சுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி?

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான கூராய்வு, அவரது உடலின் மீது மட்டும் நடத்தப்பட்டால் போதுமானதா என்பதே நம் கேள்வி.

“கூராய்வின்போது அதனை உடனிருந்து கண்காணிப்பதற்கு தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும்” என்பது ராம்குமார் குடும்பத்தினரின் கோரிக்கை. “அது அரசு மருத்துவர்களின் நாணயத்தைச் சந்தேகத்துக்கு ஆளாக்குகின்ற தவறான முன்மாதிரி ஆகிவிடும்” என்று கூறி அக்கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது

கண்காணிப்பை மறுப்பதன் மூலம்தான் நிறுவனங்களின்  மீதான மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நீதிமன்றத்தின் கருத்து நகைப்புக்குரியது. மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களில் தலையாயவையான போலீசின் மீதும் சிறைத்துறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பாருங்கள்!

ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்தவுடனே, ஆகப் பெரும்பான்மையான மக்கள் அது கொலைதான் என்று ஆணித்தரமாகக் கருதினார்கள். இது போலீசைப் பற்றியும் சிறைத்துறை பற்றியும் இந்த ஒரு வழக்கின் மூலம் மக்கள் மனதில் உருவான கருத்தல்ல. விஷ்ணுப்பிரியா, கோகுல்ராஜ், ராமஜெயம் கொலை வழக்குகளிலும், எஸ்.ஆர்.எம். பச்சமுத்து, அன்புநாதன், கோவை கன்டெயினர், சேலம் ரயில் கொள்ளை போன்றவற்றிலும், சிவகாசி ஜெயலட்சுமி தொடங்கி கரூர் ஹவாலா திருட்டு வரையிலான எண்ணற்ற வழக்குகளின் வழியாகவும்  தனது “திறமை, ஒழுக்கம், நேர்மை” பற்றி போலீசே மக்களிடம் உருவாக்கியுள்ள கருத்து.

ராம்குமாரின் தற்கொலை குறித்து போலீசு கூறிய கதை என்ன? “புழல் சிறையின் சமையல் அறைக்குச் சென்று, பத்தடி உயரத்தில் இருந்த சுவிட்சு பெட்டியை உடைத்து, மின்கம்பியைக் கடித்தும், தனது உடம்பில் சுற்றிக்கொண்டும் தற்கொலை செய்து கொண்டார்” என்பது முதல் கதை. “அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த குடத்திலிருந்து தண்ணீர் அருந்துவதற்காகத் திறந்துவிடுமாறு கேட்டு, திறந்தவுடன், தடாலென சுவிட்சு பெட்டியை உடைத்து, மின்கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார்” என்பது இரண்டாவது கதை.

“சமையல் அறை சி.சி.டி.வி. கேமரா பழுதடைந்து போனதால் தற்கொலை செய்துகொண்ட காட்சி பதிவாகவில்லை” என முதல் கதைக்குத் தோதாக துணைக்கதை சொன்ன சிறைத்துறை, இரண்டாவது கதைக்கு ஏற்ப, “உடைந்துபோன சுவிட்சு பெட்டி, சிறை அறையின் கதவுக்கு வெளியே உள்ள தண்ணீர்க்குடம்” ஆகியவற்றின் படத்தை வெளியிட்டிருக்கிறது. நிறுவனங்களின் கவுரவத்தைப் பாதுகாப்பதில் பேரார்வமிக்கவரான நீதிபதி சந்துருவாலேயே போலீசின் இந்தக் கதைகளைச் சகிக்க இயலவில்லை எனும்போது சாதாரண மக்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

“இது கொலையல்ல” என்று சந்தேகிப்பதற்கு நம் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். சிறைத்துறையினரோ போலீசோ இதனைச் செய்திருக்கும் பட்சத்தில் இவ்வளவு முட்டாள்தனமாகவா செய்திருப்பார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. “இவ்வளவு அலட்சியமாக செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால்தான் இதை போலீசு செய்திருக்கும் என்று கருத வேண்டியிருக்கிறது” என்பதுதான் இதற்கான பதில். எந்தக் குற்றத்துக்காகவும் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்ற திமிர்தான், அவர்களுடைய இந்த அலட்சியத்துக்கான அடிப்படை.

ஒரு கொலைக்குற்ற வழக்கில் புலனாய்வு நடத்தி குற்றவாளியை அடையாளம் காட்டுவதென்பது நமக்குச் சாத்தியமற்றது. சுவாதி கொலையையே எடுத்துக் கொள்வோம். தன்னுடைய காதலை நிராகரிக்கும் பெண்ணைக் கொலையும் செய்யலாம் என்ற அளவுக்கு ஆணாதிக்க வெறித்தனம் பரவியிருக்கின்ற பண்பாட்டுச் சூழலில், ராம்குமாரோ அல்லது வேறொரு இளைஞனோ சுவாதியைக் கொலை செய்திருக்கலாம்.

ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்த காரணத்தினாலோ, அல்லது கருவுற்ற காரணத்தினாலோ அவளுடைய உற்றார் மூலமாகவே அவள் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம். கொலை நடந்தவுடனே அதனை பிலால் என்ற இசுலாமிய இளைஞனுடன் தொடர்புபடுத்திய சங்கப் பரிவாரத்தினர், உ.பி.யில் “லவ் ஜிகாத்” என்றொரு பொய்க் காரணத்தை ஜோடித்து முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரம் நடத்தியதைப் போல, இந்தக் கொலையின் பின்னணியிலும் ஒரு திட்டத்துடன் இருந்திருக்கலாம். இந்தக் காரணங்களுக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஊகிக்க முடியாத, வேறு ஏதோவொரு காரணத்துக்காக,  கூலிப்படையினரால் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

சுவாதி கொலை ஒரு கொடூரமான சம்பவம் என்பதைத் தாண்டி, அக்கொலையைப் பயன்படுத்தி கலவரத்தைத் தூண்டுவதற்கு பார்ப்பன  இந்து மதவெறிக் கும்பல் தீவிரமாக முயன்றதை யாராலும் மறுக்கவியலாது.  இருப்பினும், அந்தக் கொலை நடந்தவுடனே சமூக வலைத்தளங்களில் மதவெறி, சாதிவெறியைத் தூண்டி கருத்துப் பரப்பிய ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பார்ப்பன வெறியர்களை போலீசு விசாரிக்கக்கூட இல்லை. அதேபோல, ராம்குமார் கைது செய்யப்பட்டவுடன் அவருக்கே தெரியாமல் அவரைப் பிணையில் எடுக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு வழக்கறிஞரின் பாத்திரமும் விசாரிக்கப்படவில்லை.

கொலை செய்யப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன் யாரோ ஒரு இளைஞன் சுவாதியைக் கன்னத்தில் அறைந்ததாகவும், அதற்கு அவள் எதிர்ப்பு காட்டாதது ஆச்சரியமாக இருந்தது என்றும், அந்த இளைஞன் ராம்குமார் அல்ல என்றும் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவர் கூறியிருக்கும் சாட்சியத்தின் திசையில் எந்த விசாரணையும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

“சுவாதியின் பெற்றோர் விசாரணைக்கு பெரிதும் ஒத்துழைத்தார்கள்” என்று வலிந்து அறிவித்தார் காவல்துறை ஆணையர். கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே, “இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். அடையாள அணிவகுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே ராம்குமாரின் படம் வெளியிடப்பட்டது. இவையனைத்தும் ஒரு குற்ற வழக்கை விசாரிக்கும் முறைக்கு எதிரானவை.

கைது செய்யப்பட்டபோது ராம்குமார் தற்கொலைக்கு முயன்ற காரணத்தினால், சிறையில் அவருக்கு மனநல மருத்துவ சிகிச்சை தரப்பட்டதாக போலீசு கூறியது. “தற்கொலைக்கு முயன்ற ஒரு கைதியைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சிறையில் என்ன ஏற்பாடு செய்யப்பட்டது?” என்று  கேள்விக்கு போலீசிடமிருந்து பதில் இல்லை.

“ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம்” என்று சவடால் பேசிய போலீசு 3 மாதங்களுக்குப் பின்னரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் ராம்குமார் பிணையில் வெளியே வந்து பேசத் தொடங்கினால் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டுத்தான், அவர் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கிறது என்று சந்தேகிப்பதற்கு போதுமான முகாந்திரங்கள் போலீசின் நடவடிக்கைகளில் உள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிப்பதற்கோ, மறுப்பதற்கோ ராம்குமார் உயிருடன் இல்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போலீசுதான் இரண்டு கொலைகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். “ராம்குமார் மரணத்தின் பின்னுள்ள உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்கிறார், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி போடப்பட்ட மனுவை நிராகரித்ததுடன், தமிழக போலீசின் விசாரணை சரியான திசையில் செல்வதாகப் பாராட்டும் தெரிவித்திருக்கிறார் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி. இதை அவர் கவனிக்கவில்லை போலும்!

அப்படியானால், வேறு எந்த நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தச் சொல்வது? “இன்ன நீதிபதி விசாரணையைக் கண்காணிக்க வேண்டும்” என்று கேட்பதும், “இன்ன மருத்துவர் கூராய்வை பார்வையிட வேண்டும்” என்று கேட்பதும், அந்நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாகிவிடாதா?

ராம்குமார், சுவாதி போன்றோரின் உயிரைக் காட்டிலும் நிறுவனங்களின் மாண்பல்லவோ ஜனநாயகத்துக்கு முக்கியம்!

திப்பு

Courtesy: vinavu.com