“கேப்டனையும் சேர்த்து பலம் பெற்றிருக்கிறது மக்கள்நல கூட்டம்!”

விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி கூட்டு சேர்ந்திருப்பதை ஒரு சாரார் நல்ல முடிவாக பார்க்கிறார்கள். வரவேற்கிறார்கள். அவர்களில் சிலரது கருத்துக்கள் இங்கே:-

# # #

துரை அரசு: மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க. தேர்தல் உடன்பாடு கொண்டுள்ளதை பேசிப் பேசி மாய்கிறார்கள் எல்லாக் கட்சிக்காரர்களும். இடதுசாரிகளுக்குள்ளும் பலருக்கு அது அதிர்ச்சி, பலருக்கு ஆச்சர்யம். காத்திருந்த தி.மு.க.காரர்கள் ‘கேப்டன் நலக் கூட்டணி’ என்ற சொற்றொடரின் முதல் எழுத்துக்க்ளை சேர்த்து ஒரு கெட்ட வார்த்தையை உருவாக்கி இணையத்தில் பரப்பி மகிழ்கின்றனர். அற்புதமான உளவியல்!

என்னைப் பொறுத்தவரை மக்கள் நலக்கூட்டணிக்கு இழப்பதற்கு ஏதுமில்லை. அவர்கள் காசு செலவு செய்யப்போவதில்லை. அவர்களிடத்தில் காசும் கிடையாது. ஆணவக் கொலைகளுக்கு எதிராகப் பேசுவதால் அவர்களுக்கு ஜாதி ஓட்டுக்க்ள் ஏதும் விழப்போவதில்லை. விஜயகாந்தை முதல்வர் ஆக்குவதால் அவர்களுக்கு யாரும் கமிஷன், காண்ட்ராக்ட் தரப்போவதில்லை. ஆக, குறுகிய லாபத்துக்காக இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்பதை இடதுசாரி தோழர்களும் நடுநிலைப் பார்வையாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

தி.மு.க.வும் வேண்டாம், அ.இ.அ.தி.மு.கவும் வேண்டாம் என்று நிலை எடுக்கும்போது ஒத்த அலைவரிசை கொண்டோர் ஒருங்கிணைந்தனர். அதுதான் மக்கள் நலக்கூட்டணி. அது தேர்தலை சந்திக்கும்போது கூடுதல் பலம் தேவைப்படுகிறது. எனவே மேற்கண்ட இரு கட்சிகளையும் சாராத கட்சிகளையே கூட்டணிக்கு அழைக்க வேண்டும்.

அப்படிப் பார்க்கும்போது இருக்கும் வாய்ப்பு தே.மு.தி.க., த.மா.கா போன்ற கட்சிகளே. பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டு இல்லை என்பது கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஜாதி அமைப்புகளுடன் கைகோர்க்க வேண்டியதில்லை. அது கொள்கைக்கே விரோதம்.

இந்த சூழலில்தான் தே.மு.தி.க.வுக்காக பொறுமையாகக் காத்திருந்தது மக்கள் நலக்கூட்டணி. ‘பழம் நழுவிப் பாலில் விழ’ ஒரு பெருந்தலைவர் காத்திருக்கையில் இன்று கேலிக்காரர்களின் பார்வையில் “ஒன்றுக்குமே உதவாத, வீணாய்ப்போன நான்கு முதியவர்கள்” காத்திருந்ததில் என்ன பிழை இருக்கிறது?

கடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து, பின்னர் எதிர்க்கட்சியாக மாறி, முறைத்துக்கொண்டது என்பதெல்லாம் தே.மு.தி.க.வின் கசப்பான கடந்தகாலம். அதனால்தான் இரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டு வைக்க வேண்டியதில்லை என்பதில் தெளிவாக இருந்தார் விஜயகாந்த். அதனால்தான் தனித்துப்போட்டி என்றுகூட முடிவெடுத்தார்.

ஒரு கட்டத்தில் தனது முடிவு கட்சிக்கும் சேதாரத்தை தரும் என்பதுடன் எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறிபோகும் என்பதாலும் மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்திருக்கிறார்.

இதில் கிண்டல் செய்யவும் கெட்டவார்த்தை பேசவும் ஏதுமில்லை. இரு கட்சி ஆட்சிமுறைக்கு எதிராக இளைஞர்கள் யோசிக்கிறார்கள். அதுதான் இந்த கெட்ட வார்த்தை கும்பலுக்கு வயிற்றில் புளி கரைக்கிறது.

கம்யூனிஸ்டுகள் தடம் மாறிவிட்டனர் என்ற பழைய ரெக்கார்டு திரும்பவும் ஒலிபரப்பப்படுகிறது. சொந்த ஆதாயத்துக்காக அவர்கள் இதனைச் செய்தார்கள் என்றால் அதைச் சொல்பவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும். அதேபோல கம்யூனிஸ்டுகள் திராவிடக்கட்சிகளுடன் கொள்கையை அடகுவைத்துவிட்டு ‘சவாரி செய்து’ வாங்கிய சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும்.

லீலாவதியின் ரத்தம் தோய்ந்த பற்களோடும்,

இளவரசன், சங்கர், கோகுல்ராஜின் வாழ்வைச் சிதைத்த ஜாதி வெறியோடும்,

வி.பி.சிந்தனின் மண்டையைப் பிளந்து அதில் தெறித்த ரத்த முகத்துடனும்,

‘அவங்க பண்ணினப்போ நீங்க சும்மா இருந்தீங்க…நாங்க ஊழல் பண்ணினா மட்டும் கேட்கறீங்க’ என்று விளக்கம் பேசும் வாயுடனும்,

வரும் யாருக்கும் மக்கள் நலக்கூட்டணியைக் கேள்வி கேட்கும் யோக்கியதை இல்லை.

