“நடிகர் சங்கத்தை கலைக்க வேண்டும்”: தமிழக விவசாயிகள் சங்கம் ஆவேசம்!
“காவிரி பிரச்சனைக்காக போராட முன்வராத நடிகர் சங்கத்தால் தமிழகத்திற்கே தலைகுனிவு” என்றும், “தென்னிந்திய நடிகர் சங்க”த்தை கலைக்க வேண்டும் என்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கஙகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் ஆவேசமாக கூறினார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பி.ஆர்.பாண்டியன் அளித்துள்ள பேட்டி விபரம்:
கர்நாடகத்தில் நடிகர்கள் தண்ணீர் தரக் கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி, முதல்வர் ஜெயலலிதாவையும் அவமதித்துள்ளனர். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் கூடி போராட்டத்தில் பங்கெடுப்பார்கள் என்று தமிழகமே எதிர்பார்த்திருந்த நிலையில், கன்னடர்களின் போராட்டத்தை ஊக்கப்படுத்தும் விதத்திலும், தமிழர்களின் உணர்வுகளை நசுக்கும் வகையிலும், “போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்” என முடிவு எடுத்திருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழக முதல்வரை அவமதித்ததற்காக கண்டனம் தெரிவிக்கும் தமிழக நடிகர்கள், கன்னடர்களை எதிர்த்து போராட்டம் நடத்த தயங்குவது ஏன்?
தமிழகத்திலிருந்து நடிக்கச் சென்ற நடிகர்கள்கூட கன்னடர்களுக்கு ஆதரவளித்துள்ளனர். தமிழக மக்களை நம்பி பிழைப்பு நடத்தும் நடிகர்கள் சங்கம், தமிழர்களுக்கு பாதிப்பு வரும்போது தட்டிக்கழிப்பது ஏன்? உங்களுடைய தமிழ் உணர்வு எங்கே சென்றது?
காவிரி தண்ணீரை குடித்து உயிர் வாழக்கூடிய நடிகர்கள் நன்றி மறப்பது ஏன்? தமிழர்களை தமது பிழைப்பிற்கு பயன்படுத்தும் நடிகர்கள், தமிழர்கள் தாக்கப்படும்போது எதிரிகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் ஒளிந்து கொள்ளலாமா?
இதற்கெல்லாம் நடிகர் சங்கம் பதில் சொல்லியாக வேண்டும். இதனை தமிழக மக்களும், தமிழகமும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தை கலைத்துவிட்டு, தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அந்த அமைப்பிற்கு தமிழர்கள் தான் பொறுப்பிற்கு வர வேண்டும். அண்டை மாநில நடிகர்கள் யாரும் தமிழகத்தில் நடிப்பதையோ, தொழில் செய்வதையோ இனி அனுமதிக்கக் கூடாது.
நடிகர் சங்கத்தால் தலைகுனிவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழத்தில் இனி எந்த ஒரு நடிகனுக்கும் ரசிகர் மன்றம் வைக்கக் கூடாது என்ற முடிவை இளைஞர்கள் எடுக்க வேண்டும். இனி தமிழக விவசாயிகளுக்கு எதிரானவர்கள் நடிகர்கள். தமிழகத்தில் உள்ள ரசிகர் மன்றங்களை, சங்கங்களை உடனடியாக கலைக்க வேண்டும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.