“கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார் மோடி!”
“எல்லோரும் சொல்வதைப் போல, இந்த நடவடிக்கையால் முழுமையாக கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது அல்லது அரைகுறையாகத் தான் முடியும் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய சார்பில், அவர்களுடைய அரசான இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம். மக்கள் கையிலிருக்கிற சேமிப்பு, உழைத்து சம்பாதித்த பணம் இவற்றையெல்லாம், யார் கருப்புப் பணத்தை உருவாக்குகிறார்களோ அந்தப் பெருமுதலாளிகளின் கையில் கொண்டு சேர்ப்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்” என்கிறார் தோழர் மருதையன். அவருடைய “எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பிலான உரையின் முதல் பாகம் இது:-
கருப்புப் பணத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கட்டுக்கட்டாகக் கட்டி இரும்புப் பெட்டிக்குள் போட்டு பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கிறார்கள்; கட்டிலுக்கு அடியில் மெத்தையில் வைத்துத் திணித்து தைத்து வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்களை மக்கள் மத்தியில் திரைப்படங்கள் உருவாக்கியிருக்கின்றன. திரைப்படங்கள் தோற்றுவிக்கும் இந்தக் கருத்தை மக்கள் மத நம்பிக்கைகளைப் போல ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ரஜினி நடித்த ‘சிவாஜி’ சினிமாவிலாவது கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு ஆடிட்டர்களையும், பணக்காரர்களின் வீட்டு வேலைக்காரர்களையும் கூப்பிட்டு, “உங்க ஐயா பணத்தை எங்கே ஒளிச்சு வெச்சுருக்காருன்னு சொல். இல்லையென்றால் உதைப்பேன்” என்று இயக்குநர் சங்கர் மிரட்டுவார். அடையாளம் காட்ட மறுத்தவனை ஆள் வைத்து உதைத்து வழிக்குக் கொண்டுவருவார். அந்த மாதிரி பிரதமர் மோடி, கருப்பு பணத்தை எப்படி ஒழிப்பது என்று இயக்குநர் சங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்.
பா.ஜ.க-வின் ஆடிட்டர் குருமூர்த்தியைக் கேட்டால் யார் யாரெல்லாம் கருப்புப் பண ஆடிட்டர்கள் என்பதை அவரே சொல்லி விடுவார். அந்த ஆடிட்டர்களை வைத்து கருப்புப் பண முதலைகளை அடையாளம் கண்டுபிடித்திருக்கலாம்.
அதை விட்டுவிட்டு கருப்புப் பணத்துக்கு எந்த விதத்திலும் சம்பந்தமேயில்லாத கோடிக்கணக்கான ஏழை மக்களின் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார் மோடி. இதனால் சில இடங்களில் மாரடைப்பினால் மக்கள் இறக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வணிகர்களுக்கும், சாதாரண மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இது தாங்ககொணாத் துயரத்தை அளித்திருக்கிறது.
இருந்தபோதிலும், “கருப்புப் பணம், கள்ள நோட்டுக்கள் இந்த நாட்டிலிருந்து ஒழியுமென்றால் அதற்காக இந்தத் துன்பத்தை நாங்கள் சகித்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஒரு நல்ல நோக்கத்திற்காக நம்முடைய பிரதமர் நடவடிக்கை எடுத்தியிருக்கிறார். இருந்தாலும் மக்களுக்கு இவ்வளவு துன்பம் தராமல் செய்திருந்தால் இதை வரவேற்றிருப்போம்” என்ற வகையில்தான் மக்களிடையே கருத்து நிலவுகிறது அல்லது ஊடகங்களால் அப்படித்தான் கருத்து உருவாக்கப்படுகிறது.
உண்மையிலேயே இது கருப்புப் பணத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையா? என்பதுதான் எங்களுடைய கேள்வி.
எல்லோரும் சொல்வதைப் போல, இந்த நடவடிக்கையால் முழுமையாக கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது அல்லது அரைகுறையாகத் தான் முடியும் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை.
இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய சார்பில், அவர்களுடைய அரசான இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம். மக்கள் கையிலிருக்கிற சேமிப்பு, உழைத்து சம்பாதித்த பணம் இவற்றையெல்லாம், யார் கருப்புப் பணத்தை உருவாக்குகிறார்களோ அந்தப் பெருமுதலாளிகளின் கையில் கொண்டு சேர்ப்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்.
கருப்புப் பணத்தை, இந்த நடவடிக்கையால் ஒழிக்க முடியும் என்று சொல்பவர்கள் அல்லது நம்புபவர்கள் அது எப்படி என்பதை விளக்க வேண்டும். இது ஏன் கருப்புப் பணத்தை ஒழிக்காது என்பதை விளக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மோடி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையைப் போலத் தெரிகிறது. ஆனால் உண்மையில் அதுவல்ல.
இது தோற்றுப்போன மோடி அரசு எடுத்திருக்கும் அரசியல் நடவடிக்கை. 2014 தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோடி அளித்த வாக்குறுதிகள் பல. உலகத்திலேயே எந்த அரசியல் தலைவனும், டொனால்ட் ட்ரம்ப் போன்ற கேடுகெட்ட அரசியல் தலைவன் கூட அளித்திடாத வாக்குறுதியை மோடி அளித்தார். நான் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் போடுவேன் என்று மோசடியாக வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்று கேட்டபோது ”அது சும்மானாச்சுக்கும் எலெக்சனுக்காக சொன்னது” என்று பதிலளித்தார் அமித் ஷா. அந்த அளவிற்கு நேர்மையோ நாணயமோ இல்லாத அரசு இது.
மோடி பல நம்பிக்கைகளை உருவாக்கினார். வேலை வாய்ப்பை உருவாக்கப் போகிறேன், விலைவாசியை குறைக்கப் போகிறேன் என்று அளந்து விட்டார். வளர்ச்சி தான் என்னுடைய ஒரே கொள்கை என்று பேசினார். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, சிட் டவுன் இந்தியா , டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் என்று ’பஞ்ச டயலாக்’ திட்டங்களை அறிவித்தார். அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றினார். வானொலியில் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் இரண்டாண்டுகள் தாண்டிய பிறகும் இன்னதை சாதித்தேன் என்று சொல்லிக் கொள்ளும்படியாக மோடியால் எதையும் கூற முடியவில்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான் மிச்சம்.
இந்த சூழ்நிலையில் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பது தான் மோடி அரசின் முன்னால் இருக்கின்ற கேள்வி. மோடி அரசு இதற்காகத் தொடர்ந்து இரண்டு முறைகளைக் கையாள்கிறது. பொதுமக்களுடைய கருத்தை இரண்டு துருவங்களாகப் பிரித்து மோத விடுவது. ஒரு எதிரியை உருவாக்கி அவன்தான் நாட்டு மக்களின் எதிரி என்று காட்டுவது. அவர் எதிரியா, இல்லையா என்பது பற்றி நாட்டு மக்களிடம் விவாதம் நடக்கும். இதுதான் தேசம் சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று ஒரு பிரச்சினையை அவர்கள் எழுப்புவார்கள். அதுகுறித்து ஆம், இல்லை என்று விவாதம் நடக்கும்.
பா.ஜ.க என்ற கட்சியே அப்படித்தான் ஆட்சிக்கு வந்தது.. இராமன் அயோத்தியில் தான் பிறந்தான். எனவே மசூதியை இடித்து கோயில் கட்டியே தீருவோம் என்றனர். இதற்கு எதாவது ஆதாரம் இருக்கின்றதா? அது மக்களிடையே விதைக்கப்பட்ட ஒரு மத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வைத்து தேசம் முழுவதையும் இரண்டு கூறுகளாகப் பிளந்து, மதக்கலவரங்களை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பான்மை இந்து மதவெறியைத் தூண்டித்தான் ஆட்சிக்கு வந்தார்கள்.
இப்போது மோடி வந்ததில் இருந்து என்ன நடக்கிறது? பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் அனுப்பபடுகிறார்கள், அதனால் தான் காசுமீர் பிரச்சினை என்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறதா என்றால், ஆமாம், அனுப்புகிறது. ஆனால் அதுதான் காசுமீர் பிரச்சினைக்குக் காரணமா என்றால், இல்லை.
