சுவாதி கொலை வழக்கில் பரபரப்பு: காதலர் பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை!

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி, கடந்த ஜூன் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற தலித் இளைஞரை போலீசார் கைது செய்து பழல் சிறையில் அடைத்துள்ளனர்.
கொலையுண்ட சுவாதியின் “காதலர்” என்று சிலரும், “நண்பர்” என்று வேறு சிலரும் குறிப்பிடும் முகமது பிலால் சித்திக்கிடம் இக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் ஏற்கனவே பலமுறை விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் முகமது பிலாலிடம் போலீஸ் உயரதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விசாரணையில், சுவாதி கொலை குறித்து பல்வேறு கேள்விகளை பிலாலிடம் போலீசார் கேட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில், “சுவாதியை ஒருதலையாய் காதலித்த ராம்குமாரே குற்றவாளி” என்று போலீசார் ஆரம்பம் முதலே சொல்லிக்கொண்டிருக்க, “ராம்குமார் குற்றவாளி இல்லை” என்று அவரது வழக்கறிஞர் ராமராஜூம், “இது மதம் கடந்த காதல் காரணமாக நிகழ்ந்த ஆணவக் கொலையாக இருக்கலாம். உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கூறிவரும் நிலையில், முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியிருப்பது, பல்வேறு தரப்பினராலும் பரபரப்புடன் கூர்ந்து நோக்கப்பட்டு வருகிறது.