‘தாரை தப்பட்டை’ விமர்சனம்
‘ஆச்சி மசாலா’, ‘சக்தி மசாலா’ என்பது போல ‘பாலா மசாலா’ என்றொரு மசாலா இருக்கிறது தமிழ் சினிமாவில். இந்த மசாலாவுக்குள் நன்றாக ஊறப்போட்டு, வெளியே எடுத்து எறியப்பட்டுள்ள படம்தான் ‘தாரை தப்பட்டை’.
நாயகனை நாயகி உயிருக்கு உயிராக காதலிக்கிறாள். நாயகியை எந்நேரமும் நாயகன் வெடுக் வெடுக்கென திட்டிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் அவனுக்கும் அவள் மீது காதல் இருக்கிறது. இந்நிலையில் வில்லன் நல்லவன் போல் நடித்து, நாயகியை திருமணம் செய்ய பெண் கேட்கிறான். தன்னைவிட வில்லன் வசதியானவனாக இருப்பதால், அவனை திருமணம் செய்துகொண்டால் நாயகிக்கு நல்ல வாழ்க்கை அமையும் என நினைக்கும் நாயகன், தன் காதலை குழி தோண்டி புதைத்துவிட்டு, நாயகிக்கு புத்திமதி சொல்லி, அவளுக்கும், வில்லனுக்கும் திருமணம் நடக்க உதவுகிறான்.
முதல் இரவிலேயே வில்லனின் நிஜமுகம் வெளிப்படுகிறது. அவன் கலவியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கேடுகெட்ட தரகனாக இருக்கிறான். மனைவியாக வந்த நாயகியையும் கலவியல் தொழிலில் இறக்கிவிடுகிறான். ஒரு கட்டத்தில், பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒரு வயோதிக செல்வந்தனின் வாரிசை நாயகி வயிற்றில் சுமக்க வைக்கிறான். தாய், சேய் – இருவரில் ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. மனைவி செத்தாலும் பரவாயில்லை என்று அவளை வில்லன் அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு தூக்கிச் சென்று, பிணம் அறுக்கும் தொழிலாளியை வைத்து, நாயகியை அறுத்துக் கொன்று, குழந்தையை உயிரோடு வெளியே எடுக்கிறான். இது தெரிந்து ஆவேசம் கொள்ளும் நாயகன், வில்லனையும், பிணம் அறுக்கும் தொழிலாளியையும் கொலை செய்துவிட்டு, தானே வளர்ப்பதற்காக குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்து வர… “A Film by Bala’ என்ற எழுத்துக்கள்!
இந்த கதையில் நாயகனும், நாயகியும் நாட்டுப்புற கலைஞர்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் பூ வியாபாரம் செய்பவர்களாக, கார்மெண்ட் நிறுவனத்தில் பணி புரிபவர்களாக… யாராக வேண்டுமானாலும் இருக்க முடியும். ஆனால், கரகாட்டக் கலை பற்றிய எந்த புரிதலும் இல்லாத பாலா, இவர்களை வெறும் வணிக ஆதாயத்துக்காக கரகாட்டக் குழுவினராகக் காட்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை. விவசாய இனக்குழுவின் கூட்டு நடனமான முளைப்பாரி சடங்கின் மாற்று வடிவமாய் முகிழ்த்து, அரச சமூகத்தில் மாதவிகளின் பரத நாட்டியம் முக்கியத்துவம் பெற்றதால் அரசவைகளின் புறக்கணிப்புக்கு உள்ளாகி, நடுத்தெரு நடனமாய் இழிவுற்று, இன்று ஆபாச நடனமாக பரிதாபமாக தப்பிப் பிழைத்து வருகிறது கரகக்கலை என்ற வரலாறு தெரியாமல், அனுதாபத்துடன் அணுகாமல், அதை ஆபாச நடனத்துக்காக மட்டுமே ப்யன்படுத்தி உள்ள பாலாவுக்கும், ஆபாச நடனம் என்பதற்காகவே இக்கலைஞர்களை புக் பண்ணும் கிராமத்து திருவிழா குழுவினருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
இது கரகாட்டக் கலைஞர்கள் பற்றிய படம் என்று பெரிதாய் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், நடனக் கலைஞர்கள் தலையில் கரகம் வைத்து ஆடுவது போல் ஒரு பாடல் காட்சிகூட இதில் இல்லை என்பது அபத்தத்தின் உச்சம்.
இதற்கிடையில், விளிம்புநிலை மனிதர்கள் என்றால் அவர்கள் தலை வார மாட்டார்கள், புகை பிடிப்பார்கள், சரக்கடிப்பார்கள், கஞ்சா குடிப்பார்கள், சாதாரணமாக பேசும்போதுகூட மடீர் மடீர் என்று ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வார்கள், கற்பனைக்கும் எட்டாத மூர்க்கர்களாக இருப்பார்கள், பல சினிமா பாடல்களை தொகுத்து கதம்ப பாடல் பாடுவார்கள்… என்பன போன்ற ‘பாலா மசாலா’ அம்சங்கள் இந்த படத்திலும் செயற்கையாக எக்கச்சக்கமாக அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.
நாயகன் சசிகுமார், நாயகி வரலட்சுமி சரத்குமார், வில்லன் சுரேஷ் உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்கள் அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்திருப்பதன் மூலம் பாலா சிறந்த நடிப்பு பயிற்சியாளர் (ஆக்டிங் கோச்) மட்டுமே; சிறந்த கதாசிரியரோ, சிறந்த திரைக்கதை ஆசிரியரோ, சிறந்த இயக்குனரோ அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
‘தாரை தப்பட்டை’ – கிழிஞ்சது பாலா மொகறை!