தங்க மகன் – விமர்சனம்

“தனுஷ் படமா…? அப்பா கடுகடு என்றிருப்பார்; மகனாக வரும் தனுஷ் எந்நேரமும் அவருக்கு குடைசல் கொடுப்பார். தலைமுறை இடைவெளி காரணமாக இருவரும் படத்தின் பெரும்பகுதி மோதிக்கொண்டே இருப்பார்கள்” என்கிற நிலைத்துவிட்ட கருத்தை தகர்த்தெறிய வந்திருக்கிறது ‘தங்க மகன்’.
இளைய தலைமுறையைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகும் அப்பாவாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், மூத்த தலைமுறையை எடுத்தெறிந்து பேசாமல் இணக்கமாக நடந்துகொள்ளும் தங்கமான மகனாக தனுஷூம் அழகாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பது இப்படத்தின் முதல் சிறப்பு.
படத்தின் ஆரம்பத்திலேயே தனுஷையும், சமந்தாவையும் கணவன் – மனைவியாகக் காட்டி, இது முழுக்க முழுக்க ஒரு குடும்பக் கதை என்பதை உணர்த்திவிடுகிறார்கள். இதற்குமுன் முழுமையான குடும்பக் கதையில் தனுஷ் நடித்ததில்லை; ஆதலால், இது இப்படத்தின் மற்றொரு சிறப்பு.
அடி-தடி, ஆக்ஷன் என்ற பெயரில் ரத்தச் சேற்றில் உருண்டு புரளாமல், தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் போல வன்முறை காட்சிகள் இல்லாமல் இந்த படம் உருவாக்கப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பு.
இப்படி பல சிறப்புகள் கொண்ட இப்படத்தின் அடிப்படைக் கதை எளிமையானது. சுவாரஸ்யமானது.
வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிகிறார் விஜயராகவன் (கே.எஸ்.ரவிக்குமார்). வயோதிகம் காரணமாக அவருக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறது. ஷூ போட மறந்து சாக்ஸ் காலுடன் அலுவலகத்துக்குக் கிளம்பிவிடுவார். ஸ்கூட்டரில் அலுவலகத்துக்குப் போகிறவர், ஸ்கூட்டரை மறந்துவிட்டு பஸ் பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவார். இப்படிப்பட்ட் விஜயராகவனுக்கு உயரதிகாரியாக இருப்பவர் ஜெயப்பிரகாஷ். முறைகேடாக பணம் சம்பாதிப்பதில் வல்லவரான ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு சி.பி.ஐ. ரெய்டு வரப்போவதாக தகவல் கிடைக்கிறது. பதறிப்போகும் அவர், தன்னிடம் உள்ள ரூ.5கோடி பணத்தை, மிகவும் நாணயமானவரான விஜயராகவனிடம் கொடுத்து வைக்கிறார். சி.பி.ஐ. சோதனை முடிந்தபிறகு தன் பணப்பையை திருப்பிக் கேட்கிறார். ஆனால், பணப்பையை எங்கே வைத்தோம் என்பது விஜயராகவனுக்கு மறந்துபோகிறது. கஷ்டப்பட்டு ஞாபகப்படுத்திப் பார்க்கிறார். ஞாபகம் வரவில்லை. பதைபதைக்கிறார். ஆனால் இதை நம்ப மறுக்கும் ஜெயப்பிரகாஷ், விஜயராகவன் பொய் சொல்லுவதாக நினைக்கிறார். இதனால் விஜயராகவனின் பொறுப்பில் இருக்கும் மிக முக்கியமான ஃபைல் ஒன்றை எடுத்து ஒளித்து வைத்து விடுகிறார். பணத்தை ஒப்படைத்தால் தான் ஃபைல் திரும்பக் கிடைக்கும் என்றும், இல்லை என்றால் ஜெயிலுக்குப்போய் சீரழிய வேண்டியதுதான் என்றும் மிரட்டுகிறார். செய்வதறியாது தவிக்கும் விஜயராகவன் மனம் உடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்கிறார். தன் அன்பான அப்பா தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பதை தெரிந்துகொள்ளும் நாயகன் தமிழ் (தனுஷ்), அப்பாவிடம் இருந்த ரூ.5கோடியை அபேஸ் செய்தது யார் என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார்? பணத்தை எப்படி கைப்பற்றுகிறார்? அப்பா மீது அபாண்டமாக பழி சுமத்தி தற்கொலைக்குத் துரத்திய ஜெயப்பிரகாஷை எப்படி பழி வாங்குகிறார் என்பது மீதிக்கதை.
