பிக்பாஸ் சீசன் 6: கையாள முடியாத போட்டியாளர்களை கமல் இம்முறைதான் எதிர்கொள்கிறார்!
உங்களின் பேச்சு அடுத்தவரை பாதிக்குமா என சிந்திக்க empathy வேண்டும். அடுத்தவரை பாதித்துவிடக் கூடாது என்பதற்கு compassion வேண்டும். அடுத்தவரை பாதித்தால் அதை உணர்ந்து சரி செய்வதற்கு sympathy வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்வதற்கு integrity-யும் introspection-ம் வேண்டும்.
இதுவரையிலான பிக் பாஸ் தொடர்களிலேயே, கையாள முடியாத போட்டியாளர்களை கமல் இம்முறைதான் எதிர்கொள்கிறார் எனத் தோன்றுகிறது.
அசீம், எல்லா தவறுகளையும் செய்துவிட்டு சனிக்கிழமை எபிசோட் வந்ததும் அரசியல்வாதியின் அறிக்கை போன்று நியாய உணர்வுடன் பேசுவதாக காண்பித்து நடிப்பார்.
அசல் கோளாறு, கமலிடமே வந்து ‘பாதி வேலைதான் முடிஞ்சுது’ என இரட்டை அர்த்தத்தில் பேசி விட்டுச் செல்கிறார்.
ஷெரினா, தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை குறும்படம் பார்த்தும் உள்வாங்க முடியவில்லை. ‘மக்கள் பார்க்கிறார்கள். அது போதும்’ என உச்சபட்ச நகைச்சுவை செய்கிறார்.
வேறுமொழியில் பேசாதீர்கள் என கமல் தொடர்ந்து சொல்லியும் நேற்று உட்கார்ந்து ஷெரினாவும் ஆயிஷாவும் மலையாளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் பத்தியில் சொன்ன எதுவும் இல்லாமல் தன்முனைப்பு, தன்னலம் மட்டுமே ஊட்டி வளர்க்கப்படிருக்கும் ஒரு தலைமுறையை கமல் திரையில் சந்திக்கிறார். நாமும் பார்க்கிறோம். வீடுகளில் நாம் வளர்க்கும் பிள்ளைகளோடு ஒப்பிட்டுக் கொள்வோம்.
எவ்வளவோ விளக்கியும் கூட மிக சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு தான் செய்த தவறை மறைக்க முயற்சிக்கிறார் ஆயிஷா. சொன்ன விஷயத்தையே மீண்டும் கேள்வி கேட்கும்போது ஒரு கட்டத்தில் கமலே தலையைச் சொறிய நிலைக்கு தள்ளப்படுகிறார். மீண்டும் சாமர்த்தியத்தை காட்ட முற்பட்டு கமலை எதிர்த்து வார்த்தை விடுகிறார் ஆயிஷா.
ஆயிஷாவின் தொண்டை நரம்பு புடைக்க கத்தும் தன்மை அவரது இயல்பாக இருக்கலாம். ஆனால் உண்மைக்கு எப்போதும் சத்தம் தேவையில்லை என்பதை அவருக்கு பாவம் எவரும் உணர்த்தவில்லை.
அசீமிடம் பேசும்போது கூட கமல் ‘சத்தம் போட்டா எல்லா அமைதியாயிடுவாங்க அப்படின்னு நினைக்கறீங்க. ஒருமுறை கடலலைக்கிட்ட அதை ட்ரை பண்ணிப் பாருங்களேன்’ என்றார். அசீமே அதை பொருட்படுத்தவில்லை. ஆயிஷா எங்கிருந்து?
அதிலும் கமலின் இத்தகைய புத்திசாலித்தன ‘நறுக்’குகளின் சிறப்பு, நயம் போன்றவற்றை கூட உணரும் சிந்தை அங்கு குறைவான பேருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது என்பதுதான் இந்தத் தலைமுறை நமக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி.
மலையாளத்தில் நேற்று கூட ‘இவர் சொல்வதைதான் காட்டுவாங்க’ என கமலைக் குறிப்பிடுகிறார் ஆயிஷா. மக்கள் பார்ப்பார்கள் என ஷெரினா சொன்னதும் ‘மக்கள் பார்த்தாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க’ என்கிறார் ஆயிஷா.
அசீம், தனது அருவருப்பான நடத்தை மற்றும் சிந்தை ஆகியவற்றை வெளிப்படுத்திவிட்டு இறுதி நாளில் ‘நான் செய்தது தவறுதான்’ என சொல்லி விட்டால் மக்கள் விட்டுவிடுவார்கள் என நினைக்கிறார். மன்னிப்பு என்பது திருந்தக் கேட்பது; திரும்பத் திரும்பக் கேட்பது அல்ல.
அசல் கோளாறு, தன் பெயருக்கான பிராண்டாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் அதையே கவனித்தார். கிளம்பும்போதும் கூட நிவாஷினியை அணைத்து ‘அப்படி இப்படி இருக்கணும்னா வெளியே வா’ என்கிறார். பிறகு கமலிடமும் இறுதி இரட்டை அர்த்த வசனம்!
TTF Vasan போன்றோர் எங்கிருந்து திடீரென வந்தார்கள் என ஆச்சரியப்பட்டோம் அல்லவா, எங்கிருந்தும் அல்ல, நம் வீடுகளில் இருந்துதான்.
இவர்களே இன்றைய தலைமுறை!
பணமீட்டுதல், self boasting, toxicity, manipulative thinking, பைனரி சிந்தனை, இவ்வுலகின் எல்லாவற்றையும் எல்லாரையும் தன்னுடைய நலனுக்கு மட்டுமே பயன்படுத்த நினைக்கும் தன்மை ஆகியவற்றையே இவர்களுக்கு ஊட்டி நாம் வளர்க்கிறோம்.
அறம் சார்ந்த சிந்தனை, மனிதம் மற்றும் நடத்தை ஆகியவை நயா பைசா (அல்லது ஒரு லைக்) பெறாத விஷயங்கள் என்கிற பார்வை, பாசாங்கு ஆகியவற்றையே அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் கட்டப்போவதுதான் எதிர்காலம். அது பிக் பாஸ் வீட்டை விடக் கொடுமையாக இருக்கும். அங்கு குறும்படம் போட முடியாது. சரி, தவறுகளை அளந்து பார்க்கும் சனி, ஞாயிறு எபிசோடுகளும் இருக்காது. எலிமினேஷன் மட்டும்தான் இருக்கும்.
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!
RAJASANGEETHAN