தமிழ் ராக்கர்ஸ்  – விமர்சனம்

நடிப்பு: அருண் விஜய், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், அழகம் பெருமாள், எம்.எஸ். பாஸ்கர், வினோதினி, ஜி.மாரிமுத்து, தருண் குமார், வினோத் சாகர், சரத் ரவி, ஜானி காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி மற்றும் பலர்

இயக்கம்: அறிவழகன்

தயாரிப்பு: ’ஏவி எம் புரொடக்‌ஷன்’ அருணா குகன், அபர்ணா குகன் ஷியாம்

இசை: விகாஷ்

ஒளிப்பதிவு : ஆர்.ராஜசேகர்

ஒ.டி.டி தளம்: சோனி லிவ்

மக்கள் தொடர்பு: ரியாஸ் அஹமத்

புதிய தமிழ் திரைப்படங்கள் திரையரங்கில் ரிலீசாகும் அன்றோ, அல்லது அதற்கும் முன்போ, திருட்டுத்தனமாக பிரதி எடுத்து, அப்படங்களை ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளத்தில் வெளியிட்டு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினருக்கு பெரிய நஷ்டத்தையும், தங்களுக்கு பல கோடி லாபத்தையும் ஏற்படுத்திக்கொள்கிற திருட்டுக் கும்பல் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்; அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் திரையுலகை அழிக்கும் இந்த தமிழ் ராக்கர்ஸ் யார்? அவர்கள் எங்கிருந்து இயங்குகிறார்கள்? அவர்களுக்கு புதுப்படங்களின் பிரதிகள் எப்படி கிடைக்கிறது? அவர்களுக்கான வருமானம் எங்கிருந்து வருகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை நமக்கு மட்டுமல்ல, பெரும்பாலான திரைத்துறையினருக்கும்கூட தெரியவில்லை. விடை தெரியாத இந்த கேள்விகளுக்கு விடை தேடி விறுவிறுப்பாக எட்டு எபிசோடுகள் பயணித்திருப்பது தான் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையத் தொடர்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ‘அதிரடி ஸ்டார்’ ஆதித்யா நடிப்பில், ரூ.300 கோடி பட்ஜெட்டில், ’கருடா’ என்ற திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. அந்த படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் ’தமிழ் ராக்கர்ஸ்’ கும்பல், அந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆவதற்கு ஒருநாள் முன்பாகவே ஆன்லைனில் வெளியிடப்போவதாக அறிவித்து அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்த சட்டவிரோத செயலைத் தடுத்து நிறுத்தவும், தமிழ் ராக்கர்ஸ் கும்பலைப் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்தவும் காவல் துறை அருண் விஜய் தலைமையில் தனிப் படை அமைக்கிறது .

இதற்கிடையில் அருண் விஜய்யின் மனைவி ஐஸ்வர்யா மேனன் மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகிறார். தமிழ் ராக்கர்ஸ் கும்பல் தான் தன் மனைவியை கடத்திக் கொன்றிருக்கிறது என எண்ணும் அருண் விஜய், அந்த கும்பலைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்பதில் அதிதீவிர முனைப்பு காட்டுகிறார். அருண் விஜய்யால் அதை சாதித்துக் காட்ட முடிந்ததா என்ற கேள்விக்கு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது தொடரின் மீதிக்கதை.

சீருடை அணியாத போலீஸ் அதிகாரியாக வரும் அருண் விஜய், தனது வழக்கமான நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார். தொடர் முழுவதும் மிடுக்காகவும், கம்பீரமாகவும் வலம் வருகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன், அவ்வப்போது வந்து ரொமான்சும், உரசலும், சிணுங்கலுமாய் கிளுகிளுப்பூட்டுகிறார். அருண் விஜய்க்கு உதவும் போலீஸ் அதிகாரிகளாக வரும் வாணி போஜனும், வினோதினியும் கவனம் ஈர்க்கிறார்கள்.

திரைப்பட தயாரிப்பாளராக வரும் அழகம்பெருமாளின் நடிப்பு அசத்தல். இறுதி காட்சியில் அவருக்கு ஏற்படும் நிலை தயாரிப்பாளர்களின் அவல நிலையை நினைவுப்படுத்துகிறது. ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்களின் மனதில் பதியும் விதத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

தருண் குமார், மாரிமுத்து, வினோத் சாகர், சரத் ரவி,  ஜானி, காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி உள்ளிட்ட ஏனைய நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

இக்கதையை எழுதியிருக்கும் மனோஜ் குமார் கலைவாணன், ராஜேஷ் மஞ்சுநாத்துடன் இணைந்து அமைத்திருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக பயணிக்கிறது.

இப்படியொரு கதையை தொடராக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதற்காகவே இயக்குனர் அறிவழகனை பாராட்டலாம். ’தமிழ் ராக்கர்ஸ்’ பிரச்சனையை மிகவும் நுணுக்கமாக சித்தரிக்கும் இயக்குனர், அதையும் தாண்டி, ரசிகர்களை தயாரிப்பாளர்களும், நடிகர்களும் எப்படி தங்களது புகழுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.  முதல் எபிசோடு தொடங்கி இறுதி எபிசோடு வரை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.

விகாஷ் இசையும், ஆர்.ராஜசேகர் ஒளிப்பதிவும் தொடருக்கு பலம்.

‘தமிழ் ராக்கர்ஸ்’ – அவசியம் பார்க்க வேண்டிய இணையத் தொடர்!