தங்கலான் – விமர்சனம்
நடிப்பு: விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, டேனியல் கால்டகிரோன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அர்ஜுன், ப்ரீத்தி கரன், முத்துக்குமார் மற்றும் பலர்
இயக்கம்: பா.ரஞ்சித்
ஒளிப்பதிவு: ஏ.கிஷோர் குமார்
படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு: ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா & நீலம் புரொடக்ஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: குணா & யுவராஜ்
’அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ’கபாலி’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற வித்தியாசமான படங்களை வெற்றிப்படங்களாகப் படைத்தளித்த தனித்துவமான இயக்குநர் பா.ரஞ்சித்தும், ‘சேது’, ‘அன்னியன்’, ‘ஐ’ போன்ற பல படங்களில் உடலை வருத்தி தோற்றத்தை அடியோடு மாற்றி வியக்க வைத்த ‘ நடிப்பு இமயம்’ விக்ரமும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்ற தகவல் வெளியானதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த படத்துக்கு பட்டியல் சாதியான ’பறையர்’ சாதியின் உட்பிரிவு ஒன்றின் பெயரும், அந்த உட்பிரிவின் தலைவரது பட்டப்பெயருமான ‘தங்கலான்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டதும், கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாகக் கொண்ட ‘கேஜி எஃப்’ என்ற பிளாக்பஸ்டர் திரைப்படம் வெளியாகி, அதன் வெற்றியில் இந்தியத் திரைத்துறையே ஆடிப்போயிருந்த சமயம், அந்த கோலார் தங்க சுரங்கம் உருவாவதற்கு முன்னோடிகளாக இருந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் பற்றிய படம் தான் ’தங்கலான்’ என்ற தகவல் கசிந்ததும், எதிர்பார்ப்பு அதிகரித்தது. விக்ரமின் மாறுபட்ட தோற்றத்துடன் வெளியான ஃபர்ஸ்ட்லுக், இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. இப்படத்தின் டீசர், பாடல்கள், டிரைலர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்த நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு தென்னிந்தியாவின் பல நகரங்களுக்குப் பயணித்து மேற்கொண்ட பிரமாதமான புரொமோஷன் நிகழ்ச்சிகள் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக எகிறச் செய்தது. சமீபத்திய எந்த தமிழ் திரைப்படத்துக்கும் இல்லாத அளவுக்கு, ரசிகர்கள், திரைத்துறையினர், விமர்சகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத எதிர்பார்ப்புக்கு இடையே தற்போது ‘தங்கலான்’ உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த இமாலய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
இப்படம் முடிந்து ரோலிங் டைட்டில்ஸ் ஓடும்போது, 1909-ல் வெளியான எட்கர் தர்ஸ்டனின் ’Castes and Tribes of Southern India’ என்ற ஆராய்ச்சி நூலிலிருந்து எடுக்கப்பட்ட – இக்கதைக்குத் தொடர்புடைய – சில நிஜ மனிதர்களின் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. இதன்மூலம் இப்புனைவுப் படக்கதைக்கு வரலாற்று ஆதாரமும் இருக்கிறது என்பது உறுதியாகிறது.
1850களில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வேப்பூர் என்ற குக்கிராமத்தில், சிறிய பூர்வ வேளாண்குடி இனக்குழுவின் தலைவர் தங்கலான் (விக்ரம்), தனக்குச் சொந்தமான சின்னஞ்சிறு நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு, தன் மனைவி கெங்கம்மாள் (பார்வதி) மற்றும் குழந்தைகளுடன் குடிசையில் வாழ்ந்து வருகிறார். கதை சொல்லுமாறு வற்புறுத்தும் தன் குழந்தைகளுக்கு, தொலைதூரத்தில் தெரியும் ஆனைமலைக்கு அந்தப்பக்கம் உள்ள பகுதியில் (இப்போதைய கோலார் பகுதியில்) பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மூதாதையர்கள் தங்கம் எடுத்ததையும், அப்பகுதியைக் காவல் காத்த ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற நாகர்குலப் பெண் அவர்களைத் தடுத்ததையும், அவரை தனது முன்னோரான காடயன் வெட்டி வீழ்த்தி, சோழ மன்னருக்கு தங்கம் எடுத்துக் கொடுத்ததையும் உணர்ச்சிகரமான கதையாகச் சொல்கிறார்.
