அனேகமாக இந்தியா வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும்…!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து பாரத மாதாவின் பாதங்களில் இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்!

#
ஒரு வல்லரசு லவ்வர்
டயோட்டா கார் வைத்திருக்கிறார்
சாம்சங் மொபைல் வைத்திருக்கிறார்
சோனி எல்ஈடி டிவி வைத்திருக்கிறார்

அவரது ச்சேனல் அமெரிக்காவின்
சாகசங்களை வியக்கிறது
அவரது செய்தித்தாளில் தற்கொலை
செய்து கொண்ட
விவசாயிகளுக்கு இடமில்லை

அவருடைய பிள்ளையை சிலிகான் கூலியாக்கிவிட்டார்

அவர் சாப்பிடுவது அயல்தேச கோழி
குடிப்பதும் அந்நிய பானம்

அவர் ஒரு புறா வளர்க்கிறார்
அது நியூட்ரான்
தானியங்களைக் கொரிக்கிறது

அவர் காரின் கண்ணாடிகள்
சாத்தப்பட்ட பிறகு
அவருடைய இந்தியா
குளிர்கிறது இசைக்கிறது

அவருக்கு..
கூர்காக்கள் குரல்
கேட்கவில்லை
மலைவாழ்மக்கள் குரல்
கேட்கவில்லை
குஜராத் இஸ்லாமியர்கள்
ஓலம் கேட்கவில்லை

நாகர்கள் சத்தம் கேட்கவில்லை
தமிழர்கள் கதறல் விழவில்லை
மலமள்ளுபவர் முனகல்
அசைக்கவில்லை

அவருடைய இந்தியாவில்
டெண்டுல்கர் இருக்கிறார்
கலாம் இருக்கிறார்
அம்பானி அதானி இருக்கிறார்கள்
டோனி இருக்கிறார்
அமிதாப் இருக்கிறார்
உலக அழகிப் பட்டம்
வென்றவர்கள் இருக்கிறார்கள்

ராக்கெட்டுகள் விண்ணில்
பறக்கின்றன
எல்லையில் துவக்குகள்
ஓயாமல் முழங்குகின்றன
அணுப் பெருமிதங்களுக்கும்
குறைவில்லை

பிச்சைக்காரர்கள் இல்லாத
பைத்தியக்காரர்கள் இல்லாத
தீண்டத்தகாதவர்கள் இல்லாத
பட்டினிகிடக்கும் குழந்தைகள் இல்லாத
பாலியல் தொழில் புரிவோர் இல்லாத
சாலைகளில்
அவரது வாகனம் விரைகிறது

அவருக்கு தொந்தரவு தருபவர்கள்
யாராவது இருந்தால்
இந்தியாவின் போலீஸ்
நக்ஸலைட் என்றோ
அல்கொய்தா என்றோ
பெயர் வைக்கிறது

நம்முடைய வல்லரசு லவ்வர்

சுதந்திர தினத்தன்று
மூவர்ணக் கொடியை சட்டையில்
குத்திக் கொள்கிறார்

பயபக்தியோடு தேசியக்கொடியை
விண்ணில் பறக்கவிடுகிறார்

அவர் உடல் சிலிர்க்கிறது
பாரதியைப் பாடுகிறார்
காந்தியைப் புகழ்கிறார்

பகத்சிங் பெயரை
அம்பேத்கரையெல்லாம் மறந்தும் சொல்வதில்லை

எல்லோருக்கும்
இனிப்பை தருகிறார்

பாரதமாதாவுக்கு ஜெய்ஹிந்த்
சொல்கிறவர்

இரவு ஒரு ஃபாரின்
ஸ்காட்ச்சை திறந்து

நள்ளிரவில் வாங்கிய சுதந்திரத்தை
மீண்டும் கொண்டாடத் தொடங்குகிறார்

பிறகு..
போதையில் பொண்டாட்டியை
கட்டிப்பிடித்துக் கொண்டே
தூங்கிவிடுகிறார்

அனேகமாக அவர் கனவில்
இந்தியா வல்லரசாக
மாறிக்கொண்டிருக்கும்!

– கரிகாலன்