“ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம்”: சத்யராஜ் ஆவேசம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடங்கிய மவுன போராட்டம் நண்பகல் 1 மணிக்கு முடிவடைந்தது.
இது மவுனப் போராட்டம் என அறிவிக்கப்பட்டதால், நட்சத்திர நடிகர்கள் யாரும் பேசவில்லை. ஆனால், தமிழின பற்றாளரான நடிகர் சத்யராஜை பேசுமாறு திரைப்பட தொழிலாளர்கள் உரத்த குரலில் வற்புறுத்தினார்கள்.
முதலில் பேச மறுத்த சத்யராஜ், பின்னர் பெருவாரியான தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பேசுகையில், ”சபை நாகரிகம் கருதி, நடிகர் சங்கம் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு, பேச வேண்டாம் என நினைத்தேன்.
நான் என்றுமே தமிழர்களின் பக்கமும் தமிழ் உணர்வாளர்களின் பக்கமும் தான் இருப்பேன். தமிழர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்.
எந்த அடக்குமுறைக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம்.
குரல் கொடுக்க தைரியம் இருப்பவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லையெனில், ஓடி ஒளிந்துகொள்ளுங்கள்” என்று ஆவேசமாக முழங்கினார் சத்யராஜ்.