அவர்களைத்தவிர எவரும் எதுவும்  கேட்கலாம். தலைவர்கள் பதில் சொல்வார்கள்.

# # #

கோடங்கி: முடியாது என்றார்கள்…

தொடர்ந்து முயற்சிகள்…

முடிந்தது என்றார்கள்…

எங்களுடன் தான் என்றார்கள்…

பழைய நட்பு நாங்கள் மாறவில்லை
என்றார்கள்…

யாரும் இல்லை தனியே என்றார்…

நம்பிக்கை இருக்கிறது
என்றார்கள்…

அரசியல் குளம் ஏற்கனவே குறைந்த தண்ணீரில் சேறும் சகதியுமாய் இருக்க… ஆளாளுக்கு கலக்கினார்கள்.

குழம்பிய குட்டையில் முகம்பார்க்க முயற்சித்து தோற்றுப்போக…

தைரியமாய் கலங்கிய குட்டையில் கை கோர்த்து இறங்கிய மக்கள் நல கூட்டம்… தனியாக தடுமாறிய கேப்டனையும் சேர்த்து பலம் பெற்றிருக்கிறார்கள்.
பார்ப்போம்… இதே பலம் வருமா வெற்றி வலம் … என்று..!

# # #

தேனி கண்ணன்: ஒரு வழியாக தேர்தல் கூட்டணி முடிவாகி விட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியாகவும், நகைப்பாகவும் இருக்கலாம். ஆனால் விஜயகாந்த நிதானமாக நல்ல முடிவு எடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆண்டாண்டுகாலமாக திமுக, அதிமுக வந்து என்னவாயிற்று? மக்களை சந்திக்காத முதல்வரும், நாட்டில் நடக்கும் சீரியஸான விஷயங்களை கேள்வியாக கேட்டால் அதற்கு இலக்கியமாக பதில் சொல்லும் முதல்வரும் வந்து நாட்டை கெடுத்ததுதான் மிச்சம்.

புதிதாக ஒரு மாற்றம்தான் வரட்டுமே.

இதுவரைக்கும் கறைபடாமல் இருக்கும் விஜய்காந்த், வைகோ போன்ற தலைவர்கள் பொறுப்பிற்கு வந்தால் நல்ல மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கிறது.

தூய்மை இமேஜை அப்படியே தூக்கி திமுகவிடம் கொடுத்துவிட்டு அவர்களிடம் கைகட்டி நிற்காமல் வைகோவின் வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டதும், தன்னைவிட இளையவரை முதல்வராக அமரவைக்க வைகோ முன் வந்ததும் பதவி ஆசையில்லாத மனதை காட்டுகிறது. அதனால் மக்கள் நலனில் அக்கறையோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்துகிறது. அதனால் ஒரு முறை வாய்ப்புக்கொடுப்போம் மாற்றம்தான் வரட்டுமே.

# # #

ராஜசங்கீதன் ஜான்: திருமா ஏற்கனவே Power Sharing Alliance பற்றி பேசியிருந்தார். ஆனால் அதை திமுக பொருட்படுத்தவே இல்லை. தலித்களின் பிரிதிநிதித்துவம் அமைச்சரவைக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். அதிமுக சுத்தம். அதற்கு பிறகே மக்கள் நலக் கூட்டணி நேர்கிறது. மெல்ல அனைவரும் பதற்றம் அடைகிறார்கள். விளைவாக, மநகூவை பற்றி நேர்காணலில் கேட்டபோது துரைமுருகன் ஆணவத்தில் சிரிக்கிறார்.

மநகூ மாநாட்டுக்கு எதிர்பாராத கூட்டம் சேர்கிறது. பதற்றம் அதிகரிக்கிறது. கூட்டணி உடையும் என ஆரூடம் கூறுகிறார்கள். அறிவாலயம் கொடுக்கும் ஸ்கூப் நியூஸ்களை பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. இடையில் தேமுதிகவுக்காக காய்கள் நகர்த்தப்படுகின்றன. பழத்துக்கு குறி வைக்கப்படுகிறது. மநகூ அதிக பதற்றத்துடன் எள்ளி நகையாடப்படுகிறது. கடைசியில் யாரும் எதிர்பார்க்காவண்ணம் பழம் மநகூ கூடாரத்தில் விழுகிறது.

ஆண்ட பெருங்கட்சிகள் தனித்துவிடப்பட்டிருக்கின்றன. தேசிய கட்சிகள் காட்சியிலேயே இல்லை. இனி எதிர்வரும் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மநகூதான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். அப்போது திருமாவின் power sharing திட்டத்தை எவராக இருந்தாலும் ஏற்கத்தான் வேண்டியிருக்கும்.

ஆம், திருமா ராஜதந்திரி ஆகியிருக்கார்.

# # #

உமா கதிர்: விஜயகாந்த் அந்த பக்கம் சென்றுவிட்டதால் தேர்தல் கூட்டணி ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்டது என்றே கருதலாம்.

இதில் யாருமே சேர்க்காமல் நட்டாத்தில் விடப்பட்ட பாஜக நிலைமையை நினைத்தால் பேருவகை ஏற்படுகிறது. அதிமுக அழைக்காது என்பது கணிப்பு.

கடைசி வரை பார்த்தசாரதிகளும், ராகவன்களும், அர்ஜுன்களும் எச்ச ராஜாக்களும் எதாவது நேரலையில் மட்டும் வடை சுட்டுக்கொண்டிருப்பார்கள் என்பதை நினைக்கும்போது…..

0a1d