“25 ஆயிரம் திரையுலகினர் கையெழுத்துடன் ஆளுநரிடம் மனு!” – விஷால்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடங்கிய மவுன போராட்டம் நண்பகல் 1 மணிக்கு முடிவடைந்தது.
இப்போராட்டத்தின்போது, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சரியாக விளையாத நெற்பயிரை விவசாயி ஒருவர் மேடைக்கு கொண்டு வந்து காண்பித்தார்.
அந்தப் பயிரை கையில் ஏந்தியபடி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் விஷால் பேசும்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தும் மனுவில் இன்று மட்டும் சுமார் 2 ஆயிரம் திரைத்துறையினரிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். இது போல், தமிழ் திரையுலகைச் சேர்ந்த 25 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளோம். ஏனெனில், விவசாயி வாழ வேண்டும். விவசாயமும் வாழ வேண்டும். விவசாயிகள் வாழ காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு கட்டாயம் அமைக்க வேண்டும்” என்றார் விஷால்.