறார்கள்.
ராசு மதுரவன், மனோஜ்குமார், தருண் கோபி ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் மசாலாக்கதையை கையிலெடுத்ததால், தனித்துவம் இல்லாத சராசரி இயக்குனராக அவர் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார். மாத்தி யோசிங்க இயக்குனரே…
மோசஸின் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். எஸ்.என்.வெங்கட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
‘தண்ணி வண்டி’ – தள்ளாட்டம்!