“மக்களுக்காக அதை திரும்பத் திரும்ப செய்வேன்!” – தமிழச்சி
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி, முகநூல் மூலம் வதந்தி பரப்புவதாக ஆளும் அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக போலீசார், பிரான்ஸில் வசிக்கும் எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான தமிழச்சி மீது கலவரத்தை தூண்டுதல் (153), வெறுப்பை தூண்டுதல் (155/1), வதந்தியை பரப்புதல் (155/2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், “வதந்தி என்பது என்ன?” என்ற தலைப்பில் தமிழச்சி எழுதியுள்ள முகநூல் பதிவு:-
வதந்தி என்பது என்ன?
உண்மை, பொய் என்றுண்டு. அதென்ன வதந்தி? வதந்தி என்பது உண்மையைச் சேர்ந்ததா? பொய்யைச் சேர்ந்ததா?
‘வதந்தி’ என்ற இந்த சொற்களின் பொருட்களில் உண்மையும் இல்லை, பொய்யும் இல்லை என்றால் வதந்தியை எதுவுமற்றது என்ற அர்த்தத்தில் நிறுவ முடியுமா? நிச்சயமாக முடியாது.
வதந்தி என்ற சொற்களில் வரும் வார்த்தைகள் பொருளற்றவையல்ல. அனுமானம், நுணித்துணர்தல் என்பதன் அடிப்படையிலும் வதந்தியின் நம்பகத் தன்மையை ஆராயலாம். அதற்குத்தானே பகுத்தறிவு இருக்கிறது?
ஒரு வதந்தி திட்டமிடப்படுகிறது. அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் அப்படி செய்யத் தூண்டுபவரின் நோக்கம் என்ன? அதற்கான அதிகாரங்களை அவர் வைத்திருக்கிறாரா? அதிகளவு மக்களிடம் அதை கொண்டு செல்ல வேண்டும். ஒரு பதட்டத்தை உருவாக்க வேண்டும். அல்லது ஒரு நல்ல தகவலை பரவலாக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நல்ல தகவல்களை பரப்புவதற்கு வதந்தி தேவைப்படாது. அறிவிப்பு போதும். ஆனால் மறைத்து வைக்கப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன என்றால் சொல்லும் நபர் தன்னை பகிரங்கப்படுத்திக் கொள்ளாமல் அந்த தகவலையும் சொல்ல வேண்டும். என்ன செய்வார்?
…. வந்து…. அது… இது…. என்று ஆரம்பித்து முடிக்க வேண்டும். அவர் சொல்லும் தகவலின் வீரியத்தைப் பொறுத்து அது தீவிரம் அடையும். அது பாதகமா? சாதகமா? என்பது அடுத்த கட்டம். மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மக்களிடம் திகிலைப் பரப்ப வதந்தியை உபயோகித்தார்கள். மக்களாட்சியிலும் அரசியல்வாதிகள் இந்த தந்திரங்களைத்தான் கையாண்டார்கள்.
பத்திரிகையை எடுத்துக்கொண்டால், மக்களுக்கு கிசுகிசு பேசுவதையும், வதந்தி பரப்புவதையும் கற்றுக் கொடுத்தார்கள். உழைக்கும் எளிய மக்களிடம் அதிகார வர்க்கங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் இவை.
எம்.ஜி.ஆர் செத்தபோது தீக்குளித்து இறந்தவர்களில் யாரும் அதிகாரத்தில் இருந்தவர்கள் இல்லை. பாமர மக்கள். எம்.ஜி.ஆர் குறித்து அவர்களிடத்தில் பத்திரிகைகளும், திரைப்படங்களும் உருவாக்கிய பாதிப்புக்கள் அவை.
“எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுடன் காஷ்மீர் பட சூட்டிங்கில் கலந்து கொண்டார். தனியறையில் ஜெயலலிதாவுடன் அல்வா சாப்பிட்டார். எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருப்பதாக பேட்டியில் குறிப்பிட்டார்” என்பார்கள்.
இதில் எது கிளுகிளுப்பு? எது விரக்தி? பத்திரிகை சொல்லும் கிசுகிசு என்ன? என்பது தான் அன்றைய விவாதமாக இருக்கும்.
நடிகர், நடிகையாக இருந்தபோது எழுதப்பட்ட கிசுகிசு, அவர்கள் அரசியல்வாதிகளாகி விட்டால் எப்படி இருக்கும்? அரசியல் களத்திற்கென்று ஒரு விளம்பர பாணியை பத்திரிகைகள் கையாளுகின்றன.
மே 9, 2016-இல் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் கூட்டத்திற்காக ஆள்பிடித்து கொண்டுவரப்பட்ட மக்கள் கூட்டத்தில் 6 பேர் வெயில் தாங்காமல் செத்துப் போனதை ஜெயலலிதா அரசு உடல்நலம் இல்லாமல் செத்துப் போனார்கள் என்று அறிவிக்கச் செய்தது. ஒட்டு மொத்த பத்திரிகைகளும் அதை செய்தன. அரசு அதிகாரத் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, அதுவும் ஒருவகை வதந்திதான். மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளாத யுக்தி.
நேற்று ஒரு செய்தி.
ஒருவர் அட்டாக் வந்து இறந்தார். அவர் அம்மா அபிமானியாம். அம்மாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்து, அட்டாக் வந்து செத்தாராம். எதை எதற்கு முடிச்சு போடுகிறது பத்திரிகைகள்? இது உண்மை தகவலா? பொய்யா? வதந்தி பரப்புகிறார்களா?
இதை குறித்து ஆராய்வதற்கு மக்களுக்கு ஏது அறிவு?
பத்திரிகைகள் ‘கிசுகிசு’ எழுதின. கிசுகிசுவும், வதந்தியும் ஒன்றா? இது பத்திரிகையாளர்களிடையே பட்டிமன்றம் நடத்தலாம்.
‘ஜெயலலிதா என்னை அடித்தார்’ என்று அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா பாராளுமன்றத்தில் கூறியது பொய்யா? உண்மையா? என்பதற்கு கூட மறுப்பு தெரிவிக்காதவர் ஜெயலலிதா. அதே சசிகலா புஷ்பாவை மற்றொரு எம்.பியுடன் பல்வேறு புகைப்படங்களை வெளியிட வைத்து அந்த பெண் எம்.பியை அவமானப்பட வைத்தார் ஜெயலலிதா.
‘சோபன் பாபுக்கு சோறு போடும் ஜெயலலிதா’வின் படத்தையும் சசிகலா புஷ்பா படத்துடன் ஒப்பிட்டு நாம் எழுத ஆரம்பித்தால் அது வதந்தியா? கிசுகிசுவா? என்று பத்திரிக்கைகள் பேசாது. அம்மா மீது அவதூறு என்று செய்தி போடுவார்கள்.
இவ்ளோ தான்டா பத்திரிகைகளின் தர்மம் என்பது நமக்கு தெரிந்ததுதான். அதிலும் ‘தினமலம்’ போன்ற பத்திரிகைகளுக்கு, “தமிழக முதல்வர் குறித்து வதந்தி பரப்பிய பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்ற இலங்கை பெண் மீது வழக்கு” என்று செய்தி.
“இலங்கை பெண்” என்று ‘தினமலம்’ குறிப்பிட வேண்டிய நோக்கம் என்ன? நான் தமிழ்நாடு, பாண்டிச்சேரி என்பது எனது இணையதள குறிப்பில் உள்ள செய்தி. எனது தொடர்பில் உள்ளவர்கள் அறிந்த செய்தி.
பத்திரிகை, வதந்தி குறித்து புகார் செய்தி கூறுகிறது. அதிலேயே ஒரு வதந்தியையும் பரப்புகிறது. அதற்கு பத்திரிகை என்ற அங்கீகாரம். இன்னொரு புறம் எனது பெயர் கேத்ரீன், சுசிலா, உமா போன்ற பல பெயர்களில் என்னை அடையாளப்படுத்த முற்படும் அரசியல் அனானிகளின் அநாகரிகங்கள் என புறக்கணித்து விடலாம். ஆனால் நான் வதந்தி பரப்புவதாக கூறும் பத்திரிகைகள் என்னை குறித்த இன்னொரு வதந்திகளையும் திட்டமிட்டுதான் பரப்புகிறார்கள்.
உண்மையும், பொய்யும், வதந்தியும் நம்மிடையே ஊடுருவி, நம்மிடையே பேச முற்படும் அரசியலை நுணித்துணரவே நானொரு அரசியல் பேச வேண்டி இருக்கிறது. அதற்கான வாய்ப்பை அந்த அரசியலும் அரசுமே எனக்கு ஏற்படுத்துகிறது. எனக்கு கொடுத்த வாய்ப்பை மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்பது எனது எழுத்துப்பணி. மக்களுக்காக அதை திரும்பத் திரும்பச் செய்வேன்.
தமிழச்சி
04/10/2016