மெகா பட்ஜெட் படம்: நாயகனாக நடிக்க விஜய்யுடன் சுந்தர்.சி பேச்சுவார்த்தை!

‘அரண்மனை 2’ வெற்றிப்படத்தை தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்தின் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு சாபுசிரில் கலை இயக்குநராக பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை கமலக்கண்ணன் மேற்கொள்ள இருக்கிறார். இந்தியளவில் படத்தின் தயாரிப்பு செலவுகளில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோரோடு இப்படத்தின் கதையில் பணியாற்றி வருகிறார் சுந்தர்.சி. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராக இருக்கிறது.
இப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்துக்கு பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி. 250 நாட்கள் படப்பிடிப்பு என்பதால் பலரும் தயக்கம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் நாயகனுக்காக விஜய்யை சந்தித்து சுந்தர்.சி பேசியதாகவும், ஆனால் விஜய் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து விசாரித்தபோது, “விஜய் – சுந்தர்.சி சந்தித்தது உண்மை தான். ஆனால் விஜய் இன்னும் இப்படத்தை பண்ண முடியாது என தெரிவிக்கவில்லை. அதிக நாட்கள் படப்பிடிப்பு என்பதால் விஜய் யோசித்து வருகிறார். விரைவில் இருவரும் சந்தித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். இப்போதைக்கு விஜய் நடிக்கிறாரா, இல்லையா என்பதை தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்தார்கள்.