நடுக்கடலில் மீனவ தமிழன் படுகொலை: சிங்கள ராணுவம் வெறியாட்டம்!
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். இரவு 10 மணியளவில் கச்சத்தீவு அருகே தங்கச்சிமடத்தைச் சார்ந்த தாசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பிரிட்ஜோ, ஜெரோன், அந்தோணி, கிளிண்டஸ், சாம் பிரிட்ஜோ, ரிமோட்சன் ஆகிய 6 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலிலிருந்து, நான்கு வாட்டர் ஸ்கூட்டர் பைக்குகளிலிருந்த கடற்படையினர், வானத்தை நோக்கிச் சுட்டவாறு தாசனின் படகினை வெறித்தனமாக சுற்றி வளைத்தனர். பின்னர் படகை நோக்கி சரமாரியாக சுட்டதில், படகிலிருந்த பிரிட்ஜோ (21) என்ற மீனவர் கழுத்தில் குண்டடிப்பட்டு மயங்கி விழுந்தார். மேலும் படகின் டிரைவர் ஜெரோனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
படகில் இருந்த மற்ற மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரை உதவிக்காக தொடர்பு கொண்டனர். ஆனால் கடலோர காவல் படையின் உதவி கிடைக்காததால் காயத்துடன் டிரைவர் ஜெரோன் படகினை கரையை நோக்கி திருப்பினார். கரையை அடைவதற்கு முன்னதாகவே நடுவழியில் பிரிட்ஜோவின் உயிர் பிரிந்தது.
நள்ளிரவு 12 மணியளவில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரிட்ஜோவின் உடல், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காயமடைந்த மீனவர் ஜெரோனுக்கு ராமேசுவரம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேற்சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்குமுன், கடந்த 2011 ஏப்ரல் 2 அன்று உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை இந்திய அணி வென்றது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் அன்றிரவு பாக்ஜலசந்தி கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், மாரிமுத்து, அந்தோணிராஜ் ஆகிய 4 பேரை துப்பாக்கிச் சூடு மூலம் படுகொலை செய்தனர் என்பது நினைவுகூரத் தக்கது.