எல்லோருக்கும் பொருந்துகிற சட்டத்தை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தலாக் தலாக் என்று மூன்றுமுறை சொன்னால் மணவிலக்கு என்று சொல்கின்றனர். இப்படி இசுலாமிய மதவாதிகள் பேசுகிறார்களா, இல்லையா என்றால் ஆமாம் பேசுகிறார்கள். ஆனால் மதரீதியான சட்டங்கள் ஏற்றத்தாழ்வுகள், சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இந்துக்களிலும் இருக்கிறதா இல்லையா? ஆனால் இசுலாமியர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி அதன் மீது ஒரு விவாதத்தை தொடங்குகிறார்கள். அடுத்ததாக இப்போது கருப்புப் பணம். கருப்புப் பணம் என்பது இன்னொரு இராம ஜென்ம பூமி.
கருப்புப் பணம் யார் வைத்திருக்கிறார்கள் என்பது இந்த அரசாங்கத்திற்கு தெரியாதா? இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டுக்கு தெரியாதாம். என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்டுக்கு தெரியாதாம். மோடிக்கும் தெரியாதாம். ரூ.1000-யும் ரூ.500-யும் முடக்குவதன் மூலம், அதாவது கொக்கு தலையில் வெண்ணை வைத்து கருப்புப் பணத்தை பிடிக்கப் போகிறார்களாம்!
மோடியின் ஸ்வச் பாரத்துடன் இதை ஒப்பிடலாம். திடீரென்று மோடி துடைப்பதுடன் கிளம்பினார். உடனே ஷாருக்கான், கமலஹாசன் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் துடைப்பத்தை எடுத்தார்கள். இந்தியா தூய்மையாகி விட்டதா?
இந்தியாவின் தலைநகரத்தில் பிள்ளைகளை பள்ளிகூடத்துக்கு அனுப்ப வேண்டாம்; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. காரணம், சுற்றுசூழல் மாசு. தூய்மை இந்தியா என்று துடைப்பத்தை எடுத்தாரே மோடி. ஏன் டெல்லி தூய்மையாகவில்லை?
“கார்கள், வாகனங்கள் உருவாக்கிய புகையை, ஆலைகள் உருவாக்கிய புகையை எவனாவது துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்ய முடியுமா? முடியாது. புகையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் கார்களை தடுக்க வேண்டும், குறைக்க வேண்டும். அல்லது மாசு ஏற்படுத்தும் ஆலைகளை அப்புறபடுத்த வேண்டும். ஆட்டோமொபைல், கார்கள் விற்பனையை அதிகரிப்பதுதான் மோடியின் கொள்கை. எப்படி துடைப்பத்தை வைத்து புகையைச் சுத்தம் செய்ய முடியாதோ அது போல 500 ,1000 ரூபாய் நோட்டுக்களைத் தடை செய்து கருப்புப் பணத்தை ஒழிப்பதும் முடியாது.”
கருப்புப் பணம் என்றால் என்ன? முறைகேடான தொழில்களில் சேர்த்த பணம் கருப்பு பணம். அது ஒரு வகை. முறையாகத் தொழில் செய்பவர்களும் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். அந்த வரி ஏய்ப்பு செய்த பணமும் கருப்புப் பணம்.
முறைகேடு என்று எடுத்துக்கொண்டால் இலஞ்சம் வாங்குவது. அதிகாரிகள் இலஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கின்றனர். அதுபோல அரசியல்வாதிகளிடமும் கோடிக்கணக்கில் பணம் இருக்கின்றது. அவர்களெல்லாம் வைத்திருக்கும் கருப்புப் பணத்தில் 30% வருமான வரி கட்டிவிட்டால் அது வெள்ளையாகிவிடுமாம்.
கிட்டத்தட்ட 65,000 கோடிக்கும் மேல் கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறோம் என்று மோடி அரசு அறிவித்திருக்கிறது. 65,000 கோடி அரசாங்கத்தின் கைக்கு வந்துவிட்டதாக பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சில நூறு பேர் தாங்கள் வைத்திருந்த 65,000 கோடிக்கு வரியையும் அபராதத்தையும் கட்டியிருக்கிறார்கள். அரசுக்கு 28,000 கோடி வரி வந்திருக்கிறது. அவ்வளவுதான்.
