பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மாரடைப்பால் மரணம்
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 80. இவர் தற்போதைய தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை ஆவார்.
நடிகர் கிருஷ்ணா திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததை அடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
நடிகர் கிருஷ்ணா 1964-ம் ஆண்டு ‘தேனமனசுலு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, சுமார் 52 ஆண்டுகள் 340க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ’ஸ்ரீ ஸ்ரீ’ படத்தில் நடித்திருந்தார்.
இவரது முதல் மனைவி இந்திரா தேவி. இவர்களுக்கு மகேஷ் பாபு, ரமேஷ் பாபு ஆகிய மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். மகேஷ் பாபு தெலுங்கில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.
”எலந்தப்பழம்” பாடல் புகழ் விஜயநிர்மலாவை கிருஷ்ணா காதலித்து 2-வது திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு விஜயநிர்மலா மரணம் அடைந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் கிருஷ்ணாவின் முதல் மனைவியும், மகேஷ் பாபுவின் அம்மாவுமான இந்திரா தேவி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.