வில்லங்கமாய் விஸ்வரூபம் எடுக்கும் ‘போகன்’ கதை திருட்டு விவகாரம்!
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘போகன்’. பிரபுதேவாவின் ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது. தற்போது இறுதிகட்ட பணிகளை படக்குழு தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதை தன்னுடையது என்று ஆண்டனி தாமஸ் என்பவர் புகார் அளித்திருக்கிறார். அதில் “போகன்’ படத்தின் படப்பிடிப்புக்கு போவதற்கு முன்பாகவே நான் புகார் அளித்திருக்கிறேன். ஆனால், என்னிடம் விலை பேசினார்கள். நான் இக்கதையை படமாக்கியபோது, போதிய பணமின்றி நிறுத்தப்பட்டது. நான் ‘அல்வா’ என்று எழுதிய கதையைத் தான் ‘போகன்’ என்ற தலைப்பில் மாற்றி செய்திருக்கிறார்கள்” என பலதரப்புகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தது மட்டுமன்றி, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக தன்னை தாக்கிவிட்டார்கள் என்றும் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆண்டனி தாமஸ் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று ‘போகன்’ படத்தின் இயக்குநர் லட்சுமணும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆண்டனி தாமஸ் என்பவர், தன்னுடையை கதையை நான் படமாக்குவதாக கூறி தென்னிந்திய வர்த்தக சங்கத்தில் ஒரு பொய் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் குறித்து மேற்படி சங்கத்தினர் விசாரணை செய்து ‘இருவரது கதையும் அவரவர் பாணியில் எழுதப்பட்டுள்ளது’ என்று முடிவு செய்தனர்.
இந்நிலையில் ஆண்டனி தாமஸ் என்மீதும், மேலும் இரண்டு நபர்கள் மீதும் ஒரு பொய்யான புகாரை தாக்கல் செய்து இருந்தார். அதுமட்டுமன்றி என் மீதும், தயாரிப்பாளர் மற்றும் 3 நபர்கள் மீதும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னால் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் நாங்கள் எதிர் உரைத் தாக்கல் செய்து மேற்படி வழக்கு விசாரணையில் உள்ளது.
அவ்வாறு இருக்கையில் ஆண்டனி தாமஸ் என் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் மேலும் ஒரு பொய்யான புகார் கொடுத்திருக்கிறார். காவல் நிலைய ஆய்வாளர்கள் விசாரித்து, மேற்படி நபரை, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பதால் சட்டப்படி பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தனர்.
மேற்படி வழக்கு நிலுவையில் இருக்கும்போது இப்படி பொய்யான புகார்களை எங்கள் மேல் தொடுத்து வருவது வழக்கமாகிவிட்டது. மேலும் வாட்ஸ்-அப் மூலம் என் பெயருக்கும், எனது ‘போகன்’ படத்துக்கும் களங்க விளைவிக்கும் வகையில் தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தி மிகுந்த மன உளைச்சல் அளித்து வருகிறார்.
பொய்யான புகார்களின் மூலமாகவும் மற்றும் சமூக வலைத்தளங்களில் எனது பெயரையும் எனது தயாரிப்பாளர்களின் பெயரையும் அவலப்படுத்தும் நோக்குடன் கெட்ட எண்ணத்துடன் எங்களிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறார். மேற்படி ஆண்டனி தாமஸ் நடவடிக்கையால் நானும் எனது படக்குழுவினரும், தயாரிப்பாளர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். இதனால், அந்தோணி தாமஸ் மீது சட்டப்படியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் லட்சுமணன் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இரண்டு தரப்புமே இப்படி மாறி மாறி புகார் தெரிவித்துள்ளதால், தற்போது ‘போகன்’ கதை திருட்டு விவகாரம் வில்லங்கமாய் விஸ்வரூபம் எடுத்துள்ளது.