ஆசிரியையை கைவிட்டுவிட்டு அம்மாவோடு போனான் மாணவன்!

ஆசிரியையுடன் மாயமான மாணவன், ஆசிரியையை கைவிட்டுவிட்டு தன் அம்மாவுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததை அடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அவனை அம்மாவுடன் அனுப்பி வைத்து உத்தரவிட்டனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்த, காலாங்கரையைச் சேர்ந்த 23 வயது கோதைலட்சுமிக்கும், அதே பள்ளிக்கூடத்தில் 10ஆம் வகுப்பு படித்துவந்த, கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் – மாரியம்மாள் தம்பதியினரின் மகன், 15 வயது மாணவன் சிவசுப்பிரமணியனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காதலித்துவந்த இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி மாயமானார்கள்.
மாணவனின் அம்மா மாரியம்மாள், மைனர் பையனான தன் மகனை ஆசிரியை கோதைலட்சுமி கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரிடமிருந்து மகனை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
மாயமான ஓராண்டுக்குப் பிறகு, கடந்த 10ஆம் தேதி திருப்பூரில் கோதைலட்சுமியும் சிவசுப்பிரமணியனும் கணவன் – மனைவியாக வாழ்ந்துவருவதை கடையநல்லூர் போலீசார் கண்டுபிடித்தனர். அங்குள்ள பெட்ரோல் பங்கில் சிவசுப்பிரமணியனும், தனியார் பள்ளி ஒன்றில் கோதைலட்சுமியும் வேலை பார்த்து வந்தனர். கோதைலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இருவரையும் பிடித்துவந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். திருமணம் செய்துகொண்டு வாழும் எங்களை பிரித்துவிடாதீர்கள் என்று கோதைலட்சுமி அப்போது கெஞ்சினார். எனினும், மைனர் பையனை கடத்தியதாக புகார் இருப்பதால் அவரை போலீசார் கைது செய்தனர். கோதைலட்சுமி திருச்சி மகளிர் சிறையிலும், சிவசுப்பிரமணியன் நாங்குனேரியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவனின் அம்மா மாரியம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின்படி மாணவன் சிவசுப்பிரமணியன் மட்டும் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான். கோதைலட்சுமி அழைத்து வரப்படவில்லை.
மாணவனிடம், “தற்போது நீ யாருடன் செல்ல விரும்புகிறாய்?” என்று நீதிபதிகள் கேட்டனர். தன் அம்மாவுடன் செல்ல விரும்புவதாக அவன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அவனை அம்மாவுடன் செல்ல அனுமதித்தும், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து மாணவன் சிவசுப்பிரமணியன் தன் அம்மா மாரியம்மாளுடன் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினான். அவன் தாடி வளர்த்த நிலையில் சோகமாக இருந்தான். அவனுடைய கைகளை மாரியம்மாள் இறுக்கமாக பற்றிக்கொண்டு கண் கலங்கினார். அவருக்கு அவரது தரப்பு வழக்கறிஞர்கள் ஆறுதல் கூறினார்கள்.