தமிழகத்தில் 25ஆம் தேதி முழு அடைப்பு: தி.மு.க. கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு!

வருகிற 25-ஆம் தேதி, தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதென்று தி.மு.க. இன்று (ஞாயிறு) கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது::

வருகிற 25-ஆம் தேதி, தமிழகம் தழுவிய ஒரு முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி, தமிழகத்தின் நலன் கருதி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

அந்த தீர்மானங்களை விளக்கி, குறிப்பாக விவசாயிகளுக்காக நடத்தப்படக்கூடிய முழு அடைப்பு போராட்டம் என்ன காரணத்திற்காக நடைபெறுகிறது என்பதை விளக்கி ஒரு மாபெரும் பொதுக்கூட்டம், அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்கக்கூடிய வகையில், வருகிற 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இவ்வாறு கூறினார் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, வரவேற்புரையிலும் இறுதி உரையிலும் ஸ்டாலின் பேசியதாவது:

இந்த கூட்டம் அரசியல் ரீதியாக நடைபெறுகிறது என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளின் நலன் கருதி இந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்படுகிறது. முல்லைப் பெரியாரிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்படுகிறது. சிறுவாணியிலிருந்து வரக்கூடிய நீர் தடுக்கப்பட்டு இன்றைக்கு தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பாலாற்றிலிருந்து வரக்கூடிய நீரை தடுக்க தடுப்பணைகள் கட்டப்படுகின்றன, மேகதாது அணை கட்டப்படுவது என்று தமிழகத்தின் உரிமைகள் எல்லாம் அண்டை மாநிலங்களிடம் அடகு வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டிய, இவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய, இதற்கெல்லாம் பரிகாரம் காண வேண்டிய மாநில அரசும், மத்திய அரசும் இவற்றை பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள், தொடர்ந்து போராடக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மொட்டையடிக்கக்கூடிய போராட்டம், குட்டிக்கரணம் போடக்கூடிய போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், முழு நிர்வாணப் போராட்டம், சேலை கட்டி நடத்தக்கூடிய போராட்டம் என்று தொடர்ந்து பல கோணங்களில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், இது குறித்து தமிழகத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சரோ, டெல்லியில் இருக்கக்கூடிய பிரதமரோ விவசாயிகளை சந்தித்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவோ அல்லது அழைத்து பேசவோ கூட இயலாத நிலை இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, இந்த உணர்வு இளைஞர்களுக்கு வந்திருக்கிறது, மாணவர்களுக்கும் வந்திருக்கிறது, வியாபாரிகளுக்கும் வந்திருக்கிறது. ஆக, ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் ஆவேசப்படக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த ஆவேசத்தை அண்மையில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக பார்த்து உணர்ந்து கொண்டோம். அதேபோல், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்திலும் அதை நாம் பார்த்தோம். இன்றைக்கு டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்தை ஆதரித்து தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆக, ஆட்சியில் இருப்பவர்கள் விவசாயிகளை அழைத்துப் பேச மறுக்கிறார்கள். அவர்களின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். ஆனால், உயர் நீதிமன்றம்; உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள், விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் விதமாக தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்பளித்துள்ளது. அதேபோல், உச்சநீதிமன்றமும் விவசாயிகள் தற்கொலைகளை மாநில அரசு தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறது. எனவே, நீதிமன்றங்களை பொறுத்தவரையில் விவசாயிகளின் பிரச்சனையை மனித நேயத்துடன் அணுகும் முறையினை காண்கிறோம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எந்த அக்கறையும் காட்டவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆக, இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நாம் இங்கே கூடி இருக்கிறோம். எனவே, நான் மீண்டும் சொல்கிறேன், கட்சிக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் இங்கே கூடி இருக்கிறோம். இங்கே வந்திருக்கக்கூடிய அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்துகளை இந்த கூட்டத்திலே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் வர வேண்டும் என்று யோசித்து, முடிவெடுத்த நேரத்தில், மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாரதீய ஜனதா கட்சி. அதேபோல, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய அதிமுக இன்றைக்கு இரண்டு அணிகளாக இருந்தாலும், அவர்களை குற்றம்சாட்டி, அவர்களை வலியுறுத்தி, வற்புறுத்தி தான் தீர்மானங்களை நாம் இங்கு வடிக்க இருக்கிறோம் என்பதால், அவர்களை தவிர்த்த பிற அனைத்து கட்சிகளையும் அழைக்கலாம் என்று முடிவெடுத்து, அந்த நிலையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கும் கடிதம் எழுதியிருந்தோம். அவருடன் தொலைபேசியில் நேற்று காலையில் பேசியபோது, ‘இது நல்லதொரு ஏற்பாடு, அவசியம் நடத்த வேண்டும், ஆனால், என்னுடைய நிலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு மாறியிருக்கிறது, இருந்தாலும் கலந்து கொள்வது பற்றி யோசித்து மாலை சொல்கிறேன்’ என்றார். பிறகு மாலை ஒரு கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார். கலந்து கொள்கிறேன் என்றும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் சொல்லாமல், வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். இந்த கூட்டம் வெற்றி பெற வேண்டும், எல்லா முடிவுகளுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று அதில் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் நேரடியாகவே சென்று அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, ‘நாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்து விட்டோம், வரப்போகிறோம். ஆனால், யார் கலந்து கொள்வது என்பதை நாளை காலையில் சொல்கிறோம்’, என்று நேற்று மாலை தெரிவித்தார். ஆனால், நேற்றிரவு பல்லாவரத்தில் நடைபெற்ற அவர்களுடைய கட்சியின் கூட்டத்தில், இதில் கலந்து கொள்ள மாட்டோம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இங்கு குறிப்பிடுகிறேன். ஆகவே, இன்றைக்கு நாமெல்லாம் இங்கு ஒன்று திரண்டு இருக்கிறோம். எனவே, இந்த கூட்டத்தின் மூலமாக நல்லதொரு விடிவுகாலம் வரும் என்று விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. அந்த நம்பிக்கைக்கு தனிப்பட்ட ஒருவர் தான் காரணம் என்று இல்லாமல், நாம் அனைவரும் காரணம் என்ற நிலை நிச்சயம் உருவாகும் என்ற நம்பிக்கை நமக்கு எல்லாம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விடுத்த அழைப்பை ஏற்று இந்த கூட்டத்துக்கு நீங்கள் எல்லாம் வந்து பங்கேற்று இருப்பது, இதனால் எங்களுக்கு பெருமை சேர்ப்பதாக நான் கருதாமல், உள்ளபடியே விவசாயிகளுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் எடுத்துச்சொல்லி, இது விவசாயிகளுக்காக நடைபெறும் கூட்டமாக இருந்தாலும், நாட்டில் உள்ள நீட் தேர்வு உள்ளிட்ட சில முக்கியமான பிரச்சினைகளை எல்லாம் குறித்து, இங்கு சில வரைவுத் தீர்மானங்களை இயற்ற முடிவெடுத்துள்ளோம். அதனால், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்ற எண்ணமும் எங்களுக்கு உள்ளது. எனவே தீர்மானங்களில் திருத்தங்கள் மற்றும் ஏதாவது தீர்மானம் தேவையில்லை என்று உங்கள் கருத்துகளை ஏற்று தீர்மானங்களை இறுதி செய்யலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்.

