“நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்”: மீனவர்கள் போராட்டம்
சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் துவக்கி உள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில், பிரிட்ஜோ (21) என்ற மீனவர் உயிரிழந்தார். படகின் டிரைவர் ஜெரோனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற தகவல் கிடைத்ததும் ராமேசுவரம் மீன்பிடித் துறைகமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் உறவினர்கள் நள்ளிரவே திரளத் தொடங்கினர்.
மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையைக் கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கச்சிமடத்தில் விசைப்படகு மீனவர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் நடத்திய படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடுவது என்றும், மார்ச் 11, 12 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பது எனவும் முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.
மேலும், மத்திய அமைச்சர்கள் வரும்வரையில், உயிரிழந்த மீனவர் உடலை வாங்க மாட்டோம் என அறிவித்து, தங்கச்சிமடத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள், குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தை துவக்கி உள்ளனர்.