‘கோச்சடையான்’ கடன் விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர், ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் ரூ.14 கோடியே 90 லட்சம் கடன் வாங்கியிருந்தார். முரளி மனோகர் தாக்கல் செய்த இதற்கான ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்துப் போட்டிருந்தார். சில சொத்துகளின் ஆவணங்களை தாக்கல் செய்தார்.
கடன் தொகையில் 8 கோடியே 70 லட்சம் ரூபாயை மட்டுமே தயாரிப்பாளர் முரளி மனோகர் திரும்ப அளித்தார். மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முரளி மனோகர் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது நிதி மோசடி புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆட் பீரோ நிறுவனம், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று ஆட் பீரோவின் மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து, தவறான ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனம் உருவாக்குதல் போன்ற காரணங்களால் லதா ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடன் வழங்கிய ஆட் பீரோ நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, வழக்கு தொடர்பாக லதா ரஜினிகாந்த் 4 வாரத்துக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.