புதிய திரைப்படங்களை இணையதளத்தில் முறைகேடாக பதிவேற்றம் செய்யும் ’தமிழ் ராக்கர்ஸ்’ தளத்தின் முக்கிய அட்மின் கைது!
புதிய திரைப்படங்கள் வெளியான அன்றைய தினமே ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளத்தில் முறைகேடாக படங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த இணையதளத்தின் உரிமையாளர் பல நாட்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் முக்கிய அட்மின் கைது செய்யப்பட்டிருக்கிறார். தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது மதுரையைச் சேர்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜ் என்பவரை கொச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
நடிகர் பிரித்விராஜ் நடித்த ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்ற மலையாளத் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்தப் படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுப்ரியா மேனன் கொச்சி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் குற்றவாளியைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜை கொச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
அவர் திரையரங்கில் ‘ராயன்’ படத்தைப் பதிவு செய்து கொண்டிருந்தபோது போலீஸார் அவரைப் பிடித்திருக்கின்றனர். ஸ்டீபன் ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திரையரங்குகளின் இருக்கைகளில் சிறிய அளவிலான கேமராவை வைத்து முழு படத்தையும் ரெக்கார்டு செய்ததும், இணையதளத்தில் படங்களை முதல் நாளிலேயே பதிவேற்றம் செய்ய 5000 ரூபாய் கமிஷனாகப் பெற்றதும் தெரிய வந்திருக்கிறது.
அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பதிவேற்றம் செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இது குறித்துத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.