”தங்கலான்’ படத்தில் விக்ரம் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க இங்கு வேறு யாரும் இல்லை!” – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
பா.ரஞ்சித் இயக்கத்தில், ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் வருகிற (ஆகஸ்டு) 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாவதையொட்டி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா பேசுகையில், ” ஒரே தருணத்தில் ‘தங்கலான்’, ‘கங்குவா’, ‘வா வாத்தியார்’ போன்ற படங்களை தயாரிப்பதற்கு காரணம் எனக்கு பக்கபலமாக மனைவி நேகா இருப்பது தான். இவரைத் தொடர்ந்து தனஞ்செயன், ராஜா, தினேஷ் ,சக்திவேலன் என என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த எட்டு, ஒன்பது வருடங்கள் என் வாழ்க்கையில் கடினமான காலகட்டம். இதனை கடந்து வருவதற்கு மிக கடினமாக இருந்தது. இந்த தருணத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்தது ஜஸ்வந்த் பண்டாரி. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவருடன் அபினேஷ் இளங்கோவன், தங்கராஜ், ஜீ.வி.பிரகாஷ், ஏ.எல்.விஜய் ஆகியோரும் உதவினர்.
ஜீ. வி. பிரகாசுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரிடம் ஒரு பணியை கொடுத்து விட்டால், தன் சொந்த பணியாக நினைத்து, தயாரிப்பாளரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவது அவருடைய ஸ்டைல். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய முழுமையான பங்களிப்பை அளித்திருக்கிறார். படத்திற்கு அற்புதமான பாடல்கள் வழங்கி இருக்கிறார். படத்தின் பின்னணி இசையை நான் இதுவரை கேட்கவில்லை. அத்துடன் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் முறையாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்திருக்கிறது. இதற்கு இயக்குநர் பா.ரஞ்சித் தான் காரணம்.
இந்த படத்தில் பார்வதி – மாளவிகா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள் இருவரும் இரு வேறு எதிரும் புதிருமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை நான் பார்த்தபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. இந்தப் படத்துடன் ஸ்டுடியோ கிரீன் இணைந்து இருப்பதால் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆகஸ்ட் 15 எங்களுக்கு மறக்க முடியாத நாள். ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு முன் ‘அட்டக்கத்தி’ எனும் திரைப்படம் இந்த நாளில் தான் வெளியானது.
பா. ரஞ்சித் தற்போது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் ஏராளமானவர்களுக்கு அடையாளத்தை உருவாக்கித் தருகிறார். இசைக் கலைஞர்களுக்கும் அவர் தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அவருடைய சமுதாய சிந்தனையும், சினிமா மீது இருக்கும் அவருடைய காதலும்.. இன்னும் மிக வீரியமான படைப்பினை அவர் வழங்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
விக்ரம் – அவருடைய பயணமானது மிகவும் கடினமானது. ஆனால் எந்த இடத்திலும் அவர் நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டதில்லை. சினிமா- ஒரு கடினமான விடயம் என்று எப்போதும் வெளிப்படுத்துவதில்லை. இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். ‘இந்த வேலையை செய்வதற்கு வேற ஆள் கிடையாது’ என்று. அது விக்ரமுக்கு பொருத்தமானது. உண்மையை சொல்லப்போனால் இந்த படத்தில் விக்ரம் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இங்கு வேறு யாரும் இல்லை. இந்த படத்தில் அவருடைய கடின உழைப்பிற்கு அவர் இன்னும் கூடுதலான உயரத்தை தொடுவார். இதைவிட சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். அவருடைய நடிப்பில் உலக சினிமாவை ஒரு ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவார் என நம்புகிறேன். ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன். பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாக பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். ரசிகர்களாகிய நீங்கள் பாருங்கள். கேளுங்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா- இயக்குநர் பா. ரஞ்சித் -நடிகர் விக்ரம் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் கொடுத்த இந்த வாய்ப்பினை நான் சிறப்பாக பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். விக்ரமுடன் ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘தங்கலான்’ படத்தில் இணைந்திருக்கிறேன்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் மிகப் பெரிய கனவு படைப்பு இது. இதில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஞானவேல் ராஜா- அவருடன் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படம் அவருக்கு சிறந்த தங்கமாக அமையும். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.