“திரைப்பட வரி விலக்கு: மக்களுக்கு பலன் ஏதும் இல்லை!” – உயர்நீதிமன்றம்

திரைப்படங்களுக்கு வழங்கப்படும் வரிவிலக்கினால் தயாரிப்பாளர்கள் மட்டுமே பலன் அடைவதாகவும், இதனால் அரசுக்கும் மக்களுக்கும் பலன் ஏதும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த முறை நடந்த விசாரணையின்போது, வரிவிலக்கு பெற்ற படங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், படத்திற்கு யு சான்றிதழ் அளிக்கும் குழுவில் உள்ளவர்களின் தமிழ்ப்புலமை குறித்தும் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை 2,014 படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் இன்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, வரி விலக்கு அளிக்கப்படும் திரைப்படங்களுக்கு கட்டணத்தை 30 சதவீதம் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் எனவும், வரி விலக்கு அளிக்கும் முறையால் தயாரிப்பாளர்களுக்கு சலுகை காட்டுவது போல் உள்ளது என்றும், மேலும், திரைப்படங்களுக்கு யு சான்றிதழ் அளிப்பதில் கண்மூடித்தனம் காட்டக் கூடாது என்றும் தெரிவித்த நீதிபதி, வரி விலக்கினால் தயாரிப்பாளர்கள் மட்டுமே பலன் அடைவதாகவும், இதனால் தமிழ் வளர்ச்சிக்கோ, பார்வையாளர்களுக்கோ பலன் ஏதும் இல்லை என்றும் கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணை நாளை மறுதினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.