தமிழின படுகொலை க்கான நினைவேந்தல்: சென்னை மெரினாவில் நடத்த திடீர் தடை!
தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்தது சிங்கள ராணுவம்.
இந்த இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினவேந்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் மே 3-வது வாரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி இந்த ஆண்டு நாளை (மே 21ஆம் தேதி) மெரினா கடற்கரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஜெயலலிதா காட்டிய வழியில் ஆட்சி நடத்துவதாக பீற்றிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தற்போது இதற்கு திடீரென தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மெரினா கடற்கரையில் விதிமுறைகளை மீறி குழுமினாலோ, கூட்டம் நடத்த முற்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையின் அழகை பாதுகாக்கும் வகையில் மெரினா கடற்கரையில் கூட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.