“எப்படி சம்பாதித்தீர்கள் என்று கேட்க மாட்டோம். வரியை மட்டும் கட்டி விடுங்கள்” என்று கருப்புப் பண பேர்வழிகளின், அவர்கள் காலில் விழாத குறையாகக் கெஞ்சித்தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 65000 கோடி என்பது கஞ்சா விற்ற காசா, இலஞ்சம் வாங்கிய காசா என்பதை ஐ.டி. டிபார்ட்மென்ட் விசாரிக்கவில்லை.
ஆனால் பாமர மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கருப்பு பண பேர்வழிகள் 500, 1000 த்தை வங்கியில் கொடுத்தால் சிக்கிக் கொண்டுவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல, வரி கொடுத்தால் எல்லாக் குற்றங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.
ஜெயலலிதா வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. “அந்தப் பணத்திற்கு நான் வரி கட்டிவிட்டேன்” என்பதுதான் நீதிமன்றத்தில் அம்மா சொன்ன விளக்கம். ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஒருவர் அந்த வருமானம் எப்படி வந்தது என்பதை சொல்லியாக வேண்டும். அதனால்தான் ஜெயாவின் வாதம் எடுபடவில்லை.
ஆனால் இந்த விதி மற்ற கருப்புப் பண முதலைகளுக்குப் பொருந்தாது. கருப்பை வெள்ளையாக்கும் மோடி அரசு உள்ளிட்ட எல்லா அரசுகளும் எனக்கு வரியை மட்டும் கொடுத்துவிடு. உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று சொல்லித்தான் கருப்பை வெள்ளையாக்குகின்றனர்.
500, 1000 ரூபாய் செல்லாது என்று இரவு 8:30 மணிக்கு மோடி அறிவித்த பிறகு விடிய விடிய சென்னை உள்ளிட்ட அனைத்து இந்திய நகரங்களிலும் நகைக் கடைகள் திறந்திருந்தன. இன்னொரு பக்கம் ஏ.டி.எம்-ல் மக்கள் கூட்டம். நாளைக்கு சோற்றுச் செலவுக்கு 400 ரூபாய் கிடைக்குமா என்று. ஒரே இரவில் கிராமுக்கு ரூ.1500, ரூ.2000 என தங்கம் விலை ஏறுகிறது. கருப்புப் பணத்தை பிடிப்பது தான் இந்த அரசாங்கத்தின் நோக்கமென்றால் நகைக்கடைக்கு வந்தவனையெல்லாம் அப்படியே வளைத்துப் பிடிக்க வேண்டியது தானே.
கருப்புப் பணத்தை காகிதப் பணமாக வைத்துக் கொள்ளாதீர்கள். தங்கமாக வாங்கி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்; சொத்தாகவோ, ரியல் எஸ்டேட்டாகவோ ஷேராகவோ வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் காகிதப்பணமாக மட்டும் வேண்டாம் என்கிறது மோடி அரசு.
மோடி தன் உரையிலேயே சொல்கிறார். பணப்பொருளாதாரத்தை ஒழித்து அனைவரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டுவரப் போகிறேன் என்கிறார். கருப்புப் பணம் தொடர்பான ஆய்வுகள் என்ன சொல்லுகின்றன. வங்கிப்பொருளாதாரத்தை தங்களுடைய பொருளாதார நடவடிக்கைக்கு அடிப்படையாக வைத்திருக்கும் மிகப்பெரிய தரகு முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்கள்தான் கருப்புப் பணத்தினுடைய மிக முக்கியமான இருப்பிடம் என்று சொல்கின்றன.
