நீதிபதி கர்ணனுக்கு மனநிலை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொல்கத்தா அரசு மருத்துவமனையில் இச்சோதனையை நடத்துமாறு உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டு உள்ளது. இதில் கடும் கோபம் அடைந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முடிவு வழக்கத்துக்கு விரோதமானது, கேலிக்கூத்தானது என்று சாடியுள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக பரபரப்பு ஊழல் புகார்களை வெளியிட்டதோடு பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பினார்.
இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகாததால், அவரை நேரில் ஆஜர்படுத்தும்படி மேற்குவங்க போலீஸ் டிஜிபி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகளும் தன் முன் ஆஜராக வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளும் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார் நீதிபதி கர்ணன்.
இதனையடுத்து, இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு வரும் 4-ம் தேதி நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தி 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்த தலைமை நீதிபதி, “கர்ணனை சமாளிக்க வேண்டும் இல்லையென்றால் நீதித்துறை தனது பெருமையை இழக்க தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், “நானா மனநிலை சரியில்லாதவன்? எனக்கு மனநோய் இருப்பதாக தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யார்? என்னுடைய வழக்கை விசாரித்து வரும் 7 நீதிபதிகளும் ஊழல்வாதிகள். எனவே என்னுடைய சம்மதம் இல்லாமல் டிஜிபி செயல்பட்டால் நான் அவருக்கு எதிராக உத்தரவு வழங்குவேன். அவர் தன் வரம்புக்குட்பட்டு செயல்பட வேண்டும். எந்த சிகிச்சை உத்தரவுக்கும் அடிபணிய மாட்டேன். பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் மற்ற ஊழல் நீதிபதிகளை இந்த 7 நீதிபதிகளும் காக்கின்றனர். இந்த தவறான உத்தரவு செயல்படுத்தப்பட கூடாதது. டிஜிபி என்னிடம் வரக்கூடாது” என்றார்.