நாயகன் தமிழ் கதாபாத்திரத்தில் வரும் தனுஷ் தானொரு சிறந்த நடிகர் என்பதை இனிமேல் தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரேமுக்கு பிரேம் தன் திரை ஆளுமையை வலிமையாக பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு பெற்றோரும் இப்படி ஒரு தங்கமகன் வேண்டும் என்று ஏங்கும் அளவிற்கு திரையில் வாழ்ந்துள்ளார். “தமிழ்நாட்டுல இங்கிலீஷ் தோற்கலாம்; ஸ்பானிஷ் தோற்கலாம்; ஜாப்பனிஸ் தோற்கலாம்; ஆனா, தமிழ் தோற்காதுடா” என்று அவர் தன்னையும், தமிழ்மொழியையும் இணைத்துப் பேசும் வசனங்கள் அப்ளாஸை அள்ளுகின்றன.
ஹேமா டிசோசா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் எமி ஜாக்சன். முதல் பாதியில் தனுஷின் காதலியாக வந்து லிப் டு லிப முத்தமழையில் மூழ்கித் திளைக்கிறார். இவர்களின் நெருக்..க்..க்..கமான ரொமான்ஸ் காட்சிகளைப் பார்க்கும்போது இது ‘யு’ படமா? அல்லது ‘யுஏ’ படமா? என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது. காதல் தோல்விக்குப்பின் தனுஷின் அத்தை மகனை மணந்துகொள்ளும் எமி, படத்தின் இரண்டாம் பாதியில் கதை திருப்பத்திற்கு உதவுகிறார். கணவனின் கன்னத்தில் இவர் ஓங்கி அறையும்போது, அதை பலத்த கரவொலியுடன் ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.
பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்தின் மூலம் தனுஷூக்கு மனைவி ஆகும் யமுனா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் சமந்தா. தனுஷூக்கு பொருத்தமான, பொறுப்பான மனைவியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். தன் பிறந்த வீட்டாரால் கணவனுக்கு அவமானம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அம்மாவின் வீட்டில் இருந்து வெளியேறுவது, தனுஷிற்கு முதல் காதலி இருப்பது தெரிந்தும் ஜாலியாக அரட்டை அடிப்பது… என இந்த படத்தில் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்திற்கு பிறகு நல்ல கேரக்டர் சமந்தாவுக்கு. வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.
நக்கலான வில்லனாகவும், காமெடியனாகவும் இதுவரை திரையில் தோன்றியிருக்கும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இதில் அப்பாவியான அப்பா வேடம். மனிதர் ஜமாய்த்திருக்கிறார். அவருக்கு மனைவியாக வரும் ராதிகா சரத்குமார் தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.
தனுஷின் நண்பன் கதாபாத்திரத்தில் வரும் சதீஸ் கலாய்ப்பது, கவுண்ட்டர் கொடுப்பது என இன்னொரு சந்தானமாக இதில் முன்னேறி இருக்கிறார். கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனுஷையே கலாய்த்து, படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறார். தனுஷின் அத்தையாக சீதா, அத்தை மகனாக அரவிந்த், வருமானவரித் துறை அதிகாரியாக ஜெயப்பிரகாஷ், அவருக்கு ஜால்ரா போடும் அலுவலராக எம்.எஸ். பாஸ்கர் என அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கதையை இயல்பு கெடாமல், யதார்த்தமாக நகர்த்திச் செல்வதில் இயக்குனர் வேல்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். எனினும் கதையில் முடிச்சுப் போடுவது, அதை அவிழ்த்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது என்ற விஷ்யத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி திரைக்கதை அமைத்திருந்தால், படத்தின் இரண்டாம் பாதியும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
அறிமுக ஒளிப்பதிவாளர் குமரனின் ஒளிப்பதிவும், தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத்தின் இசையும் படத்துக்குப் பெரும்பலம். அனிருத் இசையில் ‘என்ன சொல்ல’, ‘ஜோடி நிலவே’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
‘தங்க மகன்’ – தங்கமான தமிழ் மகன்!