இதே பா.ஜ.கவினர் முன்னர் சொன்னார்களே, அந்த 70 இலட்சம் கோடி கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது யார்? உள்ளூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், இலஞ்ச ஊழல் பேர்வழிகளுமா? சிலர் அப்படி இருப்பார்கள். ஆனால் மிகப்பெரும்பான்மையாக இந்த கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் இந்த நாட்டினுடைய மிகப்பெரிய தரகு முதலாளிகள் டாடா, அதானி, அம்பானி.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தில் உருவாகிறது. அதை உருவாக்குபவர்கள் இவர்கள் தான். எனவே வங்கிகளின் மூலம் உருவாகும் கருப்புப் பணம் என்பதுதான் முதன்மையானது. ரூ.500, ரூ.1000 – ஆக மாற்றி தேர்தல் நேரத்திலே விநியோகிப்பது, அல்லது மற்ற செலவுகளுக்குக் கருப்புப் பணமாகப் பயன்படுத்துவது என்பதெல்லாம் ஒரு கொசுறு.
அப்படிப்பட்ட கருப்பு பணம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானது. முக்கியமான குற்றவாளிகள் யாரோ, இந்தக் கருப்புப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்கள் யாரோ, அவர்களைப் பற்றி எந்த ஊடகமும் பேசுவதில்லை. ஏனென்றால் எல்லா ஊடகங்களும் அவர்கள் கையில் இருக்கிறது. மோடியும் பேசுவதில்லை. ஏனென்றால் மோடி அவர்கள் பையில் இருக்கிறார். கருப்புப் பண முதலைகளில் மிக முக்கியமானவரான அதானி, அவருடைய சட்டைப்பையில் இருக்கும் மோடி, கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறாராம். நம்மை நம்பச் சொல்கிறார்.
இந்த மையமான விடயத்திலிருந்து திசைதிருப்பவே கருப்புப் பணத்தோடு கள்ளநோட்டையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் மோடி. பாகிஸ்தானிலிருந்து ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகளை அடித்து விடுகின்றனர். அது கணிசமான அளவிற்கு இந்தியப் பொருளாதாரத்தில் ஊடுருவியிருக்கின்றது. அதை ஒழிக்க வேண்டுமென்றால் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கவியலாதவை என்று பாஜகவை சார்ந்தவர்கள் வாதாடுகின்றனர். கள்ள நோட்டுக்களை ஒழிப்பது தான் இவர்கள் நோக்கம் என்றால், மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம். உங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து புதிய நோட்டுக்களை வாங்கிக்கொள்ளுங்கள்; அப்படி செய்யவில்லையென்றால் நீங்கள் வைத்திருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவையாகிவிடும்” என்று சொல்லியிருக்கலாம்.
இது ஒன்றும் புதியதல்ல, முன்பு ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த இரகுராம் ராஜன், 2005-ம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூ.500 நோட்டுக்களை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவித்தார். கள்ள நோட்டைப் பிடிப்பதுதான் நோக்கம் என்றால் அப்படி செய்திருக்கலாம். அப்படியே வைத்துக்கொண்டாலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அடிக்கத் தெரிந்தவர்களுக்கு இந்தப் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களையும் அடிக்க முடியாதா என்ன?
இதற்கு பாஜக கட்சியினர் ஒரு பதில் வைத்திருக்கின்றனர். புதிய 2000 ரூபாய் நோட்டில் கம்ப்யூட்டர் சிப் (Chip) பொருத்தப்பட்டுள்ளதாம், அதனால் அதை வானத்திலிருந்தே பார்த்து எங்கே இருக்கின்றதென்பதைக் கண்டுபிடிக்க முடியுமாம்.
”உலகத்தில் இதுவரை யாருமே இப்படி ஒரு தொழில்நுட்பத்தில் நோட்டு அடிக்கவில்லை, வதந்தியை நம்பவேண்டாம்” என்று ரிசர்வ் வங்கியே சொன்ன பிறகும் தொலைக்காட்சியில் பேசக்கூடிய பாஜக-வின் உண்மை விளம்பிகள் “ரூ.2000 நோட்டில் சிப் இருக்கிறது” என்று துணிந்து பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.
வேறு ஒரு கேள்வியும் எழுகிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கு கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகிப்பதைத் தவிர வேறு வழியில்லையா என்பது தான் அந்தக் கேள்வி. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இருக்கட்டும். பார்ட்டிசிபேட்டரி நோட்(Participatory Note) என்றொரு நோட்டு இருக்கிறது. அது ரூபாய் நோட்டு அல்ல.
