கலவியல் நட்சத்திரம் சன்னி லியோனை நேரில் காண அலைமோதிய கேரள ரசிகர்கள்!

கலவியல் வீடியோ படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், தற்போது இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருபவருமான சன்னி லியோன், செல்போன் ஷோ ரூம் ஒன்றை திறந்து வைப்பதற்காக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றிருந்தார்.

அவரை நேரில் பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனால், முற்பகல் 11.30 மணிக்கு நிகழ்ச்சிக்கு வரவேண்டிய சன்னி லியோன், சிரமத்துடன் கூட்டத்தை கடந்து, 12.30 மணிக்குத்தான் விழா நடைபெறும் இடத்தைச் சென்றடைந்தார்.

0a1d

கொச்சியில் பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சன்னி லியோன், “எனக்கு பேராதரவு தந்த கொச்சி மக்களுக்கு நன்றி. கடவுளின் தேசத்திற்கு நான் மேற்கொண்ட பயணத்தை ஒருபோதும் மறக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டத்திற்கு மத்தியில் தமது கார் செல்லும் படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ள சன்னி லியோன், “அன்பின் கடலில் நான் மிதந்து செல்லும் காட்சி” என அதனை வர்ணித்துள்ளார்.

கேரளாவில் அடூர் கோபாலகிருஷ்ணன் படங்களை ரசிப்பவர்களும் உண்டு, ஷகிலா படங்களை ரசிப்பவர்களும் உண்டு என்ற விவரம் தெரிந்தவர்கள், சன்னி லியோனுக்கு கூடிய கூட்டம் குறித்து அதிர்ச்சியடைய மாட்டார்கள்.