தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி
தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானதையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், இன்று (13.08.2018) மாலை நடைபெற்றது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகிய அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்திய இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், கருணாநிதியின் மறைவிற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது..
பின்னர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர்கள் ரஜினிகாந்த், ராதாரவி, பாக்யராஜ், ஜீவா, விக்ரம் பிரபு, நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, குட்டிபத்மினி உள்ளிட்டோர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் விஷால் பேசுகையில், “கலைஞர் இல்லாதது கலைத்துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பு. நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் கலைஞர் வைத்திருந்த பேனாவை பொக்கிஷமாக வைக்க வேண்டும் என்பது எங்களது ஆசை” என்றார்.
பாக்யராஜ் பேசுகையில் “பூம்புகார் படத்தில் கலைஞர் எழுதிய வசனங்களுக்கு பயரங்கர கைத்தட்டலை பார்த்தேன். அந்த படத்தில் வில்லனுக்கே கைத்தட்டும் அளவுக்கு கலைஞர் வசனம் எழுதியிருந்தார். கலைஞர் மறைவு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு” என்றார்
நாசர் பேசுகையில் “பராசக்தி திரைப்படம் வராமல் இருந்திருந்தால் தமிழ் சினிமா 20 ஆண்டுகள் பின் தங்கியிருக்கும். அவர் விட்டு சென்ற, தொட்டுச் சென்ற பணிகளை கோடிட்டு முடிப்பது தான் நமது கடமை” என்றார்.
கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், “கலையுலகின் சார்பில் எந்தச் சூழலில் எதைக் கேட்டாலும் கலைஞர் மறுப்பில்லாமல் செய்வார். ரஜினி ஒருமுறை வெள்ளைத் தாடியுடன் வந்திருந்தார். உடனே கலைஞர் என்னிடம், ‘போய் சொல்லுயா, இப்படி வெள்ளைத் தாடியுடன் வர்றாரு. எம்ஜிஆர் எப்படி தொப்பி, கண்ணாடி அணிந்து வருவாரு” என்றார். உடனே நான் ரஜினி வீட்டிற்குச் சென்று அவரிடம் சொன்னேன். மறுநாள் ஒரு திரையரங்கில் ரஜினி படம் பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது கலைஞரும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தார். உடனே கலைஞரிடம் சென்ற ரஜினி, ‘தாணுகிட்ட சொன்னீங்களாமே? பாருங்க… தாடி ஷேவிங் பண்ணிட்டேன்’ என்றார். அதற்கு கலைஞர், ‘பாருய்யா குழந்தையைப் போல் சொல்கிறான்’ என்றார். இப்படிப்பட்ட நெகிழ்வு தரக் கூடிய சம்பவங்கள் எத்தனையோ நடந்துள்ளது” என்றார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் கருணாநிதியின் மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.