சுழல் 2 – தி வோர்டெக்ஸ்: விமர்சனம்

நடிப்பு: கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்சி, ஷிரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், சாந்தினி தமிழரசன், அஸ்வினி நம்பியார் மற்றும் பலர்

எழுத்து & உருவாக்கம்: புஷ்கர் – காயத்ரி

இயக்குநர்கள்: பிரம்மா – சர்ஜுன் கே.எம்

ஒளிப்பதிவு: ஆபிரகாம் ஜோசப்

படத்தொகுப்பு: ரிச்சர்ட் கெவின்

இசை: சாம் சி.எஸ்

தயாரிப்பு: வால்வாட்சர் பிலிம்ஸ்

ஒடிடி தளம்: அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் பிரபல இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி எழுத்து மற்றும் உருவாக்கத்தில் தயாராகி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏற்கெனவே வெளியான ‘சுழல் 1’ இணையத் தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தற்போது அதே ஓடிடி தளத்தில் ‘சுழல் 2’ இணையத் தொடர் வெளியாகியுள்ளது.

‘சுழல் 1’-ல் மகள் உறவுமுறை என்றுகூட பாராமல் தனக்கும், தன் தங்கைக்கும் பாலியல் தொல்லைகள் கொடுத்துவந்த சித்தப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் நாயகி நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்). கொலைக்கு அவர் பயன்படுத்திய துப்பாக்கி அவருடைய நண்பரும், சப்-இன்ஸ்பெக்டருமான நாயகன் சக்கரவர்த்திக்கு (கதிர்) உரியது என்பதால், சக்கரவர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

’சுழல் 2’-ல், நாயகன் சக்கரவர்த்தி தனது சினேகிதி நந்தினிக்காக வாதாடி அவரை சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக பிரபல வழக்கறிஞரும், பொதுநலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலருமான செல்லப்பாவை (லால்) ஏற்பாடு செய்கிறார்.

இந்நிலையில், அஷ்டகாளி திருவிழா ஆரம்பமாகும் சூழலில், வழக்கறிஞர் செல்லப்பா, கடற்கரையில் உள்ள தனது கெஸ்ட் ஹவுஸில், மர்மமான முறையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடக்கிறார். இந்த வழக்கு விசாரணையை, இன்ஸ்பெக்டர் மூர்த்தியுடன் (சரவணன்) அதிகாரப்பூர்வமற்ற முறையில் இணைந்து சக்கரவர்த்தி துவக்குகிறார்.

செல்லப்பா சடலமாகக் கிடந்த அறையில் உள்ள ஓர் அலமாரிக்குள் முத்து (கௌரி கிஷன்) என்ற இளம்பெண் கைத்துப்பாக்கி சகிதம் பதுங்கியிருப்பதை சக்கரவர்த்தி கண்டுபிடிக்கிறார். “நான் தான் செல்லப்பாவை சுட்டுக் கொன்றேன்” என்று முத்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். எனினும், முத்து தான் செல்லப்பாவை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர இயலாமல் சக்கரவர்த்தி குழம்பித் தவிக்கிறார். காரணம், முத்து பதுங்கியிருந்த அலமாரியின் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது தான்.

இந்த குழப்பம் போதாதென்று, வெவ்வேறு ஊர்களில் உள்ள ஏழு இளம்பெண்கள், தத்தமது ஊரிலுள்ள போலீஸ் நிலையத்துக்குத் தனித் தனியே சென்று, “வழக்கறிஞர் செல்லப்பாவை நான் தான் சுட்டுக் கொன்றேன்” என்று – முத்துவைப் போலவே – எழுத்துப் பிசகாமல் அப்படியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இவ்விதம் முத்துவையும் சேர்த்து, ஒருவரோடொருவர் தொடர்பில்லாத எட்டு இளம்பெண்கள் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது சக்கரவர்த்திக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது. மேலும், அந்த எட்டு இளம்பெண்களும் அஷ்டகாளிகளின் பெயர்களைக் கொண்டவர்களாக இருப்பது பெரும் புதிராகத் தெரிகிறது. துப்பு கிடைக்காமல் தவிக்கிறார் சக்கரவர்த்தி.

செல்லப்பாவைக் கொன்றது யார்? என்ன காரணத்துக்காக, எப்படி கொலை செய்யப்பட்டார்? சரணடைந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த எட்டு இளம்பெண்கள் யார்? அவர்களுக்கும் செல்லப்பாவுக்கும், அவர்களுக்கும் கொலைக்கும் என்ன தொடர்பு? அஷ்டகாளிகளின் பெயர்கள் அவர்களுக்கு எப்படி வந்தது? இந்த முடிச்சுகளை நாயகன் சக்கரவர்த்தி எப்படி அவிழ்க்கிறார்? என்பன போன்ற இறுக்கமான கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன், சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது, எட்டு எபிசோடுகளைக் கொண்ட ‘சுழல் 2’ இணையத் தொடர்.

