’சடங்குகள்’ எனும் பெயரில் பார்ப்பனியத்தையும் ஒடுக்குமுறையையும் போற்றி பாதுகாக்கிறது இன்றைய தலைமுறை!
தாலி கட்டும்போது இந்த பெண் அடையும் மகிழ்ச்சி மனநிலை குறித்து எல்லாரும் சிலாகித்து எழுதுகிறார்கள். இப்படித்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
ஒருவகையில் தாலி கட்டும்போது பெண்கள் சோக முகத்தோடு இருப்பதுதான் பொருத்தம். தாலி எனும் அடிமை விலங்கை உடைத்தெறிய வேண்டிய காலக்கட்டத்தில் தாலி கட்டும்போது மகிழ்ச்சி அடைகிறார், குதூகலமாக இருக்கிறார் ஒரு பெண் என்பது பிற்போக்குத்தனம். அது வளர்ச்சி அல்ல, வீழ்ச்சி.
தாலி கட்டுவது மகிழ்ச்சி என்றால் அதனை ஆணுக்கும் கட்டி அழகு பாருங்கள். இல்லையேல் இருவருக்கும் எதற்கு தாலி ? மனம் விரும்பி வாழும் வாழ்க்கையை இந்த தாலிக்கயிறு என்ன செய்யப்போகிறது? அது பார்ப்பனியத்தின் வெளிப்பாடு.
ஒரு பக்கம் பெரியார், தலித்தியம், கம்யூனிசம் என்று பேசும் தலைமுறை இன்னொரு பக்கம் சடங்குகள் எனும் பெயரில் இப்படி பார்ப்பனியத்தையும் ஒடுக்குமுறையையும் போற்றி பாதுகாக்கவும் செய்கிறது.
அறிவு என்பது புகழ்ந்துகொள்வதற்காக அல்ல, வாழ்வதற்காக. ஒரு பெண்ணுக்கு தாலி கட்டி, ஐயர் வைத்து திருமணம் செய்யும் ஒருவனுக்கு சமூக மாற்றம், சமூக அக்கறை குறித்து பேசுவதற்கான தகுதியில்லை.
மாற்றம் உடனே வந்துவிடாது, படிப்படியாக வரும் எனும் நண்பர்களிடம் கேட்கிறேன், அந்த படியில் நீங்கள் எந்த படி!
Arun Mo