“என் உச்சி மண்டையில சுர்ருங்குது” பாடலாசிரியர் அண்ணாமலை திடீர் மரணம்
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலை இன்று (செவ்வாய்) இரவு சுமார் 7 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49.
சில தினங்களுக்குமுன் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து தமிழ் திரையுலகம் மீள்வதற்குள் மேலும் ஒரு அதிர்ச்சியாக பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலையின் திடீர் மரணம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை, திரைப்பட பாடல் எழுத வருவதற்குமுன் ஆனந்தவிகடனில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். எம்.பில் முடித்தவர். பிஎச்டி ஆய்வுப் பட்டத்துக்கான முயற்சியிலும் இருந்தவர்.
‘சித்திரப்பாவை’ என்ற தொலைக்காட்சி தொடருக்கு முதன்முதலில் பாடல் எழுதினார் அண்ணாமலை. தொடர்ந்து 15 தொடர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள அவர், ‘புதுவயல்’ என்ற திரைப்படத்தில் 1992-ல் தனது முதல் திரைப்பட பாடலை எழுதினார். அதன்பிறகு ‘கும்மாளம்’, ‘ஸ்டூடன்ட் நம்பர் ஒன்’ உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல் எழுதினார்.
விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “என் உச்சி மண்டையில சுர்ருங்குது…” என்ற பாடல்தான் இவரைப் பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து 50 படங்களுக்கு எழுதி இருக்கிறார். தற்போது 20 படங்களில் எழுதி வந்தார்.
அண்ணாமலைக்கு சுகந்தி என்ற மனைவியும், ரித்விகா என்ற 5 வயது மகளும் இருக்கிறார்கள்.