பெண்களுக்கான தனிச்சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி நாயகி நந்தினியாக ஐஸ்வர்யா ராஜேஷ் வருகிறார். சிறையில் அவர் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்துகின்றன. கொலை செய்த குற்றஉணர்வில், அப்பாவி முகத்துடன் அவர் தவிக்கும் காட்சிகள் அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கின்றன. சரணடைந்த எட்டு பெண்களும் அவர் இருக்கும் அதே சிறைக்கு கொண்டு வரப்பட்டபின், அவர்களது பின்னணி பற்றிய தகவல்களை சேகரிப்பது, அவர்களுக்கு நேரும் துன்பங்களிலிருந்து அவர்களைக் காப்பது என துறுதுறு நடிப்பை வழங்கி ஜொலித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

வழக்கறிஞரின் மர்மக்கொலை வழக்கை விசாரணை செய்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க முயலும் நாயகன் சக்கரவர்த்தியாக கதிர் வருகிறார். சீரியஸான முகத்துடன், எடுத்துக்கொண்ட பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ’புலனாய்வாளர்’ கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். திருப்பங்களுக்கு மேல் திருப்பமாக நீண்டுகொண்டே செல்லும் வழக்கு விசாரணையை அவர் கையாளும் விதம் அருமை.

பிரபல வழக்கறிஞராக, பொதுநலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலராக செல்லப்பா என்ற கதாபாத்திரத்தில் லால் நடித்திருக்கிறார். அலட்டல் இல்லாத அனுபவ நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனோடு இணைந்து புலனாய்வு செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தியாக சரவணன் நடித்திருக்கிறார். கொலை வழக்கு விசாரணை போகும் போக்கில் அவநம்பிக்கை கொண்டவராக, அவ்வப்போது சிரிக்க வைப்பவராக வரும் அவர், இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத அவதாரம் எடுத்து திகைக்க வைக்கிறார்.

அஷ்டகாளிகளின் பெயர்களைத் தாங்கிய எட்டு பெண் கதாபாத்திரங்கள் இதில் வருகிறார்கள். முத்தாரம்மனின் சுருக்கமாக ‘முத்து’ என்ற பெயரில் வரும் கௌரி கிஷன், வீரகாளியம்மனின் சுருக்கமாக ‘வீரா’ என்ற பெயரில் வரும் ஷிரிஷா, முப்பிடாரியின் சுருக்கமாக ‘முப்பி’ என்ற பெயரில் வரும் மோனிஷா பிளெஸ்சி, உலகநாயகியின் சுருக்கமாக ‘உலகு’ என்ற பெயரில் வரும் கலைவாணி பாஸ்கர், அரியநாச்சியின் சுருக்கமாக ‘நாச்சி’ என்ற பெயரில் வரும் சம்யுக்தா விஸ்வநாதன், செண்பகவள்ளியின் சுருக்கமாக ‘செண்பகம்’ என்ற பெயரில் வரும் அபிராமி போஸ், சந்தனமாரியின் சுருக்கமாக ‘சந்தனம்’ என்ற பெயரில் வரும் நிகிலா சங்கர், ‘காந்தாரி’ என்ற பெயரில் வரும் ரினி ஆகிய எட்டு பேரும் ‘தற்கால அஷ்டகாளிகளாக’ கவனம் ஈர்க்கிறார்கள்.

ரவியாக வரும் கயல் சந்திரன், அவரது மனைவி நாகம்மாவாக வரும் மஞ்சிமா மோகன், பிரியம்வதாவாக வரும் சாந்தினி தமிழரசன், வழக்கறிஞர் செல்லப்பாவின் மனைவி மாலதியாக வரும் அஸ்வினி நம்பியார், மகனாக வரும் அமித் பார்கவ், கார் டிரைவராக வருபவர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பெண் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தையும், அதற்கான ரகசிய நெட்வொர்க்கையும் அம்பலப்படுத்தும் விழிப்புணர்வு நோக்கம் கொண்ட இந்த ‘சுழல் 2’ இணையத் தொடருக்கு இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அற்புதமாக திரைக்கதை எழுத, பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்கள். கிரைம் திரில்லர் கதையில் அஷ்டகாளிகள் கதையையும், திருவிழாவையும் அர்த்தம் உள்ள வகையில் இணைத்திருப்பது சிறப்பு. ஒரே சிட்டிங்கில் எட்டு எபிசோடுகளையும் மொத்தமாக பார்த்து ரசிக்கலாம் என்பது இதன் சிறப்பு.

ஆபிரகாம் ஜோசப்பின் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ்சின் இசை, ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநர்களின் கதை சொல்லலுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘சுழல் 2’ – அமேசான் பிரைமில் கண்டு களிக்கலாம்!

ரேட்டிங்: 3.5/5