’தலைவி’ பட சிக்கல் தீர்ந்தது; திட்டமிட்டபடி 10ஆம் தேதி ரிலீஸ்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2021/09/0a1a-6.jpg)
திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ‘தலைவி’ படத்தின் தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டதால் வெளியீட்டுப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 10-ம் தேதி ‘தலைவி’ படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், திரையரங்குகளில் வெளியான 2 வாரங்களில் ஓடிடியில் வெளியீடு என்று படக்குழு திட்டமிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் படத்தைத் திரையிட முடியாது என்று போர்க்கொடி தூக்கியது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.
திரையரங்குகளில் வெளியான 4 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். இது தொடர்பாக ‘தலைவி’ படக்குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது 4 வாரங்கள் கழித்து ஓடிடி வெளியீட்டுக்கு ‘தலைவி’ படக்குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனால் திட்டமிட்டபடி,, எந்தப் பிரச்சினையுமின்றி செப்டம்பர் 10-ம் தேதி ‘தலைவி’ திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.