சுவாதியின் “பெயரை” காப்பாற்றும் போலீசார்: பிலால் சொன்ன தகவல்களை பதிவு செய்ய மறுப்பு!
சுவாதி கொலை குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ள ‘எவிடன்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கதிர், சுவாதியின் காதலர் என கூறப்படும் பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை போலீசார் பதிவு செய்யாமல், இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று பிலாலுக்கு அறிவுறுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான ‘எவிடன்ஸ்’ கதிர் பதிவு:-
குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரிகள் அனைத்து தகவல்களையும் வாக்குமூலங்களையும் முழுமையாக பதிவு செய்ய வேண்டும். ஆனால் சுவாதி படுகொலை வழக்கில் பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை போலீசார் வெளியிட மறுக்கின்றனர் என்பது உண்மை. அது மட்டுமல்லாமல், பெறப்பட்ட தகவல்களை பதிவு செய்யாமல் இதை வெளியே சொல்ல வேண்டாமென்றும் பிலாலுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இறந்துபோன சுவாதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்கிற கருத்தில் மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் ஒரு முழுமையான உண்மையை எப்படி மறைக்க முடியும்?
பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை முழுமையாக பதிவு செய்யாமல் ராம்குமாரை குற்றப்படுத்துகிற தகவலை மட்டும் பதிவு செய்வதும், ராம்குமாரிடம் பெறப்பட்ட தகவல்களோடு கூடுதலாக இணைத்து பதிவு செய்வதும் சட்டத்திற்கு புறம்பானது என்பேன். இதுபோன்ற வாக்குமூலங்கள் பொய்யானவை.
கடந்த 5 வருடமாக புலன் விசாரணை நிலுவை பெருமளவு காவல்துறையிடமே இருக்கிறது. நீதிமன்ற விசாரணைக்கு பெரும்பாலான வழக்குகள் எடுத்து செல்லப்படுவது இல்லை. அதற்கு முக்கிய காரணம் விசாரணை போக்கில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அலைபேசி அலைவரிசை, சிசிடிவி கேமரா போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை மட்டுமே போலீசார் அதிகமாக நம்புகின்றனர். களஆய்வு, சாட்சிகளை பலப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் சமீபகாலம் காவல்துறையிடம் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
டிஜிட்டல் ஆதாரங்கள் எல்லா வழக்கிலும் நீதியை பெற்றுக் கொடுத்து விடாது. முக்கியமான சில வழக்குகளில் மட்டும்தான் டிஜிட்டல் ஆதாரங்கள் நீதியை பெற்றுக் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், இது போன்ற கருவி சார்ந்த ஆதாரங்களை குற்றத்தரப்பினர் எப்படி வேண்டுமென்றாலும் மறுக்கலாம்.
சுவாதியை படுகொலை செய்த குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் இங்கு எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ராம்குமார் குற்றவாளி என்றால் கண்டிப்பாக தண்டிக்கப்படலாம். ஆனால், இந்த விசாரணையில் அரசியல் மற்றும் மதசக்திகள் குறுக்கீடு இருப்பது உண்மை. ஆகவே கொலைக்கான காரணங்கள் கண்டிப்பாக கண்டறியப்பட வேண்டும். விசாரணையும் நேர்மையாக நடைபெற வேண்டும்.
‘எவிடன்ஸ்’ கதிர்
சமூக செயல்பாட்டாளர்
# # # # # #
‘எவிடன்ஸ்’ கதிரின் மேற்கண்ட பதிவு குறித்து இளங்கோவன் பாலகிருஷ்ணன் என்பவர் பதிவிட்டுள்ள கமெண்ட்:-
அருமையான – நேர்மையான பதிவு.
//இறந்து போன சுவாதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்கிற கருத்தில் மாறுபாடு எதுவும் இல்லை.//
எது நற்பெயர் – என்ற புரிதலில் இங்கு மொத்தச் சிக்கலும் இருக்கிறது.
வயது வந்த – சம்பாதிக்கின்ற ஒரு பெண் தனக்கான துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டபூர்வமாகவும் இங்குண்டு.
அப்படியான செயல்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பனவாக கருதப்பட்டால், அது கருதுபவர்களின் குற்றமே ஒழிய அந்தப் பெண்ணின் குற்றம் அல்ல.
கூடுதலாக, ஒரு மதம் – சாதியைச் சேர்ந்த பெண், அந்த மதம் – சாதியைச் சேர்ந்த ஆணிடம்தான் பழகியாக வேண்டும் என நினைப்பதும், எதிர்பார்ப்பதும் மனநோய்.
அந்த மனநோய்க்கு அரசு அமைப்புக்களும், காவல்துறையும் சாதகமாக இருக்கக் கூடாது.
இந்த விசாரணையில் “நற்பெயருக்கான களங்கம்” – என்ற போர்வையில் ரகசியமாக வைக்கப்படும் காரியங்கள் அனைத்தும், பொதுவெளியில் பெண்கள் சுதந்திரமாய் நடமாடுவதற்கு எதிரான மனித விரோதக் காரியமே ஆகும்.
//சுவாதியை படுகொலை செய்த குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் இங்கு எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ராம்குமார் குற்றவாளி என்றால் கண்டிப்பாக தண்டிக்கப்படலாம். ஆனால், இந்த விசாரணையில் அரசியல் மற்றும் மத சக்திகள் குறுக்கீடு இருப்பது உண்மை. ஆகவே கொலைக்கான காரணங்கள் கண்டிப்பாக கண்டறியப்பட வேண்டும். விசாரணையும் நேர்மையாக நடைபெற வேண்டும்.//
என்பது அழுத்தமாய் சொல்லப்பட வேண்டிய கருத்து.
– இளங்கோவன் பாலகிருஷ்ணன்