எனவே, உங்களுடைய முடிவுக்கு தீர்மானங்கள் விடப்படுகிறது. ஏறக்குறைய 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு இருக்கிறார்கள். அப்படி உயிரிழந்த விவசாயிகளுக்கு முதலில் இரங்கல் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டு, பிற தீர்மானங்கள் மீதான உங்களுடைய கருத்துகளை இங்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.

# # #

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து இந்த அனைத்து கட்சி கூட்டம் இன்று கூட்டப்பட்டு, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. முதல் தீர்மானமாக, ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கக்கூடிய நிலையில் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து, விவசாயிகளும் – அனைத்து கட்சி தலைவர்களும் இந்தியாவின் பிரதமரை சந்திக்கும் தீர்மானமும், காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நதி நீர் ஒழுங்காற்றுக்குழு உடனே உருவாக்கப்பட வேண்டும், விவசாயிகளின் கடன் அனைத்தையும் உடனே தள்ளுபடி செய்திட வேண்டும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தற்கொலை செய்து கொண்டு இறந்த விவசாயிகளின் குடும்பங்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும், காவேரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டுவதை தடை செய்திட வேண்டும், மீத்தேன் திட்டமும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமும் கைவிடப்பட வேண்டும், நெல் – கரும்புக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், கரும்புக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டி, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும், முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும், நீட் தேர்வுக்கு விலக்களிக்க தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்த தீர்மானங்களை ஒட்டி பல கருத்துகளை எடுத்துச் சொல்லி, அவை முழுமையாக விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, முக்கியமான ஒரு தீர்மானமாக விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நாமும் பக்கபலமாக இருந்திட வேண்டும் என்ற அடிப்படையில், மத்திய – மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய வகையில், தமிழகம் தழுவிய ஒரு முழு அடைப்புப் போராட்டத்தை எதிர்வரும் 25 ஆம் தேதியன்று நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற தீர்மானங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் வகையில், அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தை எதிர்வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடத்துவதென்று தீர்மானம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து 25 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், வணிகர் பெருமக்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் உள்பட அனைத்துத்தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.