இதற்கிடையில், தங்கலான் மற்றும் அவரது இனக்குழு மக்களின் துண்டு நிலங்களையும் முறைகேடாக அபகரித்துக்கொள்ளும் ஓர் ஆதிக்க சாதி ஜமீன்தார் (முத்துக்குமார்), அவர்களை அவர்களுடைய நிலங்களிலேயே அடிமைகளாக உழைக்க வைத்து, அவர்களது உழைப்பைக் கொடூரமாகச் சுரண்டி உறிஞ்சுகிறார். இச்சமயத்தில் கிளெமெண்ட் (டேனியேல் கால்டகிரோன்) என்ற பிரிட்டிஷ் அதிகாரி அக்கிராமத்துக்கு வருகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கலானின் மூதாதையர்கள் தங்கம் எடுத்த அதே பகுதியில் தனக்கு தங்கம் எடுத்துக் கொடுத்தால், அதில் பங்கு தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைக்கிறார்.
ஜமீன்தாருக்கும், ஆதிக்க சாதியினருக்கும் அடிமைப்பட்டுக் கிடப்பதைவிட, பிரிட்டிஷ் அதிகாரியின் பேச்சைக் கேட்டு அவருக்கு உதவினால், நமது அடிமை விலங்கு தகர்ந்து, மேன்மையான வாழ்க்கை வாழலாம் என்று நம்பும் தங்கலான், தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த கங்கு பட்டர் (பசுபதி), வரதன் (ஹரி கிருஷ்ணன்) உள்ளிட்ட சிலரை அழைத்துக்கொண்டு ஆனைமலை நோக்கி கால்நடையாக நெடும்பயணம் புறப்படுகிறார். செல்லும் வழியில் ராட்சத நாகங்களாலும், கரும்புலிகளாலும் ஆபத்து ஏற்படலாம் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார். மேலும், தங்கத்தைப் பாதுகாக்கும் ஆரத்தி என்ற ஆவியால் உயிருக்கே ஆபத்து வரலாம் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறார்.
இப்படியிருக்க, தங்கம் தேடிச் செல்லும் தங்கலான் குழுவினர் எத்தகைய துன்பங்களையும், இடையூறுகளையும் சந்தித்தார்கள்? ஆவியாக உலவும் ஆர்த்தி, அவர்களை என்ன பாடு படுத்தினார்? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா, இல்லையா? அவர்கள் நம்பியதற்கு மாறாக பிரிட்டிஷ்காரர்கள் அவர்களை எப்படி நடத்தினார்கள்? அதை தங்கலான் குழுவினர் எப்படி எதிர்கொண்டார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘தங்கலான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
தங்கலான் என்ற நாயகக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். நீளமாய் வளர்ந்த தாடி, மீசை, தலைமுடியுடன், சட்டை அணியாமல், இடுப்பிலிருந்து முழங்கால் வரையிலான வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, அழுக்குப் படிந்த திறந்த உடம்புடன், அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே உருமாறிய தோற்றத்தில் ஏறக்குறைய படம் முழுக்க தோற்றம் தருகிறார். மட்டுமின்றி நடை, முகபாவனை உள்ளிட்ட உடல்மொழியை இதற்குமுன் இல்லாத வகையில் முழுமையாக மாற்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தி, தன் கதாபாத்திரத்துக்கு சரியான இமேஜையும் உயிர்ப்பையும் கொடுத்திருக்கிறார். அதிரடி ஆக்ஷன் மற்றும் ஆக்ரோஷமாக வசனம் பேசுவது உள்ளிட்ட ஒவ்வொரு காட்சியிலும் அவர் கொட்டியிருக்கும் கடின உழைப்பும், மெனக்கெடலும் அசாத்தியமானது. மனைவியைக் கொஞ்சி ரொமான்ஸ் செய்வது, மனைவி ஆசைப்பட்டுக் கேட்ட ஜாக்கெட் வாங்கிக் கொடுத்துவிட்டு, “இதை போட்டுக்கிட்டா என் புள்ளைங்க எப்படி பால் குடிக்கும்? நான் தான் மூத்த பிள்ளை…” என்று நாசூக்காக ஏ ஜோக் அடிப்பது என சரச சல்லாப நடிப்பிலும் பிச்சு உதறியிருக்கிறார். தங்கலானாக மட்டும் அல்ல, காடையன், தங்கலானின் கொள்ளுத்தாத்தா அரசன், ஆரண், ஆரத்தியின் கணவர், ஆதிமுனி, நாகமுனி என பல பரிமாணங்களில் அவர் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பது அருமை. விக்ரமை விட்டால் இப்படத்தில் இத்தனை அற்புதமாக வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது எனும் அளவுக்கு நடிப்பில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார். இந்த படத்தில் நடித்ததற்காக ஒன்றிய அரசின் தேசிய விருது மட்டுமல்ல, உலக அளவிலான பல உயரிய விருதுகளும் அவருக்கு நிச்சயம் கிடைக்கும். கிடைக்க வேண்டும். பாராட்டுகள்; வாழ்த்துகள் விக்ரம்!
