தமிழ்க்குடிமகன் – விமர்சனம்
நடிப்பு: சேரன், லால், ஸ்ரீபிரியங்கா, வேல ராம்மூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர், அருள்தாஸ், ரவிமரியா, ராஜேஷ், மயில்சாமி, துருவா, தீப்ஷிகா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: இசக்கி கார்வண்ணன்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
படத்தொகுப்பு: ஆர்.சுதர்சன்
இசை: சாம் சிஎஸ்
தயாரிப்பு: ‘லட்சுமி கிரியேஷன்ஸ்’ இசக்கி கார்வண்ணன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
”இழிவானது என கருதப்படும் குலத்தொழிலை குழி தோண்டி புதை. மட்டுமல்ல, சாதிக்கு சமாதி கட்டு. உன் சாதி என்ன என்று யார் கேட்டாலும், தமிழ்நாட்டில் வாழும் நீ ‘தமிழ்க்குடிமகன்’ என்று சொல்” என்று அறைகூவல் விடுக்கிறது இந்த ’தமிழ்க்குடிமகன்’ திரைப்படம்.
கதை திருநெல்வேலி மாவட்டம் செந்திப்பட்டி கிராமத்தில் நடக்கிறது. இங்கு அம்மா, தங்கை வள்ளி (தீப்ஷிகா), மனைவி பார்வதி (ஸ்ரீபிரியங்கா), மகன் சகிதம் குடும்பத்தோடு வசித்து வருகிறார் சின்னசாமி (சேரன்). சலவைத் தொழில் செய்யும் சேவை சாதியைச் சேர்ந்தவர் அவர். அரசு வேலை பார்க்க வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் போக, உள்ளூரில் யார் இறந்தாலும், அவரது குலத்தொழில் காரணமாக சாவுச் சடங்குகளை செய்யுமாறு அவரை நிர்பந்திக்கிறார்கள். மருத்துவப் படிப்பு படிக்கும் அவரது தங்கை வள்ளிக்கும் அதே சாதியிழிவுக் கொடுமைகள் நடக்கின்றன.
இதனால் சலவைத் தொழிலை விட்டுவிட்டு, தனியாக மாடுகள் வாங்கி பால் வியாபாரத் தொழில் தொடங்குகிறார் சின்னசாமி. ஆனால் அதிலும் சாதியம் அவரை பின்தொடர, அவரிடம் பால் வாங்க பெரும்பாலானோர் மறுத்து விடுகிறார்கள்.
விரக்தியின் உச்சியில் இருக்கும் சின்னசாமியின் தங்கை வள்ளியை, ஆதிக்க சாதியின் பெரிய வீட்டுப்பிள்ளையான கிட்டுவை (துருவா) காதலித்ததாகச் சொல்லி ஊர் பொதுவில் வைத்துக் கொடூரமாகத் தாக்குகிறார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள்.
இந்நிலையில், அதே ஆதிக்க சாதியின் ஊர் பெரியவர் சுடலையாண்டியின் (லால்) தந்தை பேச்சிமுத்து (மு.ராமசாமி) இறந்து போகிறார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய சின்னசாமியை அழைக்கிறார்கள். ஆனால் அதை செய்ய மறுத்து விடுகிறார் சின்னசாமி. இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிக்க சாதியினரான சுடலையாண்டி, அவரது மைத்துனர் இசக்கி (அருள் தாஸ்) மற்றும் ஊர்காரர்கள் சின்னசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஊரைவிட்டுச் செல்லும் சின்னச்சாமி, “நாதியற்ற என்னை சாதியற்றவனாக மாற்றுங்கள்” என்று வழக்குத் தொடுக்கிறார். நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறது? என்பது தான் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் கதை.
தலைமுறை தலைமுறையாக, செய்கிற வேலையைச் சுட்டிக்காட்டி தாழ்த்துகிற சமூகத்தில், தலைநிமிர்ந்து நிற்கப் போராடும் சின்னச்சாமியாக வருகிறார் சேரன். ஊர்க்காரர்களின் அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கும்போதும், சுயமரியாதை குறையும்போது தனக்கான குரலை உயர்த்தும்போதும் கவனிக்க வைக்கிறார்.
ஊர் பெரிய மனிதராகவும் சாதிவெறி பிடித்தவராகவும் சுடலையாண்டி என்ற கதாபாத்திரத்தில் வரும் லால், ஒரு தெற்கத்தி மனிதரை கண்முன் நிறுத்துகிறார். அவரது மைத்துனர் இசக்கியாக வரும் அருள்தாஸ் தனது அடாவடியை முகத்திலேயே காட்டிவிடுகிறார்.
சேரனின் மனைவியாக வரும் ஸ்ரீபிரியங்கா, தங்கை வள்ளியாக வரும் தீப்ஷிகா, அவரைக் காதலிக்கும் பெரிய வீட்டு பிள்ளை கிட்டுவாக வரும் துருவா, சின்னச்சாமிக்கு ஆதரவாக நிற்கும் காந்தி பெரியார் என்ற கதாபாத்திரத்தில் வரும் வேல ராமமூர்த்தி, போலீஸ் அதிகாரி அந்தோணிசாமியாக வரும் சுரேஷ் காமாட்சி, வழக்கறிஞர்களாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், ரவிமரியா, மயில்சாமி, நீதிபதியாக வரும் ராஜேஷ் உட்பட அனைவரும் தேவையான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.
தாங்கள் விரும்பும் தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொன்னாலும் கிராமங்களில் சில தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் சாதியத்துக்கு எதிராகவும் அழுத்தமான கருத்தை முன் வைக்கிறது ‘தமிழ்க்குடிமகன்’. இதற்கு முன் சாதி பற்றி வெளியான திரைப்படங்கள், தங்களின் வலிகளை மட்டுமே பேசியிருக்கின்றன. அதிலிருந்து வேறுபடுகிறது இந்தப் படம்.
இப்படியொரு கதையைச் சொல்லி அதற்கொரு தீர்வும் சொன்னதற்காகவே இயக்குநர் இசக்கி கார்வண்ணனைப் பாராட்டலாம். மனிதனின் தேவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்றபோது எங்கிருந்து வந்தது சாதி என்று கேள்வி கேட்கும் படம், ஓர் உண்மைச் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோல நகர்கிறது.
சாம் சிஎஸ்-சின் பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம் தந்திருக்கிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு தென்மாவட்ட கிராமத்தை கண் முன் கொண்டுவருகிறது.
’தமிழ்க்குடிமகன்’ – இருகரம் கூப்பி வரவேற்கப்பட வேண்டியவன்!