ஸ்வீட்ஹார்ட் – விமர்சனம்

நடிப்பு: ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், பௌஸி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஸ்வினீத் எஸ்.சுகுமார்

ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்

படத்தொகுப்பு: தமிழரசன்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

தயாரிப்பு: ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ்

தயாரிப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

வெளியீடு: 5 ஸ்டார் செந்தில்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

சிறு வயதில் தன்னையும், தன் அப்பாவையும் உதறித் தள்ளிவிட்டு, அம்மா வேறொருவருடன் சென்றுவிட்ட கசப்பான அனுபவம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனக்காயம் காரணமாக திருமணம், மகப்பேறு உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகள் மற்றும் குடும்ப அமைப்பு மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் நாயகன் வாசு (ரியோ ராஜ்).
ஆனால், அவரது காதலி மனு (கோபிகா ரமேஷ்) திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது முற்றி, பிரேக்-அப் சொல்லி பிரிந்து விடுகிறார்கள்.

பிரிந்த பிறகு தான் மனு கர்ப்பமடைந்திருப்பது தெரிய வருகிறது. கருவை கலைத்துவிடும்படி சொல்கிறார் வாசு. குழந்தையைப் பெற்றுகொண்டு வாசுவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் மனுவின் விருப்பம். எனினும், தன் விருப்பத்தை ஓரங்கட்டிவிட்டு, வாசுவின் விருப்பப்படி கருவைக் கலைக்க சம்மதிக்கிறார் மனு.

இதற்குள் மனுவின் பெற்றோர் அவரை வீட்டுச்சிறையில் பூட்டி வைக்க, கருவைக் கலைக்க அவர் மருத்துவமனைக்கு செல்ல முடியாத இக்கட்டான நிலைமை ஏற்படுகிறது. இச்சிக்கலை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்? இறுதியில், வாசு மனம் மாறினாரா? அல்லது அதற்கு நேர்மாறாக மனு மனம் மாறினாரா? இருவரும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு காதல், காமெடி கலந்து விடை அளிக்கிறது ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் வாசுவாக ரியோ ராஜ் நடித்திருக்கிறார். அவரது வெற்றிப்படமான ‘ஜோ’வில் கிடைத்த ‘லவ்வர் பாய்’ இமேஜை இதில் தக்க வைக்கப் போராடியிருக்கிறார். காதலியைப் புரிந்து கொள்ளாமல் சீறுவது, தேவையில்லாத கோபம், ஆக்ரோஷம், கெத்து, ரொமான்ஸ் ஆகியவற்றோடு குடும்ப உறவுகள் மீது விரக்தி, மகப்பேறு மீது விருப்பமின்மை போன்ற அழுத்தமான உணர்ச்சிகளையும் ஓரளவு சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். என்றாலும், இன்னும் சிறிது நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொள்வது அவரது நல்ல எதிர்காலத்துக்குப் பயன்படும்.

நாயகி மனுவாக கோபிகா ரமேஷ் நடித்திருக்கிறார். பதற்றம், காதல், கோபம், ஆற்றாமை, அழுகை என எந்நேரமும் உணர்ச்சிகளோடு மல்லுக்கட்டும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தி, படத்திற்குத் தூணாக நின்று வலுசேர்த்திருக்கிறார்.

நாயகனின் நண்பர் செந்திலாக வரும் அருணாச்சலேஸ்வரன், தன் உடல்மொழியாலும் கவுன்ட்டர்களாலும் காமெடியை வாரி இறைத்து அவ்வப்போது பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

காயத்ரியாக வரும் பெளஸி உட்பட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்வினீத் எஸ்.சுகுமார். காதல் மற்றும் காமெடி மூலம் குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்த முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் சில காட்சிகள் நகைச்சுவையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது படத்தில் பேசப்பட்டிருக்கும் காதலில் அழுத்தம் இல்லாததால், படம் மனசைத் தொடுவதாக இல்லை.

யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும், குரலிலும் ‘கதவைத் திறந்தாயே’ பாடல் அருமை. பின்னணி இசை கிளைமாக்ஸில் சூப்பர்.

பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை வண்ணமயமாக ஆக்கியிருக்கிறது.

நான்-லீனியர் பாணியிலான தமிழரசனின் படத்தொகுப்பு, சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

‘ஸ்வீட்ஹார்ட்’ – எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் பார்த்தால் பிடிக்கும்!

ரேட்டிங்: 3/5