தமிழக விவசாயிகள் தற்கொலை நன்கு திட்டமிடப்பட்ட கொலை!

தண்ணீர் இல்லாததால் தான் பயிர் கருகுகிறது. காவேரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்ததால் தான் தண்ணீர் இல்லாமல் போனது. பயிர் கருகியதாலும், முறையான நேரத்தில் விவசாயக் கடன் கிடைக்காமல் போனதுமே பெருமளவு விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்.

கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் கூட்டுறவு வங்கிகளின் மூலமாக சம்பா பயிருக்கு கொடுக்கப்பட இருந்த கடன் தொகை நான்கில் ஒரு பங்கினை மட்டுமே வங்கிகள் விநியோகித்தன. விவசாயியிடம் இருந்த கையிருப்பையும் வங்கியில் மாற்ற இயலாமல் போனதாலேயே அவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகினார்கள்.

கிராமங்களில் கூட்டுறவு வங்கிகளுக்கே கிளைகள் உண்டு. கார்ப்பரேட் வங்கிகள் இயங்காத இவ்வூர்களில் முடக்கப்பட்ட பொருளாதாரமே இந்த விவசாயிகளை பெருமளவில் தற்கொலைக்கு தள்ளி இருக்கிறது.

ஆனால் குஜராத்தில், கூட்டுறவு வங்கிகளில், பணமுடக்கம் அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் நூற்றூக்கணக்கான கோடி ரூபாய் பணங்கள் செலுத்தப்பட்டன, மாற்றப்பட்டன.. பிற இடங்களில், குறிப்பாக தமிழகம் போன்ற இடங்களில் முடக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள், குஜராத்தில் முடக்கப்படவில்லை. பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா நிர்வாகியாக இருக்கும் அலகாபாத் கூட்டுறவு வங்கியில் 500 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதை மறக்க முடியுமா?

ஆனால் தமிழகத்தில் விவசாயிகளுக்கு சம்பா பயிருக்காக நவம்பர் மாதத்தில் விநியோகித்திருக்க வேண்டிய 24,000 கோடி ரூபாயில் 6000 கோடி ரூபாய் மட்டுமே விநியோகிக்க முடிந்தது. எனில் விவசாயிகள் நான்கில் ஒரு பங்கினர் மட்டுமே தங்களது பயிருக்கு தேவையான கடனை பெற முடிந்திருக்கிறது என்பதே உண்மை. மீதமிருக்கும் மூன்று பங்கினரின் நெருக்கடியே இன்று அவர்களை தற்கொலை செய்யுமளவு தள்ளி இருக்கிறது.

ஒருபுறம் காவேரி நீர் இல்லாததால் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் இல்லாதது, மறுபுறம் பணமுடக்கத்தினால் விளைபொருளை விற்க இயலாமல் போனது, இன்னொரு புறத்தில் பயிருக்கு தேவையான மேலதிக கடனை குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கியில் பெற முடியாமல் போனது…

காவேரி நீர் தர மறுத்தமை, கையில் இருக்கும் ரொக்கப் பணத்தையும் பிடுங்கிக் கொண்டமை இந்த இரண்டுமே இன்று நடக்கும் மிகப் பெரும் எண்ணீக்கையிலான தற்கொலைகளுக்கு காரணம்.

இன்று நடக்கும் விவசாயிகள் தற்கொலையில், பாஜக-ஆர்.எஸ்.எஸ்ஸின் கர்நாடக ஆதரவு நிலைப்பாட்டிற்கும், பணமுடக்கத்திற்கும் பெரும் பங்குண்டு.

கருப்புப்பண முடக்கம் எனும் பெயரில் கொலை வெறியாட்டம் நட்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதை அடிமட்ட உழைப்பாளிகளாக இருக்கும் விவசாயிகளின் தற்கொலை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழக விவசாயிகளின் மரணம் என்பது நன்கு திட்டமிடப்பட்ட கொலை என்றே சொல்ல வேண்டும்.

THIRU THOLAR