அந்த நோட்டில் தாவூத் இப்ராஹீம், ஹஃபீஸ் சையது அல்லது பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ போன்ற யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதிலே யார் முதலீடு செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கக்கூடாது என்பது தான் அதிலிருக்கக்கூடிய முக்கியமான முதல் விதி. அதை பாகிஸ்தானிலிருந்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நியூயார்க்கிலோ, வாஷிங்டனிலோ, இலண்டனிலோ அல்லது பாரீசிலோ அந்தப் பணத்தை முதலீடு செய்யலாம். வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors) வாயிலாக இந்தியாவில் இருக்கக்கூடிய BHEL அல்லது BSNL போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலோ அல்லது அம்பானி, அதானி நிறுவனங்களிலோ மூலதனம் போட முடியும்.
யார் அந்தப் பங்குகளை வாங்குகிறார்கள் என்று கேட்பதற்கான அதிகாரம் மோடி அரசுக்குக் கிடையாது. இப்படி அனாமதேயமாக மொட்டைக்கடுதாசியைப் போல யார் போடுகிறார்கள் என்றே தெரியாமல், அவன் கஞ்சா விற்பவனாக இருந்தாலும், விபச்சாரம் செய்பவனாக இருந்தாலும், ஆயுதக் கடத்தல் பேர்வழியாக இருந்தாலும் பாகிஸ்தான், அமெரிக்க உளவாளியாக இருந்தாலும், யார் வேண்டுமானாலும் இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய முடியும், அதை அரசாங்கம் சோதிக்க முடியாது என்ற ஒரு ஏற்பாட்டைச் செய்தது யோக்கியர் என்று பெயர் பெற்ற வாஜ்பாயியின் ஆட்சி. அவர் காலத்தில் தான் இந்த பார்ட்டிசிபேட்டரி நோட் என்ற மொட்டைக்கடுதாசி முதலீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைக்கும் இது அமலில் இருக்கிறது. “ தாவூத் BHEL-லிலோ, BSNL-லிலோ, கோல் இந்தியாவிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்திருப்பார். அவற்றிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகையையோ (டிவிடெண்ட்) அல்லது விற்றுக் கிடைக்கக் கூடிய வெள்ளைப் பணத்தையோ தீவிரவாதிகளுக்கு வினியோகிப்பது சுலபமா? இல்லை, பாகிஸ்தானில் ஒரு அச்சகம் வைத்து அங்கே ரூ.500 மற்றும் சிப் பொருத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை அச்சடித்து, மூட்டையாகக் கட்டி, கழுதையின் முதுகில் ஏற்றி அதனை இமயமலையில் ஏற்றி அதற்குக் காவலாக இரண்டு தீவிரவாதிகளைப் போட்டு மலையின் மறுபக்கம் கொண்டுவந்து இந்திய பார்டர் செக்யூரிட்டி ஃபோர்சையும், கம்பிவேலிகளையும் தாண்டி, மூட்டைகளை இந்தப் பக்கம் தூக்கிப் போட்டு, இங்கேயுள்ள தீவிரவாதிகளிடம் பிரித்துக்கொடுத்து, அப்புறம் குண்டு வெடிக்கச்செயவது சுலபமா?
யாரிடம் கதை சொல்கிறார்கள் இவர்கள்? போதைமருந்து வியாபாரிகள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள், கருப்புப் பண முதலைகள் வரையில் எல்லா அயோக்கியர்களும் அடையாளம் தெரியாமல் முதலீடு செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பது உங்கள் அரசு. அப்படி வருகின்ற அந்நிய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க அதையே தன்னுடைய சாதனையாக மோடி சொல்லிக் கொள்கிறார். அதாவது கருப்புப் பணம் உள்ளே வருவதைத் தான் வளர்ச்சி என்று சொல்லுகிறார். ஆனால் இங்கே கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகவும், அதைப் பூமிக்கடியில் டிரங்குப் பெட்டிகளில் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் நமக்குக் காதிலே பூ சுற்றுகிறார் மோடி.
– தொடரும்
Courtesy: vinavu.com