“என்னை சித்ரவதை செய்த என் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்”: ரம்பா மனு முழுவிவரம்!

“அடித்து உதைத்து சித்ரவதை செய்த என் கணவர் இந்திரகுமாருடன் நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

இலங்கை தமிழரான இந்திரகுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடா நாட்டில் குடியேறினார். சிவில் என்ஜினீயரான அவர் கனடா நாட்டில் ‘மேஜிக்வுட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 2009–ம் ஆண்டு கலைப்புலி தாணு மூலம் எனக்கு அறிமுகமானார். அப்போது தன் நிறுவனத்தின் விளம்பர தூதராக என்னை அறிவித்தார்.

இதற்காக எனக்கு பி.எம்.டபிள்யு. காரை அன்பளிப்பாக வழங்குவதாக அப்போது பத்திரிகைகளில் பேட்டி அளித்தார். ஆனால், அந்த கார் அவரது சகோதரர் தவக்குமார் பெயரில் தான் இதுவரை உள்ளது. நாங்கள் இருவரும் காதலித்து 2010–ம் ஆண்டு ஜனவரி 27–ந் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டோம்.

ஆனால், இந்திரகுமாருக்கு 2000–ம் ஆண்டு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அவரை 2003–ம் ஆண்டு இந்திரகுமார் விவாகரத்து செய்துவிட்டார். இதை என்னிடம் முதலில் அவர் தெரிவிக்கவில்லை.

கனடா நாட்டில் நாங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என்று என் கணவரின் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், 2011–ம் ஆண்டு எங்களுக்கு லாண்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இதனால் என் கணவரும், அவரது குடும்பத்தினரும் அதிருப்தியடைந்தனர். பெண் குழந்தை பிறந்ததால், இந்து முறைப்படி செய்ய வேண்டிய எந்த ஒரு சடங்கையும் அவர்கள் செய்யவில்லை. இந்த மனவருத்தத்தை சரிசெய்ய நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.

அவர்கள் தினமும் என்னை கொடுமைப்படுத்தினர். என் கணவர் தினமும் குடிபோதையில் வந்து என்னை சித்ரவதை செய்ய தொடங்கினார். என் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் தன் பெயருக்கு எழுதி வைக்கவேண்டும் என்று கேட்டார். இதற்கு சம்மதிக்காததால் என்னை தினமும் அடித்து உதைத்தார்.

இந்த கொடுமையை தாங்க முடியாமல் 2012–ம் ஆண்டு போலீசுக்கு போன் மூலம் புகார் கொடுத்தேன். கனடா நாட்டு போலீசார் என் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். அப்போது போலீசில் உண்மையை சொன்னால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன். குழந்தையையும் உன்னிடம் இருந்து பிரித்துவிடுவேன் என்று என் கணவர் என்னை மிரட்டினார். இதனால் போலீசாரிடம் உண்மையை சொல்லாமல் மவுனமாக இருந்துவிட்டேன்.

அதன்பின்னர் என்னை இந்தியாவுக்கு அனுப்ப என் கணவரின் குடும்பத்தினர் முயற்சித்தனர். 2012–ம் ஆண்டு என் மகளை இந்தியாவுக்கு நான் கடத்தி செல்ல முயற்சிப்பதாக என் மீது டோரண்டோ போலீசில் என் கணவர் புகார் செய்தார். அதேபோல, கனடாவில் உள்ள குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து என்னிடம் இருந்து என் குழந்தையை சிறிது காலம் பிரித்துவிட்டனர். பல்வேறு சட்ட போராட்டத்துக்கு பின்னர் என் மகளை மீட்டேன்.

பின்னர் சிறிது காலம் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். இதில் மீண்டும் நான் கர்ப்பம் அடைந்தேன். இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என்று மீண்டும் என் கணவர் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் எனக்கு ஷாசா என்ற 2–வது பெண் குழந்தை பிறந்தது.

இதனால் மீண்டும் குடும்பத்தில் பிரச்சினை தொடங்கியது. என் கணவரின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் என்னை அசிங்கமாக பேசி கொடுமைப்படுத்தினர். என் கணவரும் மீண்டும் குடிபோதையில் வந்து என்னை கொடுமைப்படுத்த தொடங்கினார். தற்போது நான் சென்னை வந்துவிட்டேன்.

என் கணவருக்கு நல்ல மனைவியாக வாழ்ந்து இருக்கிறேன். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். ஆனால், அவர் என்னை விட்டு பிரிய திட்டமிடுகிறார். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் ரம்பா கூறியுள்ளார்.

இந்த மனுவை குடும்பநல நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. விசாரணையை டிசம்பர் 3–ந் தேதிக்கு தள்ளிவைத்து, அன்று இந்திரகுமார் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.