தண்டேல் – விமர்சனம்

நடிப்பு: நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சந்து மொண்டேட்டி
ஒளிப்பதிவு: ஷ்யாம் தத் (ஐஎஸ்சி)
படத்தொகுப்பு: நவீன் நூலி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பு: கீதா ஆர்ட்ஸ்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் இதற்குமுன் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதன் விளைவாக, காதலுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த ‘தண்டேல்’ திரைப்படத்திலும் அதே ஜோடி இணைந்து நடித்துள்ளது. ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் போல இதுவும் பிரமாண்ட ஹிட் அடிக்குமா? பார்க்கலாம்…
‘தண்டேல்’ என்ற தெலுங்குச் சொல்லுக்கு ‘தலைவன்’ என்று பொருள். இப்படத்தில் ‘மீனவத் தலைவன்’ என்ற அர்த்தத்தில் இத்தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

நாயகன் ராஜுவும் ( நாக சைதன்யா), நாயகி சத்யாவும் (சாய் பல்லவி) நெருக்கமான பால்ய சினேகிதர்களாக இருந்து, உயிருக்கு உயிரான காதலர்கள் ஆனவர்கள். இருவரது குடும்பங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் வசிக்கும் மீனவக் குடும்பங்கள்.
தங்கள் குடும்பப் பாரம்பரியப்படி, நாயகன் ராஜு ’மீன் வேட்டை தொழில்’ செய்து வருகிறார். (மீன் பிடிக்கும் தொழிலை ‘மீன் வேட்டை தொழில்’ என்று தான் படத்தில் சொல்லுகிறார்கள்.) மேலும், ஆந்திராவிலிருந்து குஜராத்துக்கு ரயிலில் போய், அங்குள்ள சேட்டுக்காக குஜராத் கடல் பகுதிக்குள் படகில் சென்று கூலிக்கு மீன் பிடிக்கும் ஸ்ரீகாகுளம் மீனவக் குழுவுக்கு ராஜு ‘தண்டேல்’ ஆகவும் இருக்கிறார். இக்குழு ஒரு வருடத்தில் ஒன்பது மாதங்கள் குஜராத் கடல் பகுதியிலும், மீதி மூன்று மாதங்கள் ஆந்திராவில் உள்ள சொந்த ஊரிலுமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
மீன் வேட்டைத் தொழிலுக்காக ஆபத்துகள் நிறைந்த கடலுக்குள் செல்லும் மீனவர்கள் உயிருடன் கரைக்குத் திரும்புவார்கள் என்ற நிச்சயம் இல்லை என்பதால், இத்தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் பார்க்குமாறு ராஜுவிடம் கெஞ்சி மன்றாடுகிறார் அவரது காதலி சத்யா. அவரது நச்சரிப்பைப் பொறுக்க முடியாமல் “சரி” என்று சத்தியம் செய்து கொடுக்கும் ராஜு, ‘தண்டேல்’ என்ற முறையில் அவருக்குத் தெரியாமல் சத்தியத்தை மீறி, மீன் வேட்டைத் தொழிலுக்கு தன் குழுவினருடன் கிளம்பி குஜராத் போய்விடுகிறார். இது தெரிந்து அதிர்ச்சி அடையும் சத்யா, ஆத்திரம் அடைகிறார். ராஜுவுடனான காதலுறவை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார். தனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு தன் அப்பாவிடம் (பப்லு பிருத்விராஜ்) கூறுகிறார். அப்பாவும் ஒரு மாப்பிள்ளையை (கருணாகரன்) பேசி, நிச்சயம் செய்துவிடுகிறார். திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்கிடையே, ராஜு குழுவினரின் படகு குஜராத் கடலுக்குள் சென்று கொண்டிருக்கும்போது பெரும் புயல் வீசுகிறது. அப்போது தன் குழுவைச் சேர்ந்த ஒருவரை ராஜு காப்பாற்ற முயல, அவர்களது படகு புயலில் சிக்கி, திக்குத் தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுகிறது. அவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து சிறையில் அடைக்கிறது.
பாகிஸ்தான் சிறையிலிருந்து ராஜு விடுதலை ஆனாரா? தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் சத்யாவுக்கு திருமணம் நடந்ததா? கிளைமாக்ஸ் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் விடை அளிக்கிறது ‘தண்டேல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் ராஜு கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்திருக்கிறார். மீனவராக நடிப்பதற்காக தன்னை முற்றிலுமாக மாற்றி, முழுமையாக தயார் செய்திருக்கிறார் என்பது அவரது நடை, உடை, பாவனையில் பளிச்சிடுகிறது. காதலில் உருகுவது, காதலியுடன் நெருக்கமாய் பழகுவது, மீனவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன்னால் வந்து தட்டிக் கேட்பது, பாகிஸ்தான் சிறையில் தன் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் காட்சிகளில் அதிரடி காட்டுவது என கமர்ஷியல் மாஸ் ஹீரோவாக படம் முழுவதும் அட்டகாசமான நடிப்பை அருமையாக வழங்கியிருக்கிறார்.
நாயகி சத்யா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். காதலனோடு இருக்கும்போது ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பது, காதலனின் பிரிவில் அவன் நினைவாகவே ஏங்குவது, சத்தியத்தை மீறியதற்காக காதலனைக் கைவிட முடிவு செய்வது, அதே காதலன் பாகிஸ்தானில் சிக்கிக் கிடப்பது தெரிந்து அவனை மீட்கப் போராடுவது, காதலன் இடத்தில் இருந்து மீனவக் குடும்பங்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது என பல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி, அந்த கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்து, ஸ்கோர் செய்திருக்கிறார் சாய் பல்லவி.
பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ் போன்ற தெலுங்கு நடிகர்களுடன், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி, கல்யாணி நடராஜன் போன்ற தமிழ் நடிகர்களும் இணைந்து தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்து கவனம் ஈர்க்கிறார்கள்.
இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சந்து மொண்டேட்டி. சில உண்மைச் சம்பவங்களுடன் சுவாரஸ்யத்திற்காக நிறைய கற்பனை சம்பவங்களைச் சேர்த்து, இன்றைய ஒன்றிய அரசை குளிர்விக்கும் அம்சங்களை அளவுக்கதிகமாகவே தூவி விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். நாயகன் – நாயகி காதல் காட்சிகளை யதார்த்தத்துக்கு நெருக்கமாக வடிவமைத்துள்ள இயக்குநர், பாகிஸ்தான் காட்சிகளை ஏனோ ரொம்பவும் செயற்கையாக அமைத்துவிட்டார். அதனால் படத்தின் இரண்டாம் பாதி பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும், இப்படம் பார்க்கும்போது, மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படம் அவ்வப்போது நினைவில் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை.
ஷியாம் தத் ஒளிப்பதிவில் கடற்கரை காதல் காட்சிகள் அழகோ அழகு, கடல் காட்சிகளும், சிறைக்காட்சிகளும் கூட சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
‘தண்டேல்’ – காதலை உயர்வாகக் காட்டும் உன்னதமான படம்; பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 2.5/5