பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக ஒன்று திரளும் திரையுலகம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரணியாகத் திரண்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட உள்ளதாக தமிழ் திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ் திரையுலக சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் நாசர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூறியது:
“பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு குறைத்தது. அவர்களையும் சேர்த்து ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர்.
“இந்த 7 பேரும் 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்துவிட்டதால், அவர்களை சம்பந்தப்பட்ட அரசு விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், இந்த தீர்ப்பு வந்த மறுநாளே முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி, இந்த 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார்.
“ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை நாடி, இவர்களின் விடுதலைக்கு எதிராக தடை வாங்கியது. அதன் தொடர்ச்சியாக, ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“இந்த ஏழு பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கையை முன்வைக்கிறோம். அரசியலமைப்பின் 161-வது பிரிவை பயன்படுத்தி அவர்களை விடுவிக்க வலியுறுத்துவோம்.
“இதனை வெறும் கடிதமாக கொடுக்காமல், முதல்வர் ஒதுக்கும் நேரத்தை வைத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.
“ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக திரளும்போது மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும்” என்றனர்.