நாயகனின் மனைவி கெங்கம்மாளாக பார்வதி நடித்திருக்கிறார். அவரது திரையுலக வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத கதாபாத்திரம் இது. பின்னி பெடலெடுத்திருக்கிறார். நடிப்பில் விக்ரமுக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்று பெரிய களேபரமே செய்திருக்கிறார். கோபம், ஆக்ரோஷம், அழுகை, ஆனந்தம், கிண்டல், ஆட்டம் பாட்டம் என எல்லா உணர்வுகளையும் நுணுக்கமாகப் பிரதிபலித்து, பார்வையாளர்களுக்கு சிறப்பாகக் கடத்துவதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.
ஆரத்தி என்ற வீரம் மிக்க தனித்துவமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், அச்சுறுத்தும் காட்சிகளிலும் மிரட்டலாக நடித்து, தனது கதாபாத்திரத்துக்கு முழுமையாக நியாயம் செய்திருக்கிறார்.
பிரிட்டிஷ் அதிகாரி கிளெமெண்ட் ஆக வரும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், ராமானுஜரின் கோட்பாடுகளை ஏற்று பூணூல் அணிந்துகொண்டு வைகுண்டத்துக்குப் போக ஆசைப்படும் கங்கு பட்டராக வரும் பசுபதி. வரதனாக வரும் ஹரி கிருஷ்ணன், அசோகனாக வரும் அர்ஜுன், அரசனியாக வரும் ப்ரீத்தி கரன், ஜமீன்தாராக வரும் முத்துக்குமார் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி, அதற்கு தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை பா.ரஞ்சித் தனது சகாக்களுடன் சேர்ந்து எழுதியிருக்கிறார்; என்றாலும், அரசியல் ரீதியாகவும், மேக்கிங் ரீதியிலாகவும் இது முழுக்க முழுக்க பா.ரஞ்சித் படம் என்றால் மிகையாகாது. வியாபாரம் செய்ய இந்தியாவுக்கு வந்த ’பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி’ இங்குள்ள சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அரசியல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய 1800களில், வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட பூர்வகுடி மக்கள், கற்பாறைகளையும் கட்டாந்தரையையும் வெட்டி கடும் உழைப்பைச் சிந்தி தங்கம் எடுப்பதற்காக கோலாருக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரத்தமும் சதையுமான வரலாற்றை அடிப்படையாக வைத்து, நிறைய ஆராய்ச்சிகள் செய்து தகவல்கள் திரட்டி, அவற்றோடு தொன்மங்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும், ஃபேண்டஸி மற்றும் மாய யதார்த்தவாதக் காட்சிகளையும் இணைத்து, நிஜ மற்றும் புனைவுக் கதாபாத்திரங்களைப் படைத்து, சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். சாதி ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களின் துயர வாழ்வியலையும், இம்மண்ணும் மண்ணின் வளங்களும் உழைக்கும் மக்களுக்கே சொந்தம் என்ற கருத்தியலையும் தனது முந்தைய படங்களை விட இதில் இன்னும் உரக்கச் சொல்லியிருக்கிறார். அதற்காக கலை அம்சங்களை அவர் கை நழுவ விடவில்லை என்பது போற்றுதலுக்கு உரியது. இப்படியொரு சமூக பிரஞ்ஞையுடன் கூடிய கலைப் படைப்பை சிறப்பாக உருவாக்கியதற்காக பாராட்டுகள் ரஞ்சித். அவருடைய தனித்துவமான வெற்றிப்படங்களின் பட்டியலில் ‘தங்கலான்’ படமும் நிச்சயம் இடம் பெறும்.
படத்தின் இன்னொரு நாயகன் என்றால், அது சந்தேகத்துக்கிடமின்றி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தான். மனுசன் புகுந்து விளையாடியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் அருமை. அதிலும் ‘மினுக்கி மினுக்கி’ பாடல் ஏற்கெனவே பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. பின்னணி இசையில் – படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை – பெரிய ராஜாங்கமே நடத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, செல்வா ஆர்.கே-வின் படத்தொகுப்பு, எஸ்.எஸ்.மூர்த்தியின் கலை இயக்கம், ’ஸ்டன்னர்’ சாமின் சண்டை இயக்கம் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் அனைத்தும், இப்படத்தின் நேர்த்திக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
‘தங்கலான்’ – நடிகர் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா ஆகியோரின் தங்க மகுடங்களில் தலா மற்றுமொரு வைரக்கல்! அவசியம் பார்த்து, ரசித்து, கொண்டாடுங்கள்.