தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள்: துணை தலைவராக தமிழ்குமரன் தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தேர்தலில், ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் கலைக் கல்லூரியில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது.  நீதியரசர்கள் வெங்கட்ராமன், பாரதிதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்கள் முன்னிலையில் காலை 9 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இந்த தேர்தலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ராதாரவி, மோகன், ராமராஜன், நாசர், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், எஸ்.வி.சேகர், ஆர்யா, ஸ்ரீகாந்த், சசிகுமார், சின்னி ஜெயந்த், டெல்லி கணேஷ், விக்னேஷ், விஷ்ணு விஷால், ராதிகா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தனர். மொத்தம் 1,111 வாக்குகள் பதிவானது.

இந்த வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. இதில் ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ’தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி ராமசாமி 615 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி. மன்னனை விட 150 வாக்குகள் அதிகம் பெற்று தலைவராகியுள்ளார். முரளி ராமசாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

அதுபோல், ’நலம் காக்கும் அணி’ சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லைகா நிறுவன தலைமை அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்குமரன் 651 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த போட்டியாளரும் பெற்றிராத அதிக வாக்குகள் இது என்பது குறிப்பிடத் தக்கது.

’நலம் காக்கும் அணி’யைச் சேர்ந்த ‘ஏஜிஎஸ்’ அர்ச்சனா கல்பாத்தி இன்னொரு துணைத் தலைவராகவும், ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செயலாளர்களாகவும், சந்திரபிரகாஷ் ஜெயின் பொருளாளராகவும், சௌந்தர்பாண்டியன் இணைச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற ’நலம் காக்கும் அணி’யினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.