கொரோனா கொடூரம்: இயக்குனர் தாமிரா மரணம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தாமிரா மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.

தாமிராவின் இயற்பெயர் ஷேக் தாவூத். திருநெல்வேலி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியில் பிறந்தவர். சென்னை வந்து பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றிய தாமிரா, மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்து, அவரது இணை இயக்குனர் ஆனார்.

இயக்குனர்கள் கே.பாலசந்தர் – பாரதிராஜா நடிப்பில் இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘ரெட்டச்சுழி’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக அறிமுகமான தாமிரா, இயக்குனர் சமுத்திரகனி – ரம்யா பாண்டியன் நடித்த ‘ஆண் தேவதை’ படத்தையும் இயக்கியிருக்கிறார். தவிர, சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட தாமிரா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 07-04-2021 அன்று சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (27-04-2021) காலை 8-20 மணிக்கு மரணம் அடைந்தார்.

தாமிராவின் உடல் மருத்துவமனையிலிருந்து நேராக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தாமிராவுக்கு பஷிரியா என்ற மனைவியும், முகமது ராஷித், இர்ஷாத், ரிஸ்வான் என்ற மூன்று மகன்களும், பவ்ஷியா என்ற மகளும் இருக்கிறார்கள்.

தாமிராவின் மறைவுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, ஷங்கர், சமுத்திரகனி உள்ளிட்ட திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.