நாட்டு மக்களுக்கு சிவகார்த்திகேயன் வாக்குறுதி: “இனி பொது இடத்தில் அழ மாட்டேன்!”
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தந்தி டிவிக்கும் இடையிலான உறவு நீளமானது; அகலமானது; ஆழமானது. அது வெறும் நடிகர் – ஊடகம் உறவு மட்டுமல்ல, வர்த்தக உறவையும் உள்ளடக்கியது.
ஆம். சிவகார்த்திகேயன் நடிப்பில், அவரது நண்பர் ஆர்.டி.ராஜா தயாரித்த ‘ரெமோ’ படத்தின் மீடியா பார்ட்னரே தந்தி டிவி தான். அதனால் தான் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற ‘ரெமோ’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அறிமுக விழாவில் தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டு மேடையில் முழங்கினார். அதனால் தான் அந்த விழாவை நேரடியாக ஒளிபரப்பும் உரிமை தந்தி டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனால் தான் கடந்த 11ஆம் தேதி ‘ரெமோ’ நன்றி விழா மேடையில் கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயனை தந்தி டிவிக்கு அழைத்து, “என் கேள்விக்கு என்ன பதில்” என்ற நிகழ்ச்சியில் மென்மையாக கேள்விகள் கேட்டு பேட்டி கண்டார் ரங்கராஜ் பாண்டே.
தந்தி டிவிக்கும், ‘ரெமோ’ படத்துக்கும் இடையிலான “ஆத்மார்த்தமான” வர்த்தக உறவு தெரியாத நெட்டிசன்கள், “மேடையில் சிவகார்த்திகேயன் அழ யார் காரணம்?” என்று நாட்டு மக்களுக்கு சொல்வதற்காக ரங்கராஜ் பாண்டே கண்ட பேட்டி குறித்து பொங்கு பொங்கு என பொங்கினார்கள். ஆனால், திரைப்பட ஊடகவியலாளர்கள் யாரும் அப்படி பொங்கவில்லை. ஏனெனில், திரையுலகம் என்ற கடலை நெட்டிசன்கள் கரையில் நின்று பார்க்கிறார்கள். திரைப்பட ஊடகவியலாளர்களோ, கடலுக்குள் மூழ்கி நின்று கடலை பார்க்கிறார்கள். இரு தரப்புக்கும் கடல் வேறுவேறாகத் தானே காட்சி கொடுக்கும்!
அது போகட்டும். தந்தி டிவி ரங்கராஜ் பாண்டேவுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியின் சுருக்கம் இதோ:-
‘எனக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதனால் தான் அழுதேன்’ என்று பலரும் நினைக்கிறார்கள். எனது 30 வருட வாழ்க்கையில் பிரச்சனை எப்போதுமே இருந்திருக்கிறது. சினிமாவில் சமீபகாலமாக பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்.
‘ரெமோ’ திரைப்பட தயாரிப்பாளர் ராஜா அண்ணாவின் உழைப்பைப் பார்த்து என்னை அறியாமல் வந்த கண்ணீர் தான் அது. அந்த இடத்தில் நான் எனது உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இனிமேல் அழ மாட்டேன். என்னைப் போல ஒரு துறையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்களுக்குத்தான் எனது கஷ்டம் புரியும்.
அந்த இடத்தில் அழாமல் ராஜா அண்ணனை தனியாக கட்டிப்பிடித்து அழுதிருக்கலாம். இனிமேல் என் உணர்வுகளை யாரிடம் காட்ட வேண்டுமோ, அவர்களிடம் மட்டும் காட்டிக் கொள்வேன். பொது இடத்தில் அழ மாட்டேன்.
பிரச்சனைகளுக்குள் போகாமல் சந்தோஷமாக படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். எப்போதுமே என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் ரியாக்ட் பண்ண மாட்டேன். அது தான் என்னுடைய பிரச்சனை. நான் நடிப்பு வகுப்புக்கு எல்லாம் சென்று பட்டைத் தீட்டப்பட்டு வந்தவன் கிடையாது. தினமும் படப்பிடிப்பில் கற்று வருகிறேன்.
என்னுடைய வளர்ச்சியும் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று பார்க்கிறேன். கொடுத்த வாக்கை நான் காப்பாற்றாமல் இருந்தது கிடையாது. ஒரு சில படங்கள் பண்ண முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. பண்ணக் கூடாது என்பது கிடையாது. அப்புறம் பண்ணிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அதில் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் கிடையாது. நான் சினிமாவில் ஏமாற்றிவிட்டு எங்கேயும் ஓடிவிட முடியாது. கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். சரியான திட்டமிடலோடு, சரியான படங்களை பண்ண வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
தற்போது இருக்கும் பிரச்சனைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று போகக்கூட நான் விரும்பவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் முடிவு பெறும் என நினைக்கிறேன். இனிமேல் இதே போன்றதொரு பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வேன். தற்போது இருக்கும் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும் கூட.
முன்பு மதுரை ஏர்போர்ட்டில் நான் தாக்கப்பட்டேன். அது குறித்து நான் காவல் துறையில் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால் நான் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் என்னை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வசதியாக வீடியோவெல்லாம் இருந்தது. ஆனால் நான் புகார் கொடுக்கவில்லை.
என் அப்பா சிறைத்துறை அதிகாரியாக இருந்தபோது நான் ஜெயிலுக்குப் போய் பார்த்திருக்கிறேன். ஜெயில் வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது, அங்கேயிருந்து வெளியில் வருபவர்கள் அதன்பின் என்ன மனநிலையோடு இருப்பார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அதனால்தான் நான் காவல் துறையில் புகார் கொடுக்காமல், அந்த சம்பவத்தை அப்படியே மறந்துவிட்டு என் வேலையைப் பார்க்க போய்விட்டேன்.
இவ்வாறு